Thursday, April 30, 2009

வாரம் ஒரு முறைதான்..!

அன்பார்ந்த என் பதிவுலக நண்பர்களுக்காக...

தேர்தல் சூடுபிடிக்க ஆரமித்து விட்டதால் எமது பணியும் சூடுபிடித்து விட்டது. சென்ற வாரங்களிலேயே என் பணியின் பளுவும் அதிகரித்து விட்டது. தினசரி குறைந்தது 12 மணி நேரத்திலிருந்து 18 மணி நேரம் பணி இருப்பதால் மீதமுள்ள நேரங்களில் ஓய்வு எடுக்கவே சரியாக உள்ளது. அதுவும் நான் "அதி தீவிரப்படை" ( கமாண்டோ ) பிரிவில் இருப்பதால் இன்னும் நெருக்கடி அதிகம். இதன் காரணமாக சரிவர வலைப் பதிவுலகிற்கு வர இயல வில்லை. சிலரின் பதிவுகளுக்கு பின்னூட்டங்களும் இட முடிய வில்லை. அதற்காக வருந்துகிறேன். இன்னும் ஒரு மாத காலத்திற்கு இந்த நிலை நீடிக்கும் என நினைக்கிறேன். அதுவரை என் பதிவுலக நண்பர்கள் பொறுத்து கொள்ளவும். ஆனால் எப்படியும் வாரம் ஒரு முறையாவது பதிவுலகிற்கு வந்துவிடுவேன். தற்போது கூட "சென்னையில் இரயில் விபத்து" நடந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்துவிட்டு உணவருந்துவதற்காக வீடு திரும்புகிற வழியில் உங்களை சந்திக்கிறேன். சற்று ஓய்வு எடுத்துவிட்டு திரும்ப இரவு பணிக்கு செல்ல வேண்டும். மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து உத்தரவு வாங்கிக்கிறேன்.


-ராம்.CM.

.

Saturday, April 25, 2009

பிச்சையா...போடாதீங்க.!

நாம் வீட்டில் இருக்கும் போதும், வெளிசெல்லும் போதும் பிச்சைகாரர்களை காண்பதும் அவர்களுக்கு நம்மால் இயன்றதை கொடுப்பதும் உண்டு. நானும் என் வாழ்நாளில் பலவிதமான பிச்சைகாரர்களை பார்த்து என்னால் இய‌ன்றதை செய்திருக்கிறேன். ஆனால் தற்போது பிச்சை போடுவதை குறைத்து விட்டேன் ( போடுவதே கிடையாது.). இதற்கு சில அனுபவ காரண‌ங்கள் உண்டு. அவற்றின் சில வரிகள்...தனது ஏழ்மையினால் வாழவழியின்றி பிச்சை எடுப்பவர்கள், தனது ஊனத்தை காரணமாக காட்டி பிச்சை எடுப்பவர்கள், பாடல் பாடுவது, இசைப்பது போன்ற ஏதாவது ஒரு திறமையை காட்டி பிச்சை எடுப்பவர்கள் என்று பல விதமான பிச்சைகாரர்கள் இருக்கிறார்கள். இது போன்று பிச்சை எடுப்பவர்கள் இரயில் நிலையங்களிலும் உண்டு. நீங்களும் பார்த்திருக்க வாய்ப்புண்டு.


பகலில் அப்பாவிகளாக திரியும் இவர்கள் இரவில் மாறி விடுகிறார்கள். தங்களுக்கு என்று ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு எல்லோரும் ஒன்று கூடி "தண்ணி" அடித்து விட்டு சத்தம் போட்டுகொண்டும், ஏதாவது கதை பேசிக்கொண்டும், பாட்டு, கூத்து என்று அந்த இடத்தையே இரண்டாக்கி விடுகிறார்கள். சில சமயங்களில் இச்சம்பவம் இரயில் நிலையங்களிலும் அரங்கேறிவிடுகிறது. இதை கட்டுபடுத்துவதற்காக சென்றால் "பகலில் பாவமாக திரியும் இவர்களா இப்படி?..." என்று எங்களை அதிர்ச்சியடைய செய்கின்றனர். இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் இவர்களுடன் பெண்களும் சேர்ந்து "தண்ணிய‌டிப்பது"தான்.

