Showing posts with label பயணங்கள். Show all posts
Showing posts with label பயணங்கள். Show all posts

Sunday, June 28, 2009

இரயிலில் பயணம் செய்பவர்களா நீங்கள்...?. ( இரண்டாம் பாகம் )

இரயிலில் ப‌யணம் செய்பவர்களா நீங்கள்? என்ற என் பதிவிற்கு நல்ல வரவேற்பு கொடுத்த நண்பர்களுக்கு நன்றிகள்.

இனி இரண்டாம் பாகம்..

எல்லோருமே இரயில் பயணம் செய்திருப்பீர்கள். பயணங்களில் எல்லோரும் இரயில் பயணங்களையே மிகவும் விரும்புவர். இரயில் பயண‌ம் சுகமான பயணமாக இருந்தாலும் சில நேரங்களில் சிலருக்கு பிரச்சனைகளை தரக்கூடிய பயணமாக முடிகிறது. இரயில் பயணம் ஆரம்பம் முதல் முடியும் வரை பிரச்சனைகள் இருந்தாலும், ( முந்தைய பதிவில் இரயில் ஏறும் வரை உள்ள பிரச்சனைகளை பார்த்தோம்.) இரயிலில் ஏறிய பிறகு சந்திக்கும் சில‌ பிரச்சனைகளுக்கு எனக்கு தெரிந்த தீர்வுகளை சொல்கிறேன். ( இந்திய இரயில்வேக்கு மட்டும்).

1. தவறவிடும் நிலை :

கடைசி நேரத்தில் வரும் பயணிகள் தனக்கு ஒதுக்கப்பட்ட பெட்டிக்கு செல்வதற்குள் இரயில் நகர்ந்து விட ஏறமுடியாமல் தவறவிடுவது.
தீர்வு: கடைசி நிமிடத்தில் வரநேரும் பொழுது ப்ளாட்பாரத்திற்குள் நுழைந்ததும், ப்ளாட்பாரத்தின் முன்னே என்ஜின் அருகே உள்ளே சிக்னலை கவனிக்கவும். சிகப்பு விளக்கு எரிந்தால் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டிக்கு பதட்டமில்லாமல் செல்லுங்கள். மஞ்சள் அல்லது பச்சை விள‌க்கு எரிந்தால் உடனடியாக தங்களுக்கு அருகில் உள்ள பெட்டியில் ஏறிவிடுங்கள். அனைத்து இரயில்களிலும் பெட்டிகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருப்பதால் இரயில் கிளம்பினாலும் பெட்டியின் உள்ளேயே நடந்து தாங்கள் இருக்கைக்கு செல்லமுடியும். அவ்வாறு இல்லாமல் பெட்டி துண்டிக்கபட்டிருந்தாலும் அடுத்த நிறுத்ததில் நீங்கள் தங்கள் பெட்டிக்கு மாறிவிடலாம். அடுத்த நிறுத்தம்வரை தங்கள் இருக்கையில் வேறு நபர் அனுமதிக்கப்படுவதில்லை.

2. அபாயசங்கலி :

ஏதாவது ஒரு காரணத்தால் பிரச்சனை ஏற்பட்டு இரயிலை நிறுத்த வேண்டிய சூழ்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் திணறுவது.
இதற்கு அபாய சங்கிலியை பயன்படுத்தலாம். உடனே இரயில் நிறுத்தப்படும். இவ்வாறு நிறுத்தும்போது சரியான காரணங்களுக்கு மன்னிக்கவும், தவறான காரணங்களுக்கு தண்டிக்கவும் உட்படுத்தபடுவீர்கள்.

மன்னிக்கப்படும் காரணங்களில் சில :

இரயில் இருந்து யாரும் தவறி விழுந்து விடுவது,
உடல் நலகுறைவு ஏற்படும்போது,
தங்களுக்கும் தங்கள் உடமைகளுக்கும் பாதிப்பு ஏற்படும்போது,
நிர்வாக தவறாக கருதப்படும் பெட்டியில் தண்ணீர் இல்லாமலும்,
மின்சார இணைப்பு துண்டிக்கபட்டிருந்தாலும் இதுப்பற்றி முறைப்படி
டிக்கெட் பரிசோதகரிடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காதபோது,

தண்டிக்கப்படும் காரணங்களில் சில :

தங்கள் கவனகுறைவால் தனது உடமைகளை இரயில் இருந்து தவறவிடும்போது,
தாமதமாக வந்து தன்னுடன் பயணம் செய்யும் நபர் இரயில் ஏறுவதற்காக பயன்ப‌டுத்தும்போது,
விளையாட்டு எண்ணத்துடன் பயன்படுத்தும்போது,

இவ்வகை தண்டனைக்கு ரூ.1000 அபதாரம் அல்லது சிறைதண்டனை விதிக்கப்படும்.

