Tuesday, October 20, 2009
நலமா? நண்பர்களே...
தீபாவளி திருநாளை திருப்தியாக முடித்து திகைத்திருக்கும் என் நண்பர்கள் அனைவரின் நலமறிய என் மனது துடித்துகொண்டிருக்கிறது.
தீபாவளிக்கு விடுமுறை கிடைக்காமல் இன்றுதான் ஓய்வு கிடைத்தது. அதான் நலம் விசாரிக்க வந்தேன்......
நலமா ? நண்பர்களே....
Saturday, August 15, 2009
வரும்போதெல்லாம் விருது !
![[Award_Image[2]_thumb.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-2l38alhWgO22Wl5ouY5JB4YQoPCc5AuNT2YlnySOjz-oII90845NoqJLmotC9xFwrXan_2jcf_Kskjb5_5GgkAZf-wIfrUtFXDE8k3sqGsJZwF9XBNyuC0Lh9Hdun5Hx9pqDhkgw6Ysl/s1600/Award_Image%5B2%5D_thumb.jpg)
Wednesday, July 29, 2009
வராவிட்டாலும் விருது வாங்குவோம்ல?!

சுமார் இரண்டு மாதங்களாக பதிவுலகிற்கே வராவிட்டாலும் விருது வாங்கியிருப்பது என் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.எனக்கு இவ்விருது வழங்கிய சகோதரி காயத்ரி அவர்களுக்கு என் இதயங்கனிந்த நன்றிகள்.
தீவிரவாத தாக்குதல் நடக்காமலிருப்பதற்காக இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தியிருப்பது பற்றி தாங்கள் அனைவரும் அறிந்ததே! இச்சூழல் காரணமாக கடந்த சில மாதங்களாக பணிபளு அதிகமாகியுள்ளது. ( கடைசியாக நான் எடுத்த என்னுடைய வார ஓய்வு ஜுன் 14. )
எங்கிருந்தாலும் என் மனதில் பதிவுலக நண்பர்கள் பற்றி ஒரு எண்ணம் ஓடிக்கொண்டிருக்கும். நேரம் கிடைக்கும்போது பதிவோடும்,பின்னூட்டங்களோடும் உங்களை சந்திக்கிறேன்.அதுவரை என்னை மனதில் நினைத்திருக்கும் என் பதிவுலக நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
Sunday, June 28, 2009
இரயிலில் பயணம் செய்பவர்களா நீங்கள்...?. ( இரண்டாம் பாகம் )
இனி இரண்டாம் பாகம்..
எல்லோருமே இரயில் பயணம் செய்திருப்பீர்கள். பயணங்களில் எல்லோரும் இரயில் பயணங்களையே மிகவும் விரும்புவர். இரயில் பயணம் சுகமான பயணமாக இருந்தாலும் சில நேரங்களில் சிலருக்கு பிரச்சனைகளை தரக்கூடிய பயணமாக முடிகிறது. இரயில் பயணம் ஆரம்பம் முதல் முடியும் வரை பிரச்சனைகள் இருந்தாலும், ( முந்தைய பதிவில் இரயில் ஏறும் வரை உள்ள பிரச்சனைகளை பார்த்தோம்.) இரயிலில் ஏறிய பிறகு சந்திக்கும் சில பிரச்சனைகளுக்கு எனக்கு தெரிந்த தீர்வுகளை சொல்கிறேன். ( இந்திய இரயில்வேக்கு மட்டும்).
1. தவறவிடும் நிலை :
கடைசி நேரத்தில் வரும் பயணிகள் தனக்கு ஒதுக்கப்பட்ட பெட்டிக்கு செல்வதற்குள் இரயில் நகர்ந்து விட ஏறமுடியாமல் தவறவிடுவது.