பகலில் பிச்சையெடுப்பவர்களில் 90 சதவீதத்தினர் இரவில் இப்படி மாறிவிடுவது என் அனுபவ உண்மை. 'நாள் ஒன்றுக்கு குறைந்தது 500 ரூபாய்க்கு மேல் வருமானம், வாழ்வில் எந்த பொறுப்போ, அக்கறையோ கிடையாது, நாட்களை நகர்த்தினால் மட்டும் போதும், இவர்களை போன்றவர்கள்தான் இவர்களது நண்பர்களும், இவர்களை கட்டுப்படுத்துவதற்கு யாரும் கிடையாது' இதனால் இவர்களுக்கு இந்த நிலை. அதேபோல்' உழைத்து சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் சிறிதளவு கூட இல்லாமல் வாழ, இவர்களுக்கு உதவுவது நாம் பாவம் என்று கொடுக்கும் காசுதான் காரணம் ' என்பது என் கருத்து.

.

Saturday, April 18, 2009

பறக்க விடுகிறேன்... பரிசை!

எனக்கு தரப்பட்ட பரிசை பறக்க விடப்போகிறேன்.

என்னவென்று யோசிக்காதீங்க...

கார்த்திகைப்பாண்டியனால் எனக்கு (என் பதிவுக்கு) பரிசாக வழங்கப்பட்ட "பட்டாம்பூச்சி விருதை" ஒரு வார காலத்திற்கு மேலாக என் வசம் வைத்து அழகு பார்த்து ரசித்ததை இன்று பறக்க விடப்போகிறேன்.

என்னால் ரசிக்கப் படுபவர்களில் மூன்று நபர்களுக்கு சென்றடையுமாறு உத்தரவிடுகிறேன் என் அழகான பட்டாம்பூச்சிக்கு...

1. http://premkumarpec.blogspot.com/ திரு.ப்ரேம்குமார். எனக்கு முதன் முதலாக பதிவுலகில் அறிமுகமான நண்பர். மாதத்திற்கு 4 முதல் 5 பதிவுகளே எழுதும் இவர் ஒவ்வொரு பதிவிலும் வெவ்வேறு கருத்தை கொண்டிருப்பார். குறிப்பாக இவர் எழுதும் கவிதை அனைத்தும் மிக அருமையாக இருக்கும்.


2. http://pirivaiumnesippaval.blogspot.com/ சகோதரி காயத்ரி. கவிதையை கடைந்து எடுத்தவர். அழகான கவிதைகளையும் அதற்கேட்ப படங்களை கோர்ப்பதிலும் வல்லவர். நல்லவரும்கூட.


3. http://sakthi-sakthiunarvugal.blogspot.com/ சகோதரி சக்தி. அருமையாக சமூக சிந்தனையுடன் கவிதை எழுதுவதில் வல்லவர். கருத்துகளும் அழகாக இருக்கும். இவரும் நல்லவரே...

.

Monday, April 13, 2009

வாழ்க்கையில் முன்னேற..

