Wednesday, January 28, 2009

காதலே நிம்மதி!

நாம் வாழ்க்கையிலும்,சினிமாவிலும் எத்தனையோ விதமான காதலை சந்தித்ததுண்டு. இது போல என் நண்பரின் காதலும் கொஞ்சம் வித்தியாசமானது...

'பாலா' என்னுடன் பணிபுரியும் சக ஊழியர். காதல் மீது ஆர்வம் இல்லாமல் தனிகாட்டு ராஜாவாக வாழ்ந்த பாலாவின் வாழ்வில்..
"தன்னுடன் +2 வரைப் படித்த பக்கத்து ஊரில் வசிக்கும்பெண் திடீரென தனது காதலை இவரிடம் வெளிப்படுத்த"...
'தனக்கு ஞாபகமே இல்லாத பெண்' ஒருவர் தன்னிடம் நேரிடையாக தன் காதலை வெளிப்படுத்தியதால் மகிழ்ச்சியுடன் காதலை ஏற்றுக்கொண்டார்.

ஒரு வருடம் ஓடியது..

அடிக்கடி சந்தித்துக்கொண்டதாலும்,போனில் பேசிக்கொண்டதாலும் இவர்கள் காதல் இவர்களின் பெற்றோருக்கு தெரிய வந்தது. பாலாவின் வீட்டில் காதலை ஏற்றுக்கொண்டனர். அவர் காதலி வீட்டிலும் பாலாவின் பணி,குணநலன் பற்றி விசாரித்து சம்மதித்தனர்.
தை மாத‌ம் நிச்ச‌ய‌தார்த்த‌ம் செய்ய‌ எண்ணி,
பொருத்தம் பார்ப்பதற்காக போனில், பெண்ணின் தந்தை பாலாவிடம், நட்சத்திரத்தை கேட்க...

பாலா "கேட்டை" என்று கூறினார்.

அன்று இரவே அப்பெண் பாலாவிற்கு போன் செய்து,
'நட்சத்திரம் பொருத்தம் இல்லை'[கேட்டை நட்சத்திரம் பெண்ணின் அண்ணனுக்கு ஆகாதாம்]. அதனால் அப்பா, 'கல்யாணத்திற்கு சம்மதிக்க மாட்டேன். என்கிறார்' என்றது.
பாலா 'என்ன செய்வது?' என்று தெரியாமல்,
நாங்கள் தங்கியிருக்கும் அறையையே குழப்பத்தில் ஆழ்த்தினார்.
நாங்கள் அனைவரும் ஒன்றாக "உடனடியாக ஊருக்கு சென்று அந்த பெண்னை கூட்டிக்கொண்டு வாருங்கள் பதிவு திருமணம் செய்து விடலாம்" என்று சொல்ல.. உடனடியாக ஒரு வாரம் லீவு எடுத்துக்கொண்டு ஊருக்கு சென்றார். லீவு முடித்து வந்த பாலாவை அனைவரும் கட்டியணைத்து வரவேற்றோம்.


விடுமுறையில்;

ஊருக்கு சென்ற பாலா ஜாதகத்தைப் பற்றி, இரண்டுபக்க பெற்றோரும் நேரிடையாக பேசாததை உணர்ந்தார். 'தான் கவனிக்காமல் வேறு நட்சத்திரத்தை சொல்லிவிட்டதாக' பெண்வீட்டில் கூறிவிட்டு..

தனது பெற்றோரை கஷ்டபட்டு சம்மதிக்க வைத்து, தனது காதலியின் அமோக ஆதரவுடன், தனக்கு தெரிந்த ஜோதிடரை வைத்து, பெண்ணின் நட்சத்திரத்திற்கேற்ப தனது நட்சத்திரத்தை மாற்றி, ஜாதகத்தை புதிதாக தயார் செய்து, இச்சம்பவ‌ம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக பாதுகாத்து, ஜாதகத்தை பெண் வீட்டில் கொடுத்து,

"நிச்சயதார்த்தத்தை" முடித்து விட்டார்.
விரைவில் திரும‌ணம்.

Tuesday, January 20, 2009

இரவில்... மருத்துவமனை!

என் மனைவியின் பிரசவத்திற்காக ஒரு வாரகாலம்
திருநெல்வேலி டவுணில் உள்ள
ஒரு நர்சிங் ஹோமில்(பெயர் வேண்டாமே..) தங்கியிருந்தேன்.