தீர்வு: கடைசி நிமிடத்தில் வரநேரும் பொழுது ப்ளாட்பாரத்திற்குள் நுழைந்ததும், ப்ளாட்பாரத்தின் முன்னே என்ஜின் அருகே உள்ளே சிக்னலை கவனிக்கவும். சிகப்பு விளக்கு எரிந்தால் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டிக்கு பதட்டமில்லாமல் செல்லுங்கள். மஞ்சள் அல்லது பச்சை விளக்கு எரிந்தால் உடனடியாக தங்களுக்கு அருகில் உள்ள பெட்டியில் ஏறிவிடுங்கள். அனைத்து இரயில்களிலும் பெட்டிகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருப்பதால் இரயில் கிளம்பினாலும் பெட்டியின் உள்ளேயே நடந்து தாங்கள் இருக்கைக்கு செல்லமுடியும். அவ்வாறு இல்லாமல் பெட்டி துண்டிக்கபட்டிருந்தாலும் அடுத்த நிறுத்ததில் நீங்கள் தங்கள் பெட்டிக்கு மாறிவிடலாம். அடுத்த நிறுத்தம்வரை தங்கள் இருக்கையில் வேறு நபர் அனுமதிக்கப்படுவதில்லை.
2. அபாயசங்கலி :
ஏதாவது ஒரு காரணத்தால் பிரச்சனை ஏற்பட்டு இரயிலை நிறுத்த வேண்டிய சூழ்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் திணறுவது.
இதற்கு அபாய சங்கிலியை பயன்படுத்தலாம். உடனே இரயில் நிறுத்தப்படும். இவ்வாறு நிறுத்தும்போது சரியான காரணங்களுக்கு மன்னிக்கவும், தவறான காரணங்களுக்கு தண்டிக்கவும் உட்படுத்தபடுவீர்கள்.
மன்னிக்கப்படும் காரணங்களில் சில :
இரயில் இருந்து யாரும் தவறி விழுந்து விடுவது,
உடல் நலகுறைவு ஏற்படும்போது,
தங்களுக்கும் தங்கள் உடமைகளுக்கும் பாதிப்பு ஏற்படும்போது,
நிர்வாக தவறாக கருதப்படும் பெட்டியில் தண்ணீர் இல்லாமலும்,
மின்சார இணைப்பு துண்டிக்கபட்டிருந்தாலும் இதுப்பற்றி முறைப்படி
டிக்கெட் பரிசோதகரிடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காதபோது,
தண்டிக்கப்படும் காரணங்களில் சில :
தங்கள் கவனகுறைவால் தனது உடமைகளை இரயில் இருந்து தவறவிடும்போது,
தாமதமாக வந்து தன்னுடன் பயணம் செய்யும் நபர் இரயில் ஏறுவதற்காக பயன்படுத்தும்போது,
விளையாட்டு எண்ணத்துடன் பயன்படுத்தும்போது,
இவ்வகை தண்டனைக்கு ரூ.1000 அபதாரம் அல்லது சிறைதண்டனை விதிக்கப்படும்.
3. காவல்துறை :
இரயிலில் தங்களுக்கோ தங்கள் உடமைகளுக்கோ பாதிப்பு ஏற்படும் வண்ணம் யாரேனும் நடந்துகொண்டாலோ அல்லது சந்தேகம் ஏற்பட்டாலோ உடனடியாக தங்கள் பாதுகாப்புக்காக தங்களுடனே பயணம் செய்யும் நடமாடும் காவல்துறை அல்லது டிக்கெட் பரிசோதாகர் மூலம் இரயில் நிலையத்தில் உள்ள காவல்நிலையத்தை தொடர்புகொள்ளவும்.
சிறு தகவல்கள் :
(அ) பெட்டியில் ஏறியவுடன் பெட்டியில் ஒட்டப்பட்டிருக்கும் காவல்துறை கட்டுபாட்டு அறை மற்றும் பெண்கள் உதவி மையம் மற்றும் அவசரஉதவி போன்றவற்றின் தொலைபேசி எண்களை தங்கள் செல்போனில் டையல் செய்து வைத்து கொள்ளவும்.