இது போன்ற விளம்பரங்களை இரயில், பஸ் மற்றும் பல இடங்களில் பார்த்திருப்பீர்கள். இந்த விளம்பரத்தை பார்த்த ஒரு செல்வி என்ற‌ பெண் அந்த எண்ணுக்கு அழைக்க, அவர் 'அம்பத்தூர் பஸ் நிலையம் வாருங்கள், நான் அங்கு காத்திருப்பேன்' என்று கூறினார்.செல்வியும் அங்கு சென்றார். சிறிது நேரத்தில் போனில் பேசிய அந்நபர் பஸ் நிலையத்திற்கு காரில் வந்து செல்வியிடம் 'வாங்க, ஆபிஸ் பக்கத்தில்தான் போகலாம்' என்று கூற செல்வியும் காரில் ஏறி அலுவலகம் சென்றது. இரண்டு அறைகள் கொண்ட அலுவலகத்தில் முதல் அறையில் செல்வியை உட்காரவைத்து விட்டு அந்நபர் உள்ளே சென்றார். சிறிது நேரத்தில் வெளியே வந்து செல்வியிடம் ஒரு ஜூஸை கொடுத்து குடிக்க சொல்ல இவரும் குடித்தார். அலுவலகத்தில் வேறு யாரும் இல்லைபோல என்று செல்வி யோசித்துகொண்டிருக்கும்போதே மயங்கினார். இதை ஓரத்தில் இருந்து கவனித்துகொண்டிருந்த அந்நபர் வெளியே வந்து செல்வியை தூக்கிகொண்டு உள்ளே சென்று கட்டிலில் போட்டுவிட்டு கதவை அடைக்க வந்தவருக்கு அதிர்ச்சி!...
வாசலில் காக்கிசட்டை அணிந்த கும்பல்... திகைப்பில் திரும்பி பார்க்க செல்வி எழுந்துநின்று அதிகாரிகளுக்கு 'சல்யூட்'அடித்தார். என்ன செய்வதென்று பயத்தில் சுற்றி முற்றிப் பார்க்க போலீஸ் கும்பலுக்கு நடுவே ஒரு பெண் நிற்பது இவண் கண்ணில் பட்டது. அவளை உற்று பார்க்க இவனுக்குள் ஒரு 'ப்ளாஸ்பேக்' ஓடியது. சிறிது நட்களுக்கு முன் இதேபோல் அப்பெண்ணை அழைத்துவந்து களங்கபடுத்தி அதை வீடியோவும் எடுத்துவைத்து கொண்டு பயமுறுத்தி பலமுறை தன் அலுவலகத்திற்கு வரவழைத்து கொடுமைப்படுத்தியது ஞாபகத்திற்கு வர 'ப்ளாஸ்பேக்'முடிய...

காவல்நிலையம்.
காக்கி உடை, 'நல்லபடியாக‌ கவனித்ததில்' தான் இதற்கு முன் வயது வித்தியாசம் பார்க்காமல் பலபெண்களிடம் இதுபோன்று இருந்ததையும், அதன் வீடியோ படங்களையும் தர ஒப்புக்கொண்டான். அதே நேரத்தில் ஆண்கள் வேலை தேடி வந்தால் முகவரி வாங்கி வைத்து கொண்டு 'நாங்கள் திரும்ப அழைக்கிறோம்' என்று அனுப்பி விடுவானாம். தனது குற்றங்களை ஒப்பு கொண்ட இவன் தற்போது புழலில் புழுங்கிக்கொண்டிருக்கிறான்.

நாட்டில் வேலையில்லா திண்டாட்ட‌ங்க‌ளை த‌னிம‌னித‌ன் ஒருவ‌ன் ப‌ய‌ன்ப‌டுத்திய‌ வித‌த்தை க‌ண்டு வ‌ருத்த‌ப‌ட‌வேண்டும். அதே நேர‌த்தில் அவ‌னை அவ‌ன் வ‌ழியிலேயே சென்று ம‌ட‌க்கிய‌ ந‌ம் த‌மிழ்நாடு காவ‌ல்துறையின் த‌ந்திர‌த்தை பாராட்டியே தீரவேண்டும்.

குறிப்பு: சில‌ நாட்க‌ளுக்குமுன் ந‌ட‌ந்து ப‌த்திரிக்கையில் வெளியான‌ உண்மை ச‌ம்ப‌வ‌ம் இது. செல்வி என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

.

Friday, April 10, 2009

நானும் என் சாத்தானும்!

கடந்த 8ம் தேதி பங்குனி உத்திரம். அதிகாலை 1.30 மணியளவில்..

"ஏலே.. எழுந்திரு.. நேரமாயிடுச்சு. சீக்கிரம் கிளம்பு.. அப்பா ஏசிகிட்டுயிருக்கு. " அம்மா சொல்ல..

வேகமாக எழுந்து பல்துலக்கி, கடமைகளை முடித்துவிட்டு, வேஷ்டி, சட்டை அணிந்து 15 நிமிடத்தில் கிளம்பி விட்டேன்.

'அந்த வீட்டில் பழங்கள் இருக்கு போய் பஞ்சாமிர்தம் போடு. போ' அப்பா சொல்ல..

