Wednesday, December 31, 2008

புத்தாண்டு..

உலகில் அனைத்து சக்திகளும் அடங்கிய ஒன்று,
அது நினைத்தால் எதையும் வெல்லும்,
யாராக இருந்தாலும் தன் வசப்படுத்தும்,
எல்லோரையும் கனிவாக சந்திக்கும்,
எச்சூழலையும் திற‌மையாக சந்திக்கும்...

அதுதான் உங்கள் மனசு....

அனைவரும் புத்தாண்டை புன்னகையுடன் வரவேற்ப்போம்!.

Sunday, December 28, 2008

நேர்மறையான கண்ணோட்டம்.!

மேரி என்னும் ஆசிரியை பள்ளிக்கூடம் ஆரம்பித்த முதலாவது நாள்
ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம் ஒரு பொய்யைச் சொன்னார். தான் அனைவரையும் ஒரே விதத்தில், நேசிப்பதாகச் சொன்னார்.
ஆனால் அது சாத்தியமில்லாமல் இருந்தது.
ஏனெனில் முதல் வரிசையில், ஜான் என்னும் சிறுவன் எதிலும் அக்கறையில்லாமல் இருந்தான். யாருடனும் விளையாடமலும்,உடைகள் அழுக்காகவும், பார்ப்பவர்கள் வெறுக்கும்படியாக இருந்தான்.
மேரி சிவப்பு மையினால் அவனுடைய விடைத்தாளில் 'F'(தோல்வி) என்று குறிப்பிடுவதில் உண்மையில் மகிழ்ச்சியடைந்தார்.

ஒரு நாள் ஒவ்வொரு குழந்தைகளின் முந்தைய வருடங்களின் குறிப்பேட்டை ஆய்வு செய்யவேண்டிருந்தது.அப்பொது ஜான் குறிப்பேட்டை பார்த்தபோது மேரி வியப்படைந்தார்.
ஜானின் குறிப்பேட்டில்...
முதல் வகுப்பு: ஜான் மிகவும் புத்திசாலி.சிரித்த முகத்துடன் இருப்பான். தன் வேலையை ஒழுங்காக செய்வான்.
இரண்டாம் வகுப்பு: ஜான் மிகவும் தலைசிற‌ந்த மாணவன்.வகுப்பு மாணவர்களால் விரும்பப்படுபவன்.
மூன்றாம் வகுப்பு: அவன் அம்மாவின் திடீர் மரணம் அவனைக் கடுமையாக பாதித்திருந்தது.அவனுடைய அப்பா அவன் மீது ஆர்வம் காட்டவில்லை. அதனால் அவன் மிகவும் பாதிக்கப்பட்டான்.
நான்காம் வகுப்பு: ஜான் மிகவும் விலகியே இருக்கிறான். அவன் படிப்பில் எந்த ஆர்வமும் காட்டவில்லை.
இப்போது மேரி பிரச்சனை என்ன என்பதை உணர்ந்தார். தன்மீதே ஒரு அவமான உணர்வு ஏற்பட்டது.
'கிறிஸ்துமஸ்' பரிசுகள் பல மாணவர்கள் கொடுத்தாலும் ஜான் கொடுத்த பழைய போலி வைர வளையலை தன் கையில் அணிந்துகொண்டு ஜானிடம் காட்டினார். "மேரி அவர்களே,என் அம்மா எப்படி மணம் வீசுவார்களோ அப்படியே நீங்களும் இன்று இருக்கிறீர்கள்" என்றான்.
அன்றைய தினத்திலிருந்து மேலோட்டமாக கற்றுக் கொடுப்பதை விட்டு விட்டு மாணவர்களுக்கு உண்மையாகவே கற்றுக்கொடுத்தார். ஜானின் மீது தனி கவனம் செலுத்தினார்.அவனுடைய மனம் புத்துயிர் பெற்ற‌து.ஜான் வகுப்பிலேயே சாமர்த்தியமான மாணவனான். ஆசிரியரின் செல்ல பிள்ளையானான்.

