கடந்த 8ம் தேதி பங்குனி உத்திரம். அதிகாலை 1.30 மணியளவில்..
"ஏலே.. எழுந்திரு.. நேரமாயிடுச்சு. சீக்கிரம் கிளம்பு.. அப்பா ஏசிகிட்டுயிருக்கு. " அம்மா சொல்ல..
வேகமாக எழுந்து பல்துலக்கி, கடமைகளை முடித்துவிட்டு, வேஷ்டி, சட்டை அணிந்து 15 நிமிடத்தில் கிளம்பி விட்டேன்.
'அந்த வீட்டில் பழங்கள் இருக்கு போய் பஞ்சாமிர்தம் போடு. போ' அப்பா சொல்ல..
வேகமாக பக்கத்தில் எங்களுக்கு சொந்தமான இன்னொரு வீட்டிற்கு ஓடிப்போய் பழங்களை வெட்ட ஆரம்பித்தேன். மா, வாழை, மாதுளை, திராட்சை, அன்னாசி, கொய்யா, ஆப்பிள், ஆரஞ்சு, கற்கண்டு, தேன், பேரிட்சை போன்றவற்றை சேர்த்து ஒரு குவளை இட்டு கைகளால் கசமுசவென பிசைந்துவிட்டு 'பஞ்சாமிர்தம் ரெடி' என்றேன்.
அதற்குள் டாட்டா சுமோ வந்துவிட, 'சரி, சரி போய் வண்டியில் எல்லாவற்றையும் ஏற்று' என்று கமெண்ட் வந்தது. அனைத்து பொருட்களையும் வண்டியில் ஏற்றியதும் அப்பா, அம்மா, நான், என் மனைவியார், என் வாரிசு மற்றும் எனது நண்பர் ஒருவருடன் வண்டி கிளம்பும்போது சரியாக 2.45 இருக்கும். சரியாக இரண்டு மணி நேரம் பயணம். எங்களுக்கு சொந்தமான எங்கள் குலதெய்வமான ஆனைமேல் அய்யனார் (சாஸ்தா) கோவில் (பேச்சு வழக்கில் சாத்தான்கோவில்) வந்துவிட்டது.
(கேமரா கொண்டு போகாததால் சும்மா ஒரு இயற்கைக்காட்சி : ஆனா இது எங்க ஊருதான்..)
மிகப்பெரிய குளத்தின் கரையில் ஒரு பெரிய ஆலமரத்தின் விழுதுகளுக்கு நடுவே யானையின் மேல் கம்பீரமாக பயமுறுத்தும் மீசை, அரிவாளுடன் அய்யனார் அமர்ந்திருந்தார். அவரை சுற்றி கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல்வெளிகள். அதிகாலை நேரமேன்பதால் குளிர்காற்று அடித்துக் கொண்டிருந்தது. டாட்டா சுமோவை ஒரு வயல்வெளியின் ஓரத்தில் நிறுத்திவிட்டு அனைத்து பொருட்களையும் இறக்கி வைத்தோம். கருங்கல்லால் அடுப்பு தயார் செய்து பானை வைத்து 'பொங்கல்' வைக்க அம்மா தயார் ஆகினார். அபிஷேகத்திற்கு அப்பா தயாரானார். நானும் என் நண்பரும் நாங்கள் கொண்டுவந்த இரண்டு ஆடுகளை வதம்செய்ய தயாரானோம்.
அடுத்த ஒரு மணிநேரத்தில் அனைவரின் வேலைகளும் முடிந்துவிட, பால், மோர், தயிர், தேன், இளநீர், திருநீர், மஞ்சள், குங்குமம், சந்தனம், சவ்வாது, பஞ்சாமிர்தம் போன்றவற்றால் அய்யனார் குளித்து பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பொங்கல், அசைவம் படைக்கப்பட்டு அழகாக காட்சிக்கொடுக்க குடும்பத்தோடு வணங்கினோம். பிறகு அரைமணிநேரம் ஓய்வு எடுத்துவிட்டு பிறகு வந்ததைபோல் திரும்ப வீடு வந்தோம். மனதிற்கு நிறைவான ஒரு கோவில் பயணம்.
நாகரிக காலத்தில், இயந்திர வாழ்க்கையில் பலருக்கு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு செல்வதற்குக்கூட நேரமில்லை. தமிழகத்தின் தென்மாவட்ட மக்கள் எத்தனை கோவிலுக்கு சென்றாலும் எல்லோருக்கும் அவர்களுக்கென்று ஒரு கோவில் இருக்கும். அதுதான் சாஸ்தா கோவில். ஆயிரம் கடவுள்கள் இருந்தாலும் ஒருவனுடன் எந்த சூழலிலும் அவனுக்கு துணையாக அவன் மறந்தாலும், வராமலே போனாலும், அவன்கூடவே அவனுக்காகவும் அவன் குடும்பத்திற்காகவும் வாழ்நாள் முழுதும் துணைநிற்பது அவனது சாஸ்தா மட்டும்தான்.