(ஆ) இரயில் ஏறியவுடன் தண்ணீர், விளக்கு, விசிறி போன்றவை சரியாக உள்ளனவா? என பரிசோதித்து கொள்ளவும்.
(இ) தங்கள் இருக்கைக்கு அருகாமையில் உள்ள ஜன்னல் கம்பிகள், கதவுகள் மற்றும் படுக்கை பிடிப்பு கம்பிகள் சரியாக உள்ளதா என சரிபார்த்து கொள்ளவும்.
(ஈ) தங்கள் இருக்கைக்கு கீழ் உள்ள பாதுகாப்பு சங்கலியில் தங்கள் உடமைகளை வைத்து பூட்டிக்கொள்ளவும்.
.
Monday, June 22, 2009
திண்டுக்கல் டூ விருதுநகர்
நேரம் 09.40 : இரயில்வே காவல்துறை அலுவலகம். இன்ஸ்பெக்டர் அறை.
மெருகேறிய உடற்கட்டு, முறுக்கிய மீசை, பிடிப்பான யூனிபார்ம் என பார்க்க கம்பீரமாக தோன்றும் இன்ஸ்பெக்டர் ராம் தன்னை அழைத்த செல்போனை காதுக்கு கொடுத்தார். மறுமுனையில் அவரது மனைவி.
'என்னம்மா? என்ன விஷயம்?.'
'ஒன்றுமில்லை. இன்னிக்காவது மதியம் சாப்பாட்டுக்கு சீக்கிரம் வாங்க.'
'சரிம்மா.'
'சரிம்மான்னுட்டு லேட்டா வராதீங்க. கல்யாணநாள் அதுமா என்னை டென்சன் ஆக்கிடாதீங்க.!'
'சரி' என்று போனை வைக்கவும் எஸ்.ஐ அறையின் உள்ளே வந்து சல்யூட் அடிக்கவும் சரியாக இருந்தது.
'எஸ் சதீஸ்! எனித்திங் ஸ்பெஷல்?'
'எஸ் சார்!.'
'என்னாச்சு?'
'சார். நெல்லை இப்பதான் ப்ளாட்பார்ம் 1ல் வந்தது. எல்லோரும் இறங்கி போயாச்சு. ஆனால் எஸ் 9ல் ஒருவர் மட்டும் எழுந்திருக்கவில்லை என அவருடன் பயணம் செய்த அவரது நண்பர் கூற இரயில்வே டாக்டரை வர சொல்லி பரிசோதனை செய்ததில் அவர் இறந்திருந்தார். உடனடியாக ஜி.ஹெச்.க்கு சொல்லி ஆம்புலன்ஸ் வரசொல்லியிருக்கிறேன்.'
'அப்படியா! வாங்க.போய் பார்க்கலாம்.'
ப்ளாட்பாரம் 1, எஸ் 9 பெட்டி ஜன்னல் வழியே எட்டி பார்ப்பவர்களை ஒரு கான்ஸ்டபிள் விரட்டி கொண்டிருந்தார். பெட்டியின் உள்ளே சென்ற ராம், தூங்குவது போல் படுக்கை நிலையில் இறந்துகிடந்த அந்த 45 வயது மதிக்கதக்க அந்நபரை பார்த்துவிட்டு அருகில் நிற்பவரிடம் திரும்பினார்.
'நீங்க யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?'
'எங்களுக்கு சொந்த ஊர் திருச்சி அருகே உள்ள குளித்தலை சார். நாங்க இரண்டு பேரும் ப்ரண்ட்ஸ் அண்டு பிஸினஸ்மேன் சார். இரண்டு பேரும் பாட்னர்சிப்பில் திருச்சியில் ஒரு பேப்பர் மில் நடத்துகிறோம். இப்போது திருநெல்வேலியில் கொண்டாநகரம் அருகே புதுமில்லுக்காக இடம் பார்க்க வந்தோம். நல்லா தூங்கிட்டோம் சார். இப்பதான் நான் எழுந்திருச்சேன். அவரை எழுப்பினேன். அவர் எழுந்திருக்கவில்லை சார்.'