பல வருடங்கள் ஒடின...
ஆசிரியருக்கு ஜானிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் அவன் தான் உயர்நிலை பள்ளிப் படிப்பை முடித்து விட்டதாகவும், தன் வாழ்க்கையிலேயே இன்னமும் மேரி தான் மிகச்சிறந்த ஆசிரியர் என்றும் குறிப்பிட்டிருந்தான். இன்னும் சில வருடங்கள் ஒடின..
மற்றொரு கடிதம் வந்தது. தான் உயர் படிப்பு முடித்துவிட்டதாகவும், அவனுக்குக் கல்வி புகட்டிய ஆசிரியர்களில் மேரிதான் அவனுக்குப் பிடித்தமிகச்சிறந்த ஆசிரியை என்றும் எழுதி இருந்தான்.
அத்துடன் தான் ஒரு பெண்ணைச் சந்தித்தாகவும், அவளைத் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், மணநாள் அன்று மணமகனின் அம்மாவிற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அமர சம்மதம் கேட்டும் எழுதியிருந்தான்.
கடித முடிவில்.. ஜான்.எஃப்.ஸ்டோட்டர்டு.M.D. என்று கையெழுத்திடப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் மேரிக்கு கண்ணீர் பொங்கியது.

ஜான் பரிசாக தந்த அந்த போலி வைர வளையலை அணிந்துகொண்டு திருமணத்திற்கு வந்தார். இருவரும் ஒருவரையொருவர் கட்டி கொண்டனர். டாக்டர்.ஜான், மேரியின் காதில்.. "என்மீது ந்ம்பிக்கை வைத்ததற்கு மிக்க ந்ன்றி" என்றான். மேரி தன் கண்களில் கண்ணீருடன்.."ஜான். நீ எல்லாவற்றையும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய்.என்னாலும் வித்தியாசமாக மாற முடியும் என்பதை கற்றுக் கொடுத்தவனே நீதான்!." என்றார்.

"இன்றைக்கு யாராவது ஒருவர் இதயத்திற்கு இதமளியுங்கள். நீங்கள் எங்கு சென்றாலும்,எதைச் செய்தாலும், ஒரு நபரின் கண்ணோட்டத்தை உணரவோ,அதை மாற்றவோ உங்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது என்பதை நினைவு கொள்ளுங்கள்.அதை ஒரு நேர்மறையான வழியில் செய்ய முயலுங்கள்."

குறிப்பு: ராம் சந்த்ர மிஸன் வெளியீட்டுள்ள சகஜ தீபம் என்ற புத்தகத்தில் படித்தது.

Thursday, December 25, 2008

டிராபிக் ஜாம் குறைய..!

நேற்று: மாலை 05.50 மணியளவில், பெருங்குடி செல்வதற்கு நானும் என் சகோதரரும் காரில் சென்றோம். மத்திய கைலாஸ், ராஜீவ்காந்தி சாலையில் அவர் காரை செலுத்தினார். 500 மீட்டர் சென்றிருக்கமாட்டோம் பயங்கர டிராபிக். பலவித கருத்துக்களை பரிமாறிகொண்டே கார் ஊர்ந்தது. 20 நிமிடம் ஓடியது. கார் டைடல் பார்க் சிக்னலில் நின்றது. இந்த ஒரு சிக்னலுக்காக 20 நிமிடமா? என்றவாறே பின்புறம் எட்டி பார்த்தேன். ஏகப்பட்ட கார்கள் நின்றன. ஒவ்வோரு கார்களிலும் அதிகபட்சமாக ஓட்டுனர் மட்டுமே இருந்தனர். ஒரு நபருக்காக ஒரு கார் என்று எண்ணியபடியே எப்படியோ ஊர்ந்து சென்றோம்.


இன்று: வேலைக்கு செல்ல டூ வீலரில் வேகமாக புறப்பட்டேன். தேனாம்பேட்டை,அண்ணாசாலை சிக்னல் எனை மறித்தது. அப்போது அருகில் நின்ற காரை பார்த்தேன். அதில்.. ஓட்டுனர் மட்டும்...

'வாகனங்களுக்கு அதிகபட்ச நபர்கள்' என்று வரையறுக்கப்பட்டது போல குறைந்தபட்ச நபர்கள் என்று வரையறுக்கப்பட்டு மருதி800,சென்,ஸேன்ரோ போன்ற உருவத்தில் சிறியரக கார்களில் குறைந்தபட்சம் இரண்டு நபர்கள். சுமோ,குவாலிஸ்,இணோவா போன்ற உருவத்தில் பெரியரக கார்களில் குறைந்தபட்சம் நான்கு நபர்கள் என்று ஒரு சட்டம் கொண்டு வ‌ந்தால்தான் "டிராபிக்ஜாம்" குறையும் என்று யோசித்துக்கொண்டே பச்சைவிளக்கு அனுமதியுடன் வளைய நெளிய தொடங்கினேன். ஹிஹி..


குறிப்பு: நாங்கள் சென்றது ஆல்டோ கார்.என் சகோதரருக்கும் இது பொருந்தும்.

