Sunday, June 28, 2009

இரயிலில் பயணம் செய்பவர்களா நீங்கள்...?. ( இரண்டாம் பாகம் )

இரயிலில் ப‌யணம் செய்பவர்களா நீங்கள்? என்ற என் பதிவிற்கு நல்ல வரவேற்பு கொடுத்த நண்பர்களுக்கு நன்றிகள்.

இனி இரண்டாம் பாகம்..

எல்லோருமே இரயில் பயணம் செய்திருப்பீர்கள். பயணங்களில் எல்லோரும் இரயில் பயணங்களையே மிகவும் விரும்புவர். இரயில் பயண‌ம் சுகமான பயணமாக இருந்தாலும் சில நேரங்களில் சிலருக்கு பிரச்சனைகளை தரக்கூடிய பயணமாக முடிகிறது. இரயில் பயணம் ஆரம்பம் முதல் முடியும் வரை பிரச்சனைகள் இருந்தாலும், ( முந்தைய பதிவில் இரயில் ஏறும் வரை உள்ள பிரச்சனைகளை பார்த்தோம்.) இரயிலில் ஏறிய பிறகு சந்திக்கும் சில‌ பிரச்சனைகளுக்கு எனக்கு தெரிந்த தீர்வுகளை சொல்கிறேன். ( இந்திய இரயில்வேக்கு மட்டும்).

1. தவறவிடும் நிலை :

கடைசி நேரத்தில் வரும் பயணிகள் தனக்கு ஒதுக்கப்பட்ட பெட்டிக்கு செல்வதற்குள் இரயில் நகர்ந்து விட ஏறமுடியாமல் தவறவிடுவது.
தீர்வு: கடைசி நிமிடத்தில் வரநேரும் பொழுது ப்ளாட்பாரத்திற்குள் நுழைந்ததும், ப்ளாட்பாரத்தின் முன்னே என்ஜின் அருகே உள்ளே சிக்னலை கவனிக்கவும். சிகப்பு விளக்கு எரிந்தால் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டிக்கு பதட்டமில்லாமல் செல்லுங்கள். மஞ்சள் அல்லது பச்சை விள‌க்கு எரிந்தால் உடனடியாக தங்களுக்கு அருகில் உள்ள பெட்டியில் ஏறிவிடுங்கள். அனைத்து இரயில்களிலும் பெட்டிகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருப்பதால் இரயில் கிளம்பினாலும் பெட்டியின் உள்ளேயே நடந்து தாங்கள் இருக்கைக்கு செல்லமுடியும். அவ்வாறு இல்லாமல் பெட்டி துண்டிக்கபட்டிருந்தாலும் அடுத்த நிறுத்ததில் நீங்கள் தங்கள் பெட்டிக்கு மாறிவிடலாம். அடுத்த நிறுத்தம்வரை தங்கள் இருக்கையில் வேறு நபர் அனுமதிக்கப்படுவதில்லை.

2. அபாயசங்கலி :

ஏதாவது ஒரு காரணத்தால் பிரச்சனை ஏற்பட்டு இரயிலை நிறுத்த வேண்டிய சூழ்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் திணறுவது.
இதற்கு அபாய சங்கிலியை பயன்படுத்தலாம். உடனே இரயில் நிறுத்தப்படும். இவ்வாறு நிறுத்தும்போது சரியான காரணங்களுக்கு மன்னிக்கவும், தவறான காரணங்களுக்கு தண்டிக்கவும் உட்படுத்தபடுவீர்கள்.