3. காவல்துறை :

இரயிலில் தங்களுக்கோ தங்கள் உடமைகளுக்கோ பாதிப்பு ஏற்படும் வண்ணம் யாரேனும் நடந்துகொண்டாலோ அல்லது ச‌ந்தேகம் ஏற்பட்டாலோ உடனடியாக தங்கள் பாதுகாப்புக்காக தங்களுடனே பயண‌ம் செய்யும் நடமாடும் காவல்துறை அல்லது டிக்கெட் பரிசோதாகர் மூலம் இரயில் நிலையத்தில் உள்ள காவல்நிலையத்தை தொடர்புகொள்ள‌வும்.

சிறு தகவல்கள் :

(அ) பெட்டியில் ஏறியவுடன் பெட்டியில் ஒட்டப்பட்டிருக்கும் காவல்துறை கட்டுபாட்டு அறை மற்றும் பெண்கள் உதவி மையம் மற்றும் அவசரஉதவி போன்றவற்றின் தொலைபேசி எண்களை தங்கள் செல்போனில் டையல் செய்து வைத்து கொள்ளவும்.

(ஆ) இரயில் ஏறியவுடன் தண்ணீர், விளக்கு, விசிறி போன்றவை சரியாக உள்ளனவா? என பரிசோதித்து கொள்ளவும்.

(இ) தங்கள் இருக்கைக்கு அருகாமையில் உள்ள ஜன்னல் கம்பிகள், கதவுகள் மற்றும் படுக்கை பிடிப்பு கம்பிகள் சரியாக உள்ளதா என சரிபார்த்து கொள்ளவும்.

(ஈ) தங்கள் இருக்கைக்கு கீழ் உள்ள‌ பாதுகாப்பு சங்கலியில் தங்கள் உடமைகளை வைத்து பூட்டிக்கொள்ளவும்.

தொடரும்...


.

Friday, May 29, 2009

இரயிலில் பயணம் செய்பவர்களா நீங்கள்...?.

எல்லோருமே இரயில் பயணம் செய்திருப்பீர்கள். பயணங்களில் எல்லோரும் இரயில் பயணங்களையே மிகவும் விரும்புவர். இரயில் பயண‌ம் சுகமான பயணமாக இருந்தாலும் சில நேரங்களில் சிலருக்கு பிரச்சனைகளை தரக்கூடிய பயணமாக முடிகிறது. இரயில் பயணம் ஆரம்பம் முதல் முடியும் வரை பிரச்சனைகள் இருந்தாலும், முதலில் இரயில் ஏறும் வரை உள்ள பிரச்சனைகளுக்கு எனக்கு தெரிந்த தீர்வுகளை சொல்கிறேன். ( இந்திய இரயில்வேக்கு மட்டும்).

1. பி.என்.ஆர்.:

பயணம் செய்ய முடிவு செய்து டிக்கட் ரிசர்வ் செய்வதில் சிலருக்கு காத்திருப்போர் பட்டியலில் இடம் கிடக்கிறது. இவர்கள் இரயில் ஏறும் வரை தமக்குண்டான சீட் உறுதியாகிவிட்டாதா? என்பதில் குழப்பம். இதற்கு தீர்வு...
உங்கள் கையில்., ஆம்.. உங்கள் செல்போனில் மெஸேஜ் பகுதிக்கு சென்று டிக்கட்டில் உள்ள பி.என்.ஆர். எண்ணை மட்டும் டைப் செய்து 9773300000 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள், பதில் கிடைக்கும்.

2. இலவச கார் வசதி:

வயதானோர், ஊனமுற்றோர், கர்ப்பிணிப் பெண்கள் போன்றோருடன் நீங்கள் பயணம் செய்யும்போது அவர்களை உங்களது இருக்கைக்கு அழைத்து செல்ல சிரமப்படுவீர்கள். இதற்கான தீர்வு: இரயில் நிலைய வாசலுக்கு வந்தவுடன் தங்கள் டிக்கெட்டை எடுத்துக்கொண்டு நிலைய மேலாளர் அலுவலகம் செல்லுங்கள். அங்கு தயாராக நிறுத்தப்பட்டுள்ள பேட்டரியில் இயங்கும் சிறியரக கார் உங்கள் குடும்பத்தாரை த‌ங்கள் இருக்கைக்கு அழைத்துச் செல்லும். இது ஒரு இலவச சேவையாகும். ( இவ்வசதி முக்கிய இரயில் நிலையங்களில் மட்டுமே உள்ளது. ஆனால் அனைத்து இரயில் நிலையங்களிலும் இலவச சக்கரநாற்காலி கிடைக்கும்.)