பகல்:
காலை 7 மணிக்கு ஒவ்வொரு அறையாக மருத்துவமனை முழுவதும் 'டெட்டால்' போட்டு சுத்தமாக துடைக்கின்ற‌னர்.
8 மணிக்கு டாக்டர் விசிட் வருகிறார். அவர் வருவதற்கு முன் குறைந்த‌து இரண்டு முறையாவது நர்ஸ் வந்து "அறையை சுத்தமாக வையுங்கள், துணியை மடித்து வையுங்கள், பாத்திரத்தை ஓரமாக வையுங்கள், 'பேஷ‌ண்டோட' அம்மா மட்டும் இருங்க.. மத்தவங்கெல்லாம் வெளியே இருங்க" என்கின்றனர்.

டாக்டர்களும் நல்ல முறையில் செக்கப் செய்து 'ஆறுதல் வார்த்தைகளை' அமைதியாக சொல்லி செல்கின்றனர்.

அடுத்து 12 மணி, 6 மணி என்று விசிட் வருகின்றனர்.
நோயாளிகளுக்கு அவசரம் என்றால்
உடனே வந்து பார்க்கிறார்கள்.
நோயாளிகளுக்கு தேவையான உணவுகளை
அவர்களே தயார் செய்து தருகிறார்கள்.

மருத்துவமனையே சுத்தமாகவும், அமைதியாகவும் இருக்கிறது.


இரவு:
மருத்துவமனையின் முக்கிய மருத்துவர்கள் அனைவரும்
வீட்டிற்கு சென்று விட
இரவு மருத்துவர் ( அவர் பயிற்சி மருத்துவர்) மட்டும் இருக்கிறார்.
8 மணிக்கு கடைசி விசிட்க்கு மட்டும் அவர் வந்து செல்கிறார்.
அவர் விசிட் முடிந்தவுடன் அவருக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு செல்கிறார். அதன் பிறகு மருத்துவமனையின் நிலையே வேறு...

நர்சுகள், ஊழியர்கள் அவரவர் வேலையை வேகமாக முடித்துவிட்டு
9 மணிக்குள் ரிசப்சன் ஹாலுக்கு வந்துவிட அனைவரின் கையிலும் சாப்பாட்டுத்தட்டு.
பலகருத்துகளை பரிமாறிக்கொண்டு (கூச்சலிட்டுக்கொண்டு) சாப்பிடுகின்றனர். பிறகு டி.வி யை போட்டு சவுண்ட் அதிகமாக வைத்துக்கொண்டு அனைவரும் டி.வி யுடன் சேர்ந்து கூத்தடிக்கின்றனர்.
குறுகலான சதுரவடிவ கட்டிடம் என்பதால் "டி.வி சவுண்ட்" கட்டிடம் முழுவதும் அதிர்கிறது.
அதிகபட்சமாக இரவு 1.30 மணி வரை ஓடுகிறது.
அது மட்டுமல்லாமல் அனைவரும் ஒன்று சேர்ந்து (நர்ஸ் உடையுடன்)சத்தமிட்டு ஆடுகின்றனர்.
பிறகு அனைவரும் இழுத்துமூடி தூங்குகின்றனர்.
நோயாளிகளுக்கு அவசரம் என்றாலும், டிரிப்ஸ் மாத்துவதற்கு
அழைத்தாலும் 'வருகிறேன்' என்று கூறிவிட்டு தாமதமாக வருகின்றனர். இரண்டுதடவை 'டிரிப்' முடியும் நேரம் நானே அதை நிறுத்திவிட்டு மீண்டும் அவர்களை அழைக்க சென்றுள்ளேன்.
இரவு அவசரத்திற்கு கடைக்கு செல்வதற்கு
கதவை திறப்பதற்கு ஊழியரை எழுப்பினால்,
'முடியாது. காலையில் வாங்கிக்கொள்ளவும்' என்று விரட்டுகிறார்.
மருத்துவமனையில் தங்கியுள்ள அனைவரும் தங்களுக்குள் புலம்புவது மனதிற்க்கு கஷ்டமாக உள்ளது.
விடிந்தவுடன் பார்த்தால் அனைவரும் நல்லவர்கள் போல நடந்துகொள்கிறார்கள்.