Saturday, December 20, 2008

சாம்பாரும் அவளின் கைமணமும்!

விசயத்திற்கு முன்னால் ஒரு சின்ன சமையல் குறிப்பை பார்த்துவிடலாம். முதலில் அடுப்பை பற்றவைத்து பாத்திரத்தை வைக்கவேண்டும்.வெட்டிவைத்த வெங்காயம் சிறிது,வெண்டைக்காய் சிறிது போட்டு வதக்கவேண்டும்.வதங்கியபின்னர் அதில் புளிகரைசலை ஊற்றி நறுக்கிவைத்த காய்கறிகளைப் போட்டு கொதிக்கவிடவேண்டும். கொதித்தவுடன், வெங்காயம்,தேங்காய்,சீரகம் போட்டு மிக்ஸியிலரைத்த கலவையை அதனுடன் சேர்க்கவேண்டும். பிறகு ஏற்கனவே தயார்நிலையில் உள்ள வேகவைத்த பருப்பை கடைந்து இதனுடன் சேர்த்து சிறிது மிளகாய்தூள்,மஞ்சள்தூள்,தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும்.கொதித்தபிறகு கருவேப்பிலை,கொத்தமல்லிஇலை போட்டு இறக்கிவிடவும். ' சூப்பரான சாம்பார் ரெடி!'.

இது எல்லோருக்கும் தெரியும். ஆனால்.. இதில் 'எக்ஸ்ராவாக' ஏதோ ஒன்று இருந்தால்தான் சாப்பிடவே முடிகிறது. சமையல் செய்வது என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். வாரத்தின் ஏழு நாட்களும் சாம்பார் என்றாலும் சளைக்காமல் சாப்பிடுவேன். 25ஆண்டுகளூக்குமேலாக என் அம்மா செய்த சாம்பார்தான் எனை வளர்த்தது. மூன்று ஆண்டுகளாக சென்னையில் நானும் தனியாக இருக்கும்போது சமைத்திருக்கிறேன். ஒரு தடவைகூட நான் எதிர்பார்த்த டேஸ்ட் இருந்ததில்லை.

இப்போது "என்னவள்" வந்த பிறகு எனக்கு கிடைத்தது....நான் எதிபார்த்த அந்த எழுதமுடியாத ஒரு தனிருசி!. அதை சாப்பிட்டால் மட்டும்தான் உணரமுடியும். எப்படி வைக்கிறாய்? என்று அவளிடம் கேட்டால்.. மேலே கூற‌ப்பட்டுள்ளதை வார்த்தைபிறழாமல் சொல்கிறாள். நானே ஒரு நாள்ஒரு கை பார்த்துவிடலாம் என்று அவளை அருகில் வைத்து கொண்டே, அவள் செய்முறை சொல்ல சொல்ல நான் சாம்பார் வைத்தேன். சே.. அதிலும் இல்லை அந்த டேஸ்ட். கற்று கொடுத்தது 'அம்மா' என்றுதானே சொன்னாள்? என்று ஒரு நாள் ஊருக்கு சென்றபோது எனது மாமியாரை சாம்பார் வைத்தபோது கவனித்தேன்.. அவர்களும் அதே செய்முறையில் வைத்தார்கள். ஆனால், அங்கும் ஏதோ மிஸ்ஸிங்...

உன்னிடம் மட்டும் எப்படி அவ்வளவு டேஸ்ட் என்று அவளிடம் கேட்டால்... புன்னகையை பதிலாக தருகிறாள்.

Monday, December 15, 2008

சாக்கடையில் மனிதர்கள்..!