மன்னிக்கப்படும் காரணங்களில் சில :

இரயில் இருந்து யாரும் தவறி விழுந்து விடுவது,
உடல் நலகுறைவு ஏற்படும்போது,
தங்களுக்கும் தங்கள் உடமைகளுக்கும் பாதிப்பு ஏற்படும்போது,
நிர்வாக தவறாக கருதப்படும் பெட்டியில் தண்ணீர் இல்லாமலும்,
மின்சார இணைப்பு துண்டிக்கபட்டிருந்தாலும் இதுப்பற்றி முறைப்படி
டிக்கெட் பரிசோதகரிடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காதபோது,

தண்டிக்கப்படும் காரணங்களில் சில :

தங்கள் கவனகுறைவால் தனது உடமைகளை இரயில் இருந்து தவறவிடும்போது,
தாமதமாக வந்து தன்னுடன் பயணம் செய்யும் நபர் இரயில் ஏறுவதற்காக பயன்ப‌டுத்தும்போது,
விளையாட்டு எண்ணத்துடன் பயன்படுத்தும்போது,

இவ்வகை தண்டனைக்கு ரூ.1000 அபதாரம் அல்லது சிறைதண்டனை விதிக்கப்படும்.

3. காவல்துறை :

இரயிலில் தங்களுக்கோ தங்கள் உடமைகளுக்கோ பாதிப்பு ஏற்படும் வண்ணம் யாரேனும் நடந்துகொண்டாலோ அல்லது ச‌ந்தேகம் ஏற்பட்டாலோ உடனடியாக தங்கள் பாதுகாப்புக்காக தங்களுடனே பயண‌ம் செய்யும் நடமாடும் காவல்துறை அல்லது டிக்கெட் பரிசோதாகர் மூலம் இரயில் நிலையத்தில் உள்ள காவல்நிலையத்தை தொடர்புகொள்ள‌வும்.

சிறு தகவல்கள் :

(அ) பெட்டியில் ஏறியவுடன் பெட்டியில் ஒட்டப்பட்டிருக்கும் காவல்துறை கட்டுபாட்டு அறை மற்றும் பெண்கள் உதவி மையம் மற்றும் அவசரஉதவி போன்றவற்றின் தொலைபேசி எண்களை தங்கள் செல்போனில் டையல் செய்து வைத்து கொள்ளவும்.

(ஆ) இரயில் ஏறியவுடன் தண்ணீர், விளக்கு, விசிறி போன்றவை சரியாக உள்ளனவா? என பரிசோதித்து கொள்ளவும்.

(இ) தங்கள் இருக்கைக்கு அருகாமையில் உள்ள ஜன்னல் கம்பிகள், கதவுகள் மற்றும் படுக்கை பிடிப்பு கம்பிகள் சரியாக உள்ளதா என சரிபார்த்து கொள்ளவும்.

(ஈ) தங்கள் இருக்கைக்கு கீழ் உள்ள‌ பாதுகாப்பு சங்கலியில் தங்கள் உடமைகளை வைத்து பூட்டிக்கொள்ளவும்.

தொடரும்...


.

Monday, June 22, 2009

திண்டுக்கல் டூ விருதுநகர்

"காலை எட்டு மணி ஐம்பது நிமிடத்திற்கு இங்கு வந்து சேரவேண்டிய வண்டி எண் இரண்டு ஆறு மூன்று இரண்டு சென்னை எழும்பூரிலிருந்து திருச்சி திண்டுக்கல் மதுரை விருதுநகர் வழியாக திருநெல்வேலி வந்து சேரும் நெல்லை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் நாற்பது நிமிடங்கள் காலதாமதமாக வந்து சேரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தங்களுக்கு ஏற்பட்ட அசவுகரியத்திற்கு வருந்துகிறோம்" திருநெல்வேலி இரயில் நிலைய ஒலிபெருக்கி தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மூன்று மொழிகளிலும் ஒலித்து கொண்டிருந்தது.

நேரம் 09.40 : இரயில்வே காவல்துறை அலுவலகம். இன்ஸ்பெக்டர் அறை.

மெருகேறிய உடற்கட்டு, முறுக்கிய மீசை, பிடிப்பான யூனிபார்ம் என பார்க்க கம்பீரமாக தோன்றும் இன்ஸ்பெக்டர் ராம் தன்னை அழைத்த செல்போனை காதுக்கு கொடுத்தார். மறுமுனையில் அவரது மனைவி.

'என்னம்மா? என்ன விஷயம்?.'

'ஒன்றுமில்லை. இன்னிக்காவது மதியம் சாப்பாட்டுக்கு சீக்கிரம் வாங்க.'

'சரிம்மா.'