3. உடனடிப் பதிவு:

சில சமயங்களில் திடீரென இரயிலில் பயணிக்க வேண்டியிருக்கும் அப்போது டிக்கெட் கிடைக்காது என்று வருத்தப்பட்டு பஸ்ஸில் செல்வதுண்டு. இதற்கு.. இரயில் கிளம்பும் இரண்டு மணி நேரத்திற்கு முன் இறுதிப்பட்டியில் தயார் செய்யப்படும். இதற்குபின் காலியாக உள்ள வி.ஐ.பி மற்றும் சில முக்கியபிரிவுகளுக்கான இடஒதுக்கீடு இருக்கை மற்றும் கடைசி நேரத்தில் ரத்து செய்யும் இருக்கைக்கான டிக்கெட் வழங்கப்படும். முயற்சிக்கலாம்.

4. சாதாரண டிக்கெட்:

பதிவு செய்யாமல் இரண்டாம் வகுப்பு பிரிவில் செல்லும் பயணிகள் எப்பொழுதுமே கடைசி நேரத்தில் கவுண்டரில் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். இதற்கு... அனைத்துவிதமான‌ இரயில் நிலையங்களிலும் இந்தவகை டிக்கெட்டுகள் வழங்கப்படும். அதோடு மட்டுமல்லாமல் இந்த வகை டிக்கெட்டுகள் மூன்று நாட்களுக்கு முன்னதாகவே வாங்க முடியும். ( முக்கியமாக.., சென்னையில் வசிக்கும் பயணிகள் கடைசி நேரத்தில் சென்ட்ரல் மற்றும் எழும்பூர் இரயில் நிலையங்களில் காத்திருக்காமல், சென்னையின் அனைத்து புறநகர் இரயில் நிலையங்களிலும் மூன்று நாட்களுக்கு முன்னதாகவே இவ்வகை டிக்கெட் பெறலாம்.) தேவையில்லை என்றால் கூட இந்தவகை டிக்கெட்டையும் ரத்து செய்யமுடியும். இதற்கான கட்டணம் 10 ரூபாய்.

5. தவறவிடும் இரயில்கள்:

கடைசி நேரத்தில் இரயிலை தவறவிடும் நிலை ஏற்பட்டால் நீங்கள் செய்ய வேண்டியது... பயணிகள் சேவை மையத்திற்கு செல்லுங்கள். தங்கள் பயணம் முக்கியமானதாகவும், தாமதத்திற்கான காரணங்கள் ஏற்புடையாதகவும் இருந்தால்,அடுத்த இரயிலில் இடம் இருக்கும் பட்சத்தில் மாற்றி தர‌ வழிவகை செய்யப்படும். இவ்வகை டிக்கெட்டினை ரத்து செய்யவும் முடியும்.

சிறு தகவல்கள்:

1. இரயில் கிளம்பும் ஒரு மணிநேரத்திற்கு முன்புதான் இரயில்பெட்டிகள் தண்டவாளத்திற்கு கொண்டுவரபட்டு,கதவுகள் திறக்கப்பட்டு,மின் இணைப்பு கொடுக்கப்படும்.

2.இரயில் கிளம்பும் முக்கால் மணிநேரத்திற்கு முன்புதான் இரயில் நிலையத்தின் நுழைவுவாயல் பகுதியில் தங்கள் டிக்கெட்டின் இறுதிநிலை பற்றிய வகுப்புவாரியான பட்டியல் ஒட்டப்படும்.

3. இரயில் கிளம்பும் அரை மணிநேரத்திற்கு முன்புதான் தங்கள் இருக்கைக்கான எண் மற்றும் பெட்டி எண் கொண்ட இறுதிப்பட்டியல் பெட்டியில் ஒட்டப்படும்.

4. இரயில் கிளம்பும் கால் மணிநேரத்திற்கு முன்புதான் டிக்கெட் பரிசோதகர் தங்கள் பெட்டி அருகே வருவார்.(மூன்று பெட்டிக்கு ஒருவர்).

தொட‌ரும்...

.

Friday, April 10, 2009

நானும் என் சாத்தானும்!

கடந்த 8ம் தேதி பங்குனி உத்திரம். அதிகாலை 1.30 மணியளவில்..

"ஏலே.. எழுந்திரு.. நேரமாயிடுச்சு. சீக்கிரம் கிளம்பு.. அப்பா ஏசிகிட்டுயிருக்கு. " அம்மா சொல்ல..