நான் தங்கியிருக்கும் அறை சென்னை,வால்டாக்ஸ் ரோட்டில் உள்ளது. எனது அறைக்கு சற்று முன் ரோட்டில் இரண்டு நாட்களாக பாதாளசாக்கடையிலிருந்து கசிவு ஏற்பட்டு ஒரே துர்நாற்றம். இன்று காலை அறையின் வாசல் அருகே மோட்டார் சத்தம் கேட்க, வெளியே வந்து பார்த்தேன். இரண்டு மாநகராட்சி ஊழியர்கள் ஒரு சிறிய மோட்டாரை வைத்துக்கொண்டு பாதாளசாக்கடையிலிருந்து கழிவுகளை இறைத்துக்கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் மோட்டாரை அணைத்துவிட்டு தனது சட்டை,கைலியை அவிழ்த்துவிட்டு உடம்பில் ஏதோ எண்ணெய் தேய்த்தார். வெறும் ஜட்டியுடன் சாக்கடையினுள் இற‌ங்கினார்.நீரினுள் முங்கி தனது கையினால் உள்ளிருக்கும் ஓட்டையினுள் அடைத்துக் கொண்டிருந்த‌ குப்பையை சிறிது நேர போராட்டத்திற்கு பின் அகற்றி வெளியே போட்டார். சிறிது நேரத்தில் அவர் வெளியே வந்தார். அவரது உச்சி தலைமுடியிலிருந்து கால் பாதம்வரை கழிவுநீரின் அழுக்குகள்(அதில் என்னன்ன கழிவுகள் கலந்திருக்கும்..)ஒட்டியிருந்தன. அவர் அதை சாதாரணமாக ஒரு துண்டை எடுத்து துடைத்துவிட்டு கைலி,சட்டையை போட்டுக்கொண்டார். சாக்கடையை மூடிவிட்டு மோட்டாரை மூன்றுசக்கர சைக்கிளில் தூக்கிவைத்துக்கொண்டு சைக்கிளை மிதிக்க தொடங்க மற்றொருவர் சைக்கிளை தள்ளிகொண்டே நடக்க ஆரம்பித்தார். நாகரிக உலகில் எத்தனையோ கருவிகள் வந்தாலும் பாதாள சாக்கடையில் மனிதன் இறங்கதான் செய்கிறான். நீச்சல் வீரர்கள் அணிவதுபோல உடம்போடு ஒட்டிய உடையோ., வெடிகுண்டு நிபுணர்கள்,தீயணைப்புவீரர்கள் அணிவதுபோல பாதுகாப்பான கவச உடையோ., இவர்களுக்கென தனியாக கண்டுபிடிக்கபடவில்லையா?.. அல்லது இவர்களுக்குத்தான் தெரியவில்லையா? அதில் இறங்காதவரை அந்த கஷ்டங்களை இவர்களை வேலைவாங்கும் அதிகாரிகள்தான் புரிந்துகொள்ளப்போகிறார்களா.?

Friday, December 12, 2008

சாலையோர பரிதாபங்கள்.!

மாலை 06.35. பார்க் இரயில் நிலையம்,சென்னை. 06.40.தாம்பரம் வண்டியைப் பிடிப்பதற்காக‌ வேகவேகமாக தண்டவாளத்தைக் கடந்து 2வது நடைமேடைக்கு வந்தேன்.அப்போது அருகில் இருந்த குடிநீர்த்தொட்டி அருகே.. தன்னைத்தானே தலையில் அடித்துக்கொண்டும்,ஏதேதோ பேசிக்கொண்டும் ஒருவர் இருந்தார்.அருகில் சென்றுப்பார்த்தேன்... மனநலம் பாதிக்கப்பட்டு,அரைநிர்வாணமாக,எல்லோராலும் கைவிடப்பட்ட அநாதையாக,பார்ப்பவர்கள் அருவருக்கும் நிலையில் அடுத்தநேர உணவுக்காக பிச்சை எடுக்கக்கூட தெரியாத நிலையில் பரிதாபமாக கிடந்தார். இதே போல எத்தனை இடங்களில்,எத்தனை நபர்கள்.. அரசின் கோடிக்கணக்கான பணமதிப்புடைய ஏராளமான‌ திட்டங்களில்.. இதுபோன்றவர்களையும் சேகரித்து, பாதுகாத்து காப்பகத்தில் சேர்த்து அவர்களின் நலம் பேணினால் என்ன?

மனநல‌காப்பகம்,கீழ்ப்பாக்கம்; நவம்பர் மாத இறுதியில்.. நிஷா புயல் சென்னையை புரட்டிஎடுத்த ஓர் நாள்..15 பேர் கொண்ட மனநோயாளிகளின் குழு மாலைநேர நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறது.. உதவியாளர்கள் எங்கோசெல்ல.. அங்கு தேங்கிக்கிடந்த தண்ணீரை 8 மனநோயாளிகள் குடித்துவிட..சிறிதுநேரத்தில் அவர்கள் மயங்கிவிழ..உடனடியாக அவர்கள் அரசுபொதுமருத்துவனையில் சேர்க்கப்பட‌..சிகிச்சைபலனின்றி பரிதாபமாக 3 மனநோயாளிகள் இறந்துவிட.. மற்றவர்கள் இன்னும் உயிருக்குப் போராடியநிலையில்..

இருக்கும் மனநலகாப்பகங்களின் நிலையே இதுவென்றால், மேற்சொல்லப்பட்டவர்களின் நிலை என்னவாகும்?