'சரிம்மான்னுட்டு லேட்டா வராதீங்க. கல்யாணநாள் அதுமா என்னை டென்சன் ஆக்கிடாதீங்க.!'

'சரி' என்று போனை வைக்கவும் எஸ்.ஐ அறையின் உள்ளே வந்து சல்யூட் அடிக்கவும் சரியாக இருந்தது.

'எஸ் சதீஸ்! எனித்திங் ஸ்பெஷல்?'

'எஸ் சார்!.'

'என்னாச்சு?'

'சார். நெல்லை இப்பதான் ப்ளாட்பார்ம் 1ல் வந்தது. எல்லோரும் இறங்கி போயாச்சு. ஆனால் எஸ் 9ல் ஒருவர் மட்டும் எழுந்திருக்கவில்லை என அவருடன் பயணம் செய்த அவரது நண்பர் கூற இரயில்வே டாக்டரை வர சொல்லி பரிசோதனை செய்ததில் அவர் இறந்திருந்தார். உடனடியாக ஜி.ஹெச்.க்கு சொல்லி ஆம்புலன்ஸ் வரசொல்லியிருக்கிறேன்.'

'அப்படியா! வாங்க.போய் பார்க்கலாம்.'

ப்ளாட்பாரம் 1, எஸ் 9 பெட்டி ஜன்னல் வழியே எட்டி பார்ப்பவர்களை ஒரு கான்ஸ்டபிள் விரட்டி கொண்டிருந்தார். பெட்டியின் உள்ளே சென்ற ராம், தூங்குவது போல் படுக்கை நிலையில் இறந்துகிடந்த அந்த 45 வயது மதிக்கதக்க அந்நபரை பார்த்துவிட்டு அருகில் நிற்பவரிடம் திரும்பினார்.

'நீங்க யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?'

'எங்களுக்கு சொந்த ஊர் திருச்சி அருகே உள்ள குளித்தலை சார். நாங்க இரண்டு பேரும் ப்ரண்ட்ஸ் அண்டு பிஸினஸ்மேன் சார். இரண்டு பேரும் பாட்னர்சிப்பில் திருச்சியில் ஒரு பேப்பர் மில் நடத்துகிறோம். இப்போது திருநெல்வேலியில் கொண்டாநகரம் அருகே புதுமில்லுக்காக இடம் பார்க்க வந்தோம். நல்லா தூங்கிட்டோம் சார். இப்பதான் நான் எழுந்திருச்சேன். அவரை எழுப்பினேன். அவர் எழுந்திருக்கவில்லை சார்.'

'அப்படியா! நீங்க டிரிங்க்ஸ் பண்ணியிருக்கீங்களா?'

'அவரும், நானும் சேர்ந்துதான் சாப்பிட்டோம் சார்.' என்றார்.

அதற்குள் ஆம்புலன்ஸ் வர 'சதீஸ்! பெட்டியை நன்றாக சோதனையிட்டு பின்பு பாடியை போஸ்ட்மார்டத்திற்கு அனுப்பிவிட்டு ரிப்போட்டுடன் ஸ்டேசன் வாங்க. நான் இவரை அழைச்சிட்டு போறேன்.'

'எஸ்.சார்.'

மூன்றுமணிநேரத்திற்கு பிறகு :

இன்ஸ்பெக்டர் அறையில் ராம் அவருக்கு நேரெதிரே சதீஸ்.

'என்ன சதீஸ்! போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் என்ன சொல்லுது?.'

'குடிபோதையில் இருந்த இவர் மூச்சு திணறடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை நடந்து நான்கு மணிநேரம் ஆகியிருக்கலாம். இவரது நண்பர் கூறியது போல குடிபோதையில் மாரடைப்பால் இறக்கவில்லை.'

'ஓ.கே. இவரது நண்பரை மேலும் தீவிரமாக விசாரிங்க. ரிப்போர்ட் படி பார்த்தால் கொலை மதுரைக்கு முன் நடந்திருக்கலாம். அப்படிதானே.'

'ஆமா சார்.'