'இதை தட்டிகேட்டே தீருவேன்' என்று நான் கிளம்ப...
'நமக்கெதுக்கு இதெல்லாம்' என்று என் மனைவி சொல்ல...
அதையும் மீறி மருத்துவரை சந்திக்க...
மருத்துவமனை அமைதியாகிவிட்டது.
ஆனால் என் மனைவி இன்னும் அமைதியாகவில்லை.

.

Thursday, January 8, 2009

பயணம் _ மீண்டும்!

ஒரு சின்ன ஓவிய குவியல் ‍_ அஞ்சல்
அவள் நினைவுகளை தாங்கி வரும்...


என் இனிய பேனாஓய்வு பொழுதில் ஓய்வில்லாமல்
அவளை எழுதி கொள்ளும்...


யாரோ எழுதிய கிறுக்கல்களின்
உள்ளே அவள் முகம்...


பல ஒலிநாடா _ அவள்
புன்னகையை சிந்தும்...

வழி மறிக்கும்போக்குவரத்து நெரிசல்! _ என்னை
பழைய நினைவுகளில்
பயணிக்கச்செய்யும்...


காலை நேர பனித்துளி _ என்னை
குளிர்விக்கும் அவள் நினைவால்...


இன்னபிற யாவும்,
ஏமாற்றமே இன்றி
அவளை
என்னிடம் ஒப்படைத்து
செல்லும்.


கால‌ம் எல்லா நிஜ‌ங்க‌ளையும்
நிழ‌ல்க‌ளாக‌ மாற்றிய‌து
ஆனால்..
இடைவெளி வ‌ந்த‌(ச‌ந்திப்பில் ம‌ட்டும்)பின்னும்
நெஞ்சில் ஆடும் காத‌ல்!.
இன்னும் மாற‌வில்லை எதுவும்!...

Thursday, January 1, 2009

சாமிகளுக்கு தனி கிளாஸ்!

திருநெல்வேலி, ஈரடுக்கு மேம்பாலத்திற்கு கீழ்உள்ள பழைய 'தளபதிஒயின்ஸ்' அருகில் நானும் என‌து நண்பரும் பேசிக்கொண்டிருந்தோம்.

அப்போது எங்களை தாண்டிச்சென்ற ஒருவர் மீது எங்கள் கவனம் சென்றது. அவர் 25 வயது மதிக்கதக்க ஒரு வாலிபர். பேண்ட்சர்ட் டக் இன் செய்து, நான்கு நாள் தாடி, நெற்றியில் சந்தனபொட்டு வைத்திருந்தார். உற்றுக் கவனித்தேன்.. அவர் கோவிலுக்கு செல்ல மாலை போட்டிருந்தார். ஆனால் காலில் செருப்பு போடவில்லை. உடனே என் நண்பரிடம்,

"இவ்வளவு லட்சணமாக டிரஸ் பண்ணின இவர் செருப்பு போடாதது நல்லாவே இல்லை".

"அவர் கோவிலுக்கு செல்ல மாலை போட்டிருப்பதால் செருப்பு போடாமல் இருக்கிறார்".

"மாலை போட்டுவிட்டு காலில் செருப்பு போடாமல் வெளியில் செல்லும்போது தெருக்களில் உள்ள எச்சில் போன்ற பல அசுத்தங்களை மிதிப்பதைவிட செருப்பை சுத்தமாக வைத்துக்கொண்டும், அடிக்கடி நீரினால் கழுவிக்கொண்டும் செல்லவேண்டியதுதானே?"

"மாலை போட்டிருப்பவர்களைப் பற்றி அப்படி பேசாதே! அது தப்பு! அதுபாவம்!"

"சரிப்பா! நமக்கெதுக்கு இதெல்லாம். வா!.. போகலாம்". என்று நண்பரை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள "டாஸ்மாக்" பார்‍ உள்ளே சென்றேன். டேபிளில் அமர்ந்து ஆர்டர் கொடுத்துவிட்டு, பேசிக்கொண்டிருக்கும்போது சுவரில் மாட்டப்ப‌ட்டிருந்த போர்டை பார்த்தேன்..

ஒரு நிமிடம் திகைத்து விட்டு, என் நண்பரிடம் அந்த போர்டை காட்டினேன். அதை பார்த்த என் நண்பர், "இஈஈ..." என இளித்தவாறு எனை பார்த்தார். மீண்டும் ஒருமுறை நான் அதை வாசித்தேன்.

"மாலை போட்டுவரும் சாமிகளுக்கு தனி கிளாஸ் பயன்படுத்தப்படுகிறது."