Thursday, December 11, 2008

கருவின் வார்த்தைக‌ள்..!

எப்பொழுதும் ஓடி ஆடி சுற்றித் திரிபவள்.. இப்பொழுது எங்கும் போகாமல் இருக்கிறாள்.. வேகமாக நடக்ககூட யோசிக்கிறாள்.. படி ஏறி இறங்ககூட பயப்படுகிறாள்.. _முதல் மாதம்.

நினைத்ததைகூட சாப்பிட முடியவில்லை..தண்ணீர் கூட குடலைப்பிடுங்கிகொண்டு வெளியே வருகிறது.. _இரண்டாம் மாதம்.

வெளியே எங்கும் செல்ல முடியவில்லை..அசையக்கூட முடியவில்லை.. _மூன்றாம் மாதம்.

எந்த சுவையும் பிடிப்பதில்லை..எந்த மணமும் ஏற்பதில்லை.. _நான்காம் மாதம்.

வயிறுபெரிதாக பெரிதாக எந்நேரமும் ஒரு குறுகுறுப்பு.. அதனால் யாரிடமும் சிரித்து பேச முடிவதில்லை.. _ஐந்தாம் மாதம்.

நெளிவுகள்,அசைவுகளால் யதார்த்தமாக இருக்கமுடியவில்லை.. ஆக தூங்கவும் முடியவில்லை.. _ஆறாம் மாதம்.

திரும்பிபடுப்பதற்குகூட ஒவ்வொருமுறையும் எழுந்திருக்க முடியவில்லை.. _ஏழாம் மாதம்.

வ‌யிற்றின் எடை அதிகமாக, கால்களின் வீக்கம் குறையவில்லை.. முகத்தில் களைப்பு.. _எட்டாம் மாதம்.

நடைபயிற்சினாலும், வேலைசெய்வதனாலும் சோர்வு குறைந்தபாடில்லை.. _ஒன்பதாம் மாதம்.

கவலை படாதே..எல்லாவற்றையும் சரி செய்ய‌ இன்னும் சில தினங்களில்... உன்னைப்போலவே முகத்தோடும், உன் அதே புன்னைகையோடும் உன் கைகளில் நானிருப்பேன்..!

Tuesday, December 9, 2008

மாறாத காதல்..

தி.மு; (திருமணத்திற்கு முன்)

அவள்; தானாகவே எப்போது சந்திக்கும் நேரம் வருகிறதோ?. அப்போது சந்திக்கலாம். வேலைதான் முக்கியம். நேரம் கிடைக்கும் போது வாருங்கள். எனக்காக ரிஸ்க் எடுக்க வேண்டாம்.அதுவரை காத்திருக்கிறேன்.!
அவன்; உன்னை பார்க்கணும் போல ஆசையாக உள்ளது!. உன்னை பார்ப்பதுதான் முக்கியம். வேலை இரண்டாவது. உனக்காக ரிஸ்க் எடுக்காமல் யாருக்காக எடுக்க போகிறேன்.!

தி.பி; (திருமணத்திற்கு பின்)

அவள்; என்னாச்சு இவ்வளவு நேரம்..? அக்கறையே கிடையாதா? ஒருத்தி இருக்காங்கிறது ஞாபகம் இருக்கிற‌தா? வேலை வேலைன்னு இருக்காதிங்க.. எவ்வளவு நேரம் காத்திருப்பது?..
அவன்; இல்லமா? கொஞ்சம் வேலை அதிகம்... வேலையை முடித்துவிட்டு வருகிறேன். ப்ளிஸ்டாமா! உடனே வந்தா பெரிய ரிஸ்க்கா ஆயிடும். ப்ளிஸ்மா!..

காதலில் காத்திருப்பதும், கல்யாணத்தில் சேர்ந்திருப்பதும், பெண்களுக்கு பிடிக்கும். காதலில் கெஞ்சுவதும், கல்யாணத்தில் கொஞ்சுவதும், ஆண்களுக்கு பிடிக்கும். காலசூழ்நிலைக்கு ஏற்ப அவர்களின் வார்த்தைகள் மாறியதே தவிற.. இன்னும் மாறவில்லை அவர்கள் காதல்!

Monday, December 1, 2008

அறிமுகம்

நான் கிராமங்களில் இருந்து வருகிறேன். எனக்கு கணிப்பொறியே புதிது. அதுவும் ப்ளாக்ஸ்பாட் உலகம் ரொம்ப புதுசு. என் பதிப்புகளை தருகிறேன். பிடித்திருந்தால் ஏற்றுக்கொள்ளவும்.