'சரி நீங்க இவரை பார்த்துக்குங்க. நான் "சீப் ரிசர்வேஷன் சூப்பர்வைசரை" பார்த்துவிட்டு வருகிறேன்' என்று கூறிவிட்டு தனது செல்போனை எடுத்து தனது மனைவிக்கு டயல் செய்தான். மறுமுனையில்..

'என்னங்க! கிளம்பிச்சா?'

'ஸாரிம்மா! ஒரு மர்டர் கேஸ். வரமுடியாது.'

'ஒருநாளாவது சொன்னமாதிரி செய்ததுண்டா?'

'சரி கோபப்படாதே! நான் அப்புறம் கால் பண்றேன்.' என்று கூறி போனை வைத்தான்.

மீண்டும் சதீஸ்சும், ராமும் :

'என்னாச்சு! சதீஸ் எனித்திங் க்ளு!'

'நத்திங் சார். அந்த நபரை விசாரித்ததில் அவர் பதட்டபட்டு உளறுகிறாரே தவிர அவர் கொலையாளி இல்லை என தோன்றுகிறது சார்!'

'அப்படியா! சரி. என் ப்ளான்படி மொத்த பயணிகளில் இவர்களுடன் திருச்சியில் ஏறியவர்கள் 23 நபர்கள். இவர்களில் 8 நபர்கள் மதுரையிலும், 15 நபர்கள் திருநெல்வேலியிலும் இறங்கியுள்ளார்கள். திருநெல்வேலியில் இறங்கிய நபர்களை விசாரிக்க நமது டீமை அனுப்புங்கள். மதுரைக்கு நாம் இருவரும் உடனே கிளம்புகிறோம்.'

'எஸ் சார்.'

இரவு 10.16 :
திருச்சி 134 கி.மீ. என வழிகாட்டிய பைபாஸ்ரோட்டின் ஓரத்தில் உள்ள போர்டை பார்த்தபடி காருக்கு வேகம் கொடுத்தான் சதீஸ்.

'என்ன சதீஸ்! மதுரையில் ஒரு க்ளுகூட கிடைக்கவில்லை. திருநெல்வேலியின் நிலை என்ன?'

'அங்கும் அந்தளவுக்கு நம்பிக்கையான தகவல் இல்லை சார்.'

'திருச்சிக்கு போனால் அவரது சொந்த ஊர் மற்றும் மில்லில் ஏதாவது கிடைக்குமா?'

'கண்டிப்பாக சார். நம்மகிட்டேயிருந்து அவன் தப்பவே முடியாது.'

'பார்ப்போம்.' என கூறிவிட்டு ரிசர்வேஷன் சார்டை எடுத்து புரட்ட ஆரம்பித்தார். இவர்களை சுமந்தபடி பைபாஸில் கார் திருச்சி நோக்கி பறந்தது.
***

காவல்துறை ஆணையர் அலுவலகம், திருச்சிராப்பள்ளி. மாலை 4 மணி :
பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் ராம்.

'எப்படி சார், கொலையாளியை கண்டுபிடிச்சீங்க?', 'அதுவும் கல்லூரி மாணவன்?.', 'ஒரே நாளில் எப்படி சார் சாத்தியமானது?.' என்று கேள்வி கணைகளை தொடுக்க‌ ஆரம்பித்த பத்திரிக்கையாளர்களை கையமர்த்திவிட்டு பேச ஆரம்பித்தார் ராம்.