வேகமாக பக்கத்தில் எங்களுக்கு சொந்தமான இன்னொரு வீட்டிற்கு ஓடிப்போய் பழங்களை வெட்ட ஆரம்பித்தேன். மா, வாழை, மாதுளை, திராட்சை, அன்னாசி, கொய்யா, ஆப்பிள், ஆரஞ்சு, கற்கண்டு, தேன், பேரிட்சை போன்றவற்றை சேர்த்து ஒரு குவளை இட்டு கைகளால் கசமுசவென பிசைந்துவிட்டு 'பஞ்சாமிர்தம் ரெடி' என்றேன்.

அதற்குள் டாட்டா சுமோ வந்துவிட, 'சரி, சரி போய் வண்டியில் எல்லாவற்றையும் ஏற்று' என்று கமெண்ட் வந்தது. அனைத்து பொருட்களையும் வண்டியில் ஏற்றியதும் அப்பா, அம்மா, நான், என் மனைவியார், என் வாரிசு மற்றும் எனது நண்பர் ஒருவருடன் வண்டி கிளம்பும்போது சரியாக 2.45 இருக்கும். சரியாக இரண்டு மணி நேரம் பயணம். எங்களுக்கு சொந்தமான எங்கள் குலதெய்வமான ஆனைமேல் அய்யனார் (சாஸ்தா) கோவில் (பேச்சு வழக்கில் சாத்தான்கோவில்) வந்துவிட்டது.

DSC03154

(கேமரா கொண்டு போகாததால் சும்மா ஒரு இயற்கைக்காட்சி : ஆனா இது எங்க ஊருதான்..)

மிகப்பெரிய குளத்தின் கரையில் ஒரு பெரிய ஆலமரத்தின் விழுதுகளுக்கு நடுவே யானையின் மேல் கம்பீரமாக பயமுறுத்தும் மீசை, அரிவாளுடன் அய்யனார் அமர்ந்திருந்தார். அவரை சுற்றி கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல்வெளிகள். அதிகாலை நேரமேன்பதால் குளிர்காற்று அடித்துக் கொண்டிருந்தது. டாட்டா சுமோவை ஒரு வயல்வெளியின் ஓரத்தில் நிறுத்திவிட்டு அனைத்து பொருட்களையும் இறக்கி வைத்தோம். கருங்கல்லால் அடுப்பு தயார் செய்து பானை வைத்து 'பொங்கல்' வைக்க அம்மா தயார் ஆகினார். அபிஷேகத்திற்கு அப்பா தயாரானார். நானும் என் நண்பரும் நாங்கள் கொண்டுவந்த இரண்டு ஆடுகளை வதம்செய்ய தயாரானோம்.

அடுத்த ஒரு மணிநேரத்தில் அனைவரின் வேலைகளும் முடிந்துவிட, பால், மோர், தயிர், தேன், இளநீர், திருநீர், மஞ்சள், குங்குமம், சந்தனம், சவ்வாது, பஞ்சாமிர்தம் போன்றவற்றால் அய்யனார் குளித்து பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பொங்கல், அசைவம் படைக்கப்பட்டு அழகாக காட்சிக்கொடுக்க குடும்பத்தோடு வணங்கினோம். பிறகு அரைமணிநேரம் ஓய்வு எடுத்துவிட்டு பிறகு வந்ததைபோல் திரும்ப வீடு வந்தோம். மனதிற்கு நிறைவான ஒரு கோவில் பயணம்.

நாகரிக காலத்தில், இயந்திர வாழ்க்கையில் பலருக்கு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு செல்வதற்குக்கூட நேரமில்லை. தமிழகத்தின் தென்மாவட்ட மக்கள் எத்தனை கோவிலுக்கு சென்றாலும் எல்லோருக்கும் அவர்களுக்கென்று ஒரு கோவில் இருக்கும். அதுதான் சாஸ்தா கோவில். ஆயிரம் கடவுள்கள் இருந்தாலும் ஒருவனுடன் எந்த சூழலிலும் அவனுக்கு துணையாக அவன் மறந்தாலும், வராமலே போனாலும், அவன்கூடவே அவனுக்காகவும் அவன் குடும்பத்திற்காகவும் வாழ்நாள் முழுதும் துணைநிற்பது அவனது சாஸ்தா மட்டும்தான்.