.
13 comments:
your blog is very nice
ஊர் அழகாய் இருக்கே!
கோவில்கள் என்றுமே நிம்மதியை தருகின்ற அற்புதமான இடங்கள், அதுவும் பயணம் செய்து போகின்ற கோவில்கள் இன்னமும் அற்புதம்.
// நாகரிக காலத்தில், இயந்திர வாழ்க்கையில் பலருக்கு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு செல்வதற்குக்கூட நேரமில்லை. //
நிச்சயமாக உண்மை. ஊருல இருக்கும் பொழுது தினமும் எங்கள் ஊர் கோவிலுக்கு போயிட்டு வந்தேன், இங்க சென்னையில அந்த பழக்கம் அடியோடு மறந்து போயிடுச்சி.
நீங்க சொல்லுர சாஸ்தா கோவில் இராஜபாளயம் பக்கத்தில இருக்கிற இடமா? நான் அங்க போயிருக்கேன் ரொம்ப ரம்மியமான இடம்.
கோவில்கள் ஆன்மீகம் மட்டும் நிறைத்திருப்பதில்லை.. ஆழ்ந்துறங்கும் அமைதியையும் கொண்டிருப்பன.
எனக்கு பல கோவில்களுக்குச் சென்று அதன் கலையழகைக் காணவேண்டுமென்ற ஆவல் உண்டு!!!
(உங்க ஊருக்கு வந்தா ஒரு வாய் சோறு போடுவீங்கதானே??)
நல்ல பகிர்வு சார்.. அப்பரம் ஆதவா உங்கள் ஊருக்கு வந்தால் ஒரு வாய் சோறு போட்டுவிடுங்கள் பாவம்...
இந்த பதிவ படிச்சதும் வீட்டு ஞாபகம் வந்துடுச்சு...
அழகான மரங்கள்!
எந்த ஊரு அண்ணே...?
உண்மைதான் ராம். குலதெய்வம் கோவிலுக்கு போனாலே ஒரு தனி மகிழ்ச்சி தான்.
அங்கே போகும் போது, கோவிலுக்கு போகிறோம் என்ற உணர்வை விட நம் பரம்ப்ரை வீட்டிற்கு போகிறோம் என்பது போல ஒரு உணர்வு இருக்கும்.
நல்ல பதிவு ராம்
ஆஹா என்ன அழகான ஊர்.இந்த மாதிரி பகிர்வுகள் அழகாக செய்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு ராம்
குலதெய்வம் என்றால் நம் முன்னோர்கள்தான் நண்பா.. என்றும் நம்மோடு இருந்து நம்மைக் காப்பது அவர்கள்தான் என்பது நம்பிக்கை.. நல்ல பதிவு ராம்..
anna nalla pathivu unga ooru azaka iruku .
appram ஆதவா unga ooruku vantha oru vaai soru mattum podunga athkumelapodathenga anna ok
நன்றி ஷெனிபர்! முதல்முதலாக வந்துள்ளீர்கள்.
நன்றி கவின்! வருகையில் மகிழ்ச்சி!
நன்றி விஷ்ணு!திருநெல்வேலியிருந்து ராஜபாளையம் போகும் வழியில் உள்ளது.
நன்றி ஆதவா! ஒரு வாய் என்ன? ஓராயிரம் வாய்க்கும் சோறு போடுவேன்.
நீங்கள் எங்க ஊருக்கு வந்தால் ஒரு நாளில் என்னவெல்லாம் கிடைக்கும் என்று அடுத்து வரும் பதிவின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.
நன்றி ஆ.ஞானசேகரன்! வருகையில் மகிழ்ச்சி!
நன்றி ராஜேஸ்வரி! வருகையில் ஆனந்தம்.
நன்றி டொன்லீ! இந்தியா,தமிழ்நாடு,திருநெல்வேலி,பாப்பாக்குடி=இதுதான் எங்க ஊரு.ஒரு சிறிய கிராமம்.
நன்றி பிரேம்குமார்!வாழ்த்துக்கும் நன்றி!
நன்றி உமா!வருகையில் மகிழ்ச்சி!
வாங்க சக்தி!வருகைக்கு நன்றி.
நன்றி கார்த்திகைப் பாண்டியன்!
நன்றி காயத்ரி! நீங்களும் என் ஊருக்கு வாங்க..
Post a Comment