"எல்லா கேள்விகளுக்கும் சேர்த்து பதில் சொல்கிறேன். எந்த கேஸிலும் க்ளு கிடைப்பதை பொறுத்துதான் கொலையாளி மாட்டுவான். இந்த கேஸை பொருத்தவரை ஒரே நாளில் முடிந்துவிட்டது. திருநெல்வேலி, மதுரையில் விசாரணையை முடித்துவிட்டு திருச்சிக்கு வந்து கொண்டிருந்தோம். அப்பொழுது ரிசர்வேஷ‌ன் சார்ட்டை பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென ஒரு 'ஐடியா' கிடைக்க இறந்த நபர் எங்கே ரிசர்வேஷ‌ன் செய்துள்ளார் என சார்ட்டை பார்க்க அது 'திருச்சி' என காட்டியது. இன்று காலை திருச்சியில் ரிசர்வேஷன் ஆபிஸ் சென்று நெல்லை எக்ஸ்பிரஸ்க்கு குறிப்பிட்ட தேதியில் 'யார் யார் ரிசர்வ் செய்துள்ளார்கள்?' என்ற பட்டியலை எடுத்தோம்.
மொத்தம் 18 நபர்கள். இவர்கள் திருச்சி டூ மதுரை, திருச்சி டூ திருநெல்வேலி என ரிசர்வ் செய்திருந்தனர். ஆனால் ஒருவர் மட்டும் திண்டுக்கல் டூ விருதுநகர் என்று ரிசர்வ் செய்திருந்தார். அவர் ரிசர்வ் செய்ய கொடுத்த விண்ணப்பபடிவத்தில் அவரது பெயர் சிவா, வயது 21 என்றும் இருந்தது. அதில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு சென்று விசாரித்த போது அந்த முகவரி போலியானது என தெரியவர விசாரணையை தீவிர படுத்தினேன். அந்த டிக்கெட் ரிசர்வ் செய்யப்பட்ட‌ நேரத்தில், ரிசர்வ் செய்த கவுண்டரில் உள்ள கேமிராவில் பதிவான அந்த நபரின் புகைப்படத்தை வாக்காளர் அடையாள அட்டை பட்டியலோடு ஒப்பிடுகையில் உண்மையான முகவரி கிடைக்க சிக்கனான். விசாரணையில் முதலில் மறுத்தவன் பிறகு ஒப்புக்கொண்டான்.

அவனது பெயர் பாலா., வயது 21., எம்.காம். முதலாமாண்டு படிக்கும் கல்லூரி மாணவன். இவருடன் படிக்கும் சக மாணவி சாந்தி. இவர் இறந்துபோன நபரின் ஒரே மகள். சாந்தி, "தன்னை ஒருதலை பட்சமாக காதலித்த பாலாவின் தொந்தரவு தாங்காமல் தன் தந்தையிடம் கூறி கண்டித்துள்ளார்."
"என் மகளை பின் தொடர்ந்தால் உன்னை கொன்றுவிடுவேன்." என்று கூறி அவரை கல்லூரி வளாகத்திலே அடித்து அவமானப்படுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலா சாந்தியையும், அவரது தந்தையையும் கொல்ல திட்டம் தீட்டியுள்ளான்.

முதலில் சாந்தியின் தந்தை திருநெல்வேலி செல்வதை அறிந்த பாலா திட்டம் போட்டு, போலீஸில் மாட்டக்கூடாது என்பதற்காக திண்டுக்கல் டூ விருதுநகர் ரிசர்வ் செய்து, திருச்சியிலிருந்து அதிகாலையில் பஸ்ஸில் திண்டுக்கல் சென்று அங்கிருந்து இரயில் ஏறி, எல்லோரும் தூங்கும் நேரம் என்பதால் எளிதாக அவர் அருகே சென்று தான் கொண்டு வந்த துணியால் அவரது வாய் மற்றும் மூக்கை பொத்தி கொலை செய்துள்ளான். அவரும் குடிபோதை மயக்கத்தில் இருந்த‌து மேலும் இவனுக்கு எளிதாகியது. பின்னர் விருதுநகரில் இறங்கி உடனடியாக பஸ் பிடித்து திருச்சி வந்தடைந்து எப்பொழுதும் போல கல்லூரி சென்றுவிட்டான். அவன் செய்த தவறு, இற‌ந்துபோன நபர் ரிசர்வ் செய்த அதே ரிசர்வேஷன் சென்டரில் இவனும் ரிசர்வ் செய்ததுதான்." என்று கூறி முடிக்க ராமின் செல் அழைத்தது. எடுத்து பார்த்தான்.

அவனது மனைவி புன்னகைத்தாள்.

'சொல்லுமா!'