.

Friday, April 3, 2009

"தீ" எங்களுக்கு சாதாரணம்!

சென்ற ஞாயிற்றுகிழமை காலை 11 மணியளவில் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் உள்ளே 'ஹிக்கிம் பாதம்ஸ்' மேலே திடீரென மின்கசிவு ஏற்பட்டது. அது உடனே கண்டுபிடிக்கப்பட்டு தீ விபத்தாக மாறுவதற்குள் கட்டுபடுத்தப்பட்டது. இதற்கிடையில் அது தீ விபத்தாக மாறகூடாது என்பதற்காக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் கொடுத்து சரியாக நான்கு நிமிடங்கள்கூட இருக்காது. முழு வேகத்துடன் எச்சரிக்கை மணியோசையுடன், மாற்றுபாதைக்காக போர்டிகோ முன் வைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு வேகமாக உள்ளே வந்து வண்டி நின்றது. வண்டியின் வேகம் கூட குறையவில்லை அதற்குள் அதனிள் இருந்து வேகவேகமாக வீரர்கள் குதிக்க,இரண்டு நபர்கள் மின் கசிவு ஏற்பட்ட இடத்தை நோக்கி ஓட,மற்ற வீரர்கள் அடுத்த சில விநாடிக்குள் எல்லா உபகரணங்களையும் தயார்செய்து மின்கசிவு ஏற்பட்ட இடம்வரை தண்ணீர் பைப் இணைத்து தண்ணீரை பீய்ச்சீ அடிக்க தயாராகிவிட்டனர்.

முன்னே சென்ற இருவரும் தண்ணீர் தேவையில்லை என்று கூறியதும் அனைத்தையும் எடுத்த வேகத்திலே திரும்ப வைத்தனர்.இது அவர்களுக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று.வண்டியை ஓட்டி வந்த டிரைவர் ஈரமான யூனிபார்ம் போட்டிருந்தார். 'ஏன் சார் என்னாச்சு?' என்ற‌தற்கு 'டுயூட்டி முடிந்துவிட்டது. அதான் யூனிபார்மை துவைத்து குளித்து கொண்டிருந்தேன். டுயூட்டியில் இருந்த டிரைவர் தலைவலி என்று மாத்திரை வாங்க மெடிக்கல் போயிருந்தார். அதற்குள் போன் வர அப்படியே டிரஸை போட்டுவிட்டு வந்துவிட்டேன். யூனிபார்ம் நனைந்திருந்தால் என்ன? காய்ந்திருந்தால் என்ன? எப்படியும் நனையரதுதானே எங்க வேலை!' என்று நகைத்தவாறே வண்டியை நகர்த்தினார்.


இவர்களிடம் எனக்கு பிடித்தது; தீ என்பது மட்டும்தான் குறிக்கோளே தவிர அதற்கிடையில் இருந்த போக்குவரத்து நெரிசல், தடுப்பு சுவர், இவர்களை வரவேற்க நிற்கும் ஊழியர்கள்,இவர்களிடம் சம்பவத்தை விளக்க நிற்கும் அதிகாரிகள், வேடிக்கை பார்க்கவந்து இடஞ்சல் செய்யும் பொதுமக்கள் போன்றவர்கள் அல்ல. இவர்கள் அனைவரை பற்றியும் சிறிதள‌வுகூட தனது எண்ணங்களில் இடம் கொடுக்காமல் வேகமாக செயல்பட்டது.
இவர்களுக்காக வருந்துவது; தீயணைப்புக்கு மட்டுமல்லாமல் அனைத்துவிதமான மீட்பு பணிக்காகவும் பயன்படுத்தப்படும் இவர்களின் சம்பளவிகிதம் மற்ற யூனிபார்முகளோடு ஒப்பிட்டால் மிகமிக குறைவு என்பதுமட்டும் மனதிற்கு வருத்தமளிக்கிறது.


.