வேகமாக எழுந்து பல்துலக்கி, கடமைகளை முடித்துவிட்டு, வேஷ்டி, சட்டை அணிந்து 15 நிமிடத்தில் கிளம்பி விட்டேன்.

'அந்த வீட்டில் பழங்கள் இருக்கு போய் பஞ்சாமிர்தம் போடு. போ' அப்பா சொல்ல..

வேகமாக பக்கத்தில் எங்களுக்கு சொந்தமான இன்னொரு வீட்டிற்கு ஓடிப்போய் பழங்களை வெட்ட ஆரம்பித்தேன். மா, வாழை, மாதுளை, திராட்சை, அன்னாசி, கொய்யா, ஆப்பிள், ஆரஞ்சு, கற்கண்டு, தேன், பேரிட்சை போன்றவற்றை சேர்த்து ஒரு குவளை இட்டு கைகளால் கசமுசவென பிசைந்துவிட்டு 'பஞ்சாமிர்தம் ரெடி' என்றேன்.

அதற்குள் டாட்டா சுமோ வந்துவிட, 'சரி, சரி போய் வண்டியில் எல்லாவற்றையும் ஏற்று' என்று கமெண்ட் வந்தது. அனைத்து பொருட்களையும் வண்டியில் ஏற்றியதும் அப்பா, அம்மா, நான், என் மனைவியார், என் வாரிசு மற்றும் எனது நண்பர் ஒருவருடன் வண்டி கிளம்பும்போது சரியாக 2.45 இருக்கும். சரியாக இரண்டு மணி நேரம் பயணம். எங்களுக்கு சொந்தமான எங்கள் குலதெய்வமான ஆனைமேல் அய்யனார் (சாஸ்தா) கோவில் (பேச்சு வழக்கில் சாத்தான்கோவில்) வந்துவிட்டது.

DSC03154

(கேமரா கொண்டு போகாததால் சும்மா ஒரு இயற்கைக்காட்சி : ஆனா இது எங்க ஊருதான்..)

மிகப்பெரிய குளத்தின் கரையில் ஒரு பெரிய ஆலமரத்தின் விழுதுகளுக்கு நடுவே யானையின் மேல் கம்பீரமாக பயமுறுத்தும் மீசை, அரிவாளுடன் அய்யனார் அமர்ந்திருந்தார். அவரை சுற்றி கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல்வெளிகள். அதிகாலை நேரமேன்பதால் குளிர்காற்று அடித்துக் கொண்டிருந்தது. டாட்டா சுமோவை ஒரு வயல்வெளியின் ஓரத்தில் நிறுத்திவிட்டு அனைத்து பொருட்களையும் இறக்கி வைத்தோம். கருங்கல்லால் அடுப்பு தயார் செய்து பானை வைத்து 'பொங்கல்' வைக்க அம்மா தயார் ஆகினார். அபிஷேகத்திற்கு அப்பா தயாரானார். நானும் என் நண்பரும் நாங்கள் கொண்டுவந்த இரண்டு ஆடுகளை வதம்செய்ய தயாரானோம்.

அடுத்த ஒரு மணிநேரத்தில் அனைவரின் வேலைகளும் முடிந்துவிட, பால், மோர், தயிர், தேன், இளநீர், திருநீர், மஞ்சள், குங்குமம், சந்தனம், சவ்வாது, பஞ்சாமிர்தம் போன்றவற்றால் அய்யனார் குளித்து பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பொங்கல், அசைவம் படைக்கப்பட்டு அழகாக காட்சிக்கொடுக்க குடும்பத்தோடு வணங்கினோம். பிறகு அரைமணிநேரம் ஓய்வு எடுத்துவிட்டு பிறகு வந்ததைபோல் திரும்ப வீடு வந்தோம். மனதிற்கு நிறைவான ஒரு கோவில் பயணம்.

நாகரிக காலத்தில், இயந்திர வாழ்க்கையில் பலருக்கு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு செல்வதற்குக்கூட நேரமில்லை. தமிழகத்தின் தென்மாவட்ட மக்கள் எத்தனை கோவிலுக்கு சென்றாலும் எல்லோருக்கும் அவர்களுக்கென்று ஒரு கோவில் இருக்கும். அதுதான் சாஸ்தா கோவில். ஆயிரம் கடவுள்கள் இருந்தாலும் ஒருவனுடன் எந்த சூழலிலும் அவனுக்கு துணையாக அவன் மறந்தாலும், வராமலே போனாலும், அவன்கூடவே அவனுக்காகவும் அவன் குடும்பத்திற்காகவும் வாழ்நாள் முழுதும் துணைநிற்பது அவனது சாஸ்தா மட்டும்தான்.

.