'ஸாரிங்க! நேற்று நீங்க வரலைன்னு கடுமையான கோபத்தில் உங்ககூட பேசாமலிருந்தேன். இப்பதான் டிவியில செய்தி பார்த்தேன். ரொம்ப சந்தோசமாகவும், பெருமையாகவும் இருக்கு. சீக்கிரம் வீட்டிற்கு வாங்க. ஸ்பெஷல் விருந்து உங்களுக்காக காத்திருக்கு.'

'சரிம்மா.' என்று செல்லை அணைத்துவிட்டு திரும்ப, அருகில் சதீஸ் புன்னகைத்தார்.

(உரையாடல் நடத்தும் சிறுகதைப்போட்டிக்காக)
.

Wednesday, June 17, 2009

சும்மாத்தான்!...

பணிமாற்றத்திற்கு பிறகு கொஞ்சம் வேலை பளு ( கொஞ்சம் அதிகமாகவே ).

புது அதிகாரிகள் மற்றும் புது கட்டுப்பாடுகள் என கரும்பு சாறு பிழிவதுபோல் 10 தினங்களுக்கு மேலாக பிழிந்துவிட்டனர். பணி முடிந்ததும் எப்படா ஓய்வு என்று வீட்டிற்கு ஓடத்தான் நேரம் கிடைத்ததே தவிர ப்ரவுசிங் சென்டர் பக்கம் போக நேரமே இல்லை.

இதற்கு என்று தான் முடிவு வருமோ?.

மனதில் ஓரத்தில் பதிவுலகத்தை பற்றியும், பதிவுலக நண்பர்கள் பற்றியும் ஓடிக்கொண்டிருக்க இன்று எப்படியாவது பின்னுட்டமாவது போட்டுவிட வேண்டும் என வந்துவிட்டேன்.

தாமதத்திற்காக வருந்துகிறேன்...

.

Monday, June 8, 2009

இப்படியெல்லாமா கேள்வி கேட்பாங்க?

என்னை இந்த தொடர்பதிவுக்கு அழைத்த நையாண்டி நைனாவிற்கு நன்றி. என் மனதில் தோன்றிய பதில்கள்...



1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

எனது தாத்தாவின் பெயர்.பரம்பரை பெயர். எனது பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும். (இன்னும் பெரியதாக வைத்திருக்கலாம் என்று என் தந்தையிடம் கேட்டதுண்டு.{ இராமச்சந்திரமூர்த்தி‍‍ @ ராம்.C.M} ).



2.கடைசியாக அழுதது எப்பொழுது?

7ம் வகுப்பு படிக்கும் போது பள்ளிக்கு செல்லாமல் கிணற்றில் குளித்துவிட்டு வருவதை அம்மா பார்த்துவிட அன்று வீட்டில் ந‌டந்த "தீபாவளி"யின் போது.



3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ரொம்ப பிடிக்கும். 10ம் வகுப்பு முதல் இன்று வரை பலர் கூறியும் மாற்றாமல் இன்று வரை தமிழில் போட்டு வருகிறேன். இனியும் மாற்றபோவதில்லை.



4.பிடித்த மதிய உணவு என்ன?

சாதம்,சாம்பார்,வெண்டைக்காய் பச்சடி,தயிர்,அப்பளம்.



5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

இல்லை. அவர் எப்படி என்று ஆராய்ந்து உண்மைவிளம்பியாக இருந்தால்.. அவர் விருப்பப்பட்டால்...



6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

இரண்டிலும் அடிக்கடி குளித்தாலும், கொஞ்சதூரம் பயணம் செய்து குளிக்கும் கடல் குளியலே.



7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

யாராக இருந்தாலும் அவர்களது கண்கள். அது மட்டும்தான் அவருக்கே தெரியாமல் அவர் பேசுவது உண்மையா? என்று கணக்கிட்டு சொல்லும்.



8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பாவம் என்று தர்மம் (நூற்றுகணக்கில்) செய்து என் மனைவியிடம் திட்டு வாங்குவது. மிக வேகமாக பைக் ஓட்டுவது.



9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

எனது சரிபாதியாக இல்லாமல் முழுவதுமாக இருப்பது., பிடிக்கவில்லை என்று சொல்லவிடாமல் என்னுள் இருப்பது.



10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

எனது உடன்பிறப்புகள்.



11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

சாம்பல் நிற சட்டையும், சந்தனகலர் டிராக்ஸ்சூட்டும்.


12.என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

ஜன்னல் வழியே பூட்டாமல் வந்த எனது பைக், "ஏதோ ஒரு பாட்டு" உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படப்பாடல்.



13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

வாடாமல்லி பூவின் நிறம்.



14.பிடித்த மணம்?

பைக்கில் செல்லும்போது என்னை ஓவர்டேக் செய்யும் லாரியில் உள்ள கருவாட்டு வாசனை.



15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

http://ponniyinselvan-mkp.blogspot.com/திரு.கார்த்திகைப் பாண்டியன் அவர்கள். நல்லவர். வல்லவர். ஆசிரியர் பணியில் இருப்பவர். ஆசிரியர்தான் கேள்வி கேட்பார்கள். ஆசிரியர் பதில் எப்படியிருக்கும்?

http://pirivaiumnesippaval.blogspot.com/காயத்ரி அவர்கள். பிரிவையும் நேசிக்கும் அழகு கவிதை மழை பொழியும் அன்பு சகோதரி.

http://premkumarpec.blogspot.com/திரு.ப்ரேம் அவர்கள். பலவிதமான கருத்துகளுடன் பதிவு எழுதுபவர். பதிவுலகில் எனக்கு முதலில் அறிமுகமானவர்.



16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?

நையாண்டி நைனா. நையாண்டியிலே வண்டி ஓட்டும் திறமை.



17. பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட். லீவு போட்டு டிவியே கடவுள் என்று கிடப்பது. சென்னையாக இருந்தால் சேப்பாக்கத்தில்...



18.கண்ணாடி அணிபவரா?

இல்லை.



19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

ஒரே வில்லன். பரம்பரையாக‌ பழி வாங்குவது (?).



20.கடைசியாகப் பார்த்த படம்?

நியூட்டன் 3ம் விதி.(என் தலைவிதி போங்க...)



21.பிடித்த பருவ காலம் எது?

இலையுதிர்காலம்.



22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

தினசரி காலையில் வீட்டிற்கு வரும் 'தினகரன்' பத்திரிகையாவது படிக்கனும் நினைப்பேன். அதுவும் சில நாட்கள் தவறிவிடுகிறது.



23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

இது ப்ரவுசிங் சென்டரின் உரிமையாளரிடம் கேட்கவேண்டிய கேள்வி. ஆனால் நாளுக்குநாள் சென்டரை மாத்திகொண்டே இருக்கிறேன்.


24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

மழலைகள். சிக்னலில் கடைசியில் நின்றுகொண்டு பச்சைவிளக்கெரிந்தவுடன் ஹாரன் அடிக்கும் வாகன‌சத்தம்.



25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

விஜயவாடா.



26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

துப்பாக்கி சுடுவது தனித்திறமையில் வருமா?



27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

சாப்பிடும் போது அருகில் தண்ணீர் இல்லாதது.



28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

நினைத்ததை உடனே முடிக்க எண்ணி தோற்றாலும் சில நிமிடங்களில் அதை மறப்பது.





29.உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?

எங்க ஊர் ஆற்றங்கரை.



30.எப்படி இருக்கணும்னு ஆசை?

வேலைக்கே போகாமல் வீட்டில் வீடியோகேம் விளையாடனும்.



31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

கிரிக்கெட் பார்ப்பது.



32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

துரத்துகிற சிங்கத்திற்கு பயந்து மரத்தில் ஏற, அங்கு இருக்கும் கருநாகத்திற்கு பயந்து அருகில் உள்ள ஆற்றில் குதிக்க எண்ண, அங்கு கிடக்கும் முதலையை கண்டு பயப்படும் நேரத்தில் மரக்கொம்பு ஒடிய தயாராக, என்ன செய்வது என தொங்கும் போது,மேல் கொப்பிலிருக்கும் தேன் கூட்டிலிருந்து ஒரு சொட்டு தேன் வாயில் விழும்போது ஏற்படும் சுவை... வாழ்வு.
.