'அப்படியா! நீங்க டிரிங்க்ஸ் பண்ணியிருக்கீங்களா?'
'அவரும், நானும் சேர்ந்துதான் சாப்பிட்டோம் சார்.' என்றார்.
அதற்குள் ஆம்புலன்ஸ் வர 'சதீஸ்! பெட்டியை நன்றாக சோதனையிட்டு பின்பு பாடியை போஸ்ட்மார்டத்திற்கு அனுப்பிவிட்டு ரிப்போட்டுடன் ஸ்டேசன் வாங்க. நான் இவரை அழைச்சிட்டு போறேன்.'
'எஸ்.சார்.'
மூன்றுமணிநேரத்திற்கு பிறகு :
இன்ஸ்பெக்டர் அறையில் ராம் அவருக்கு நேரெதிரே சதீஸ்.
'என்ன சதீஸ்! போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் என்ன சொல்லுது?.'
'குடிபோதையில் இருந்த இவர் மூச்சு திணறடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை நடந்து நான்கு மணிநேரம் ஆகியிருக்கலாம். இவரது நண்பர் கூறியது போல குடிபோதையில் மாரடைப்பால் இறக்கவில்லை.'
'ஓ.கே. இவரது நண்பரை மேலும் தீவிரமாக விசாரிங்க. ரிப்போர்ட் படி பார்த்தால் கொலை மதுரைக்கு முன் நடந்திருக்கலாம். அப்படிதானே.'
'ஆமா சார்.'
'சரி நீங்க இவரை பார்த்துக்குங்க. நான் "சீப் ரிசர்வேஷன் சூப்பர்வைசரை" பார்த்துவிட்டு வருகிறேன்' என்று கூறிவிட்டு தனது செல்போனை எடுத்து தனது மனைவிக்கு டயல் செய்தான். மறுமுனையில்..
'என்னங்க! கிளம்பிச்சா?'
'ஸாரிம்மா! ஒரு மர்டர் கேஸ். வரமுடியாது.'
'ஒருநாளாவது சொன்னமாதிரி செய்ததுண்டா?'
'சரி கோபப்படாதே! நான் அப்புறம் கால் பண்றேன்.' என்று கூறி போனை வைத்தான்.
மீண்டும் சதீஸ்சும், ராமும் :
'என்னாச்சு! சதீஸ் எனித்திங் க்ளு!'
'நத்திங் சார். அந்த நபரை விசாரித்ததில் அவர் பதட்டபட்டு உளறுகிறாரே தவிர அவர் கொலையாளி இல்லை என தோன்றுகிறது சார்!'
'அப்படியா! சரி. என் ப்ளான்படி மொத்த பயணிகளில் இவர்களுடன் திருச்சியில் ஏறியவர்கள் 23 நபர்கள். இவர்களில் 8 நபர்கள் மதுரையிலும், 15 நபர்கள் திருநெல்வேலியிலும் இறங்கியுள்ளார்கள். திருநெல்வேலியில் இறங்கிய நபர்களை விசாரிக்க நமது டீமை அனுப்புங்கள். மதுரைக்கு நாம் இருவரும் உடனே கிளம்புகிறோம்.'
'எஸ் சார்.'
இரவு 10.16 :
திருச்சி 134 கி.மீ. என வழிகாட்டிய பைபாஸ்ரோட்டின் ஓரத்தில் உள்ள போர்டை பார்த்தபடி காருக்கு வேகம் கொடுத்தான் சதீஸ்.
'என்ன சதீஸ்! மதுரையில் ஒரு க்ளுகூட கிடைக்கவில்லை. திருநெல்வேலியின் நிலை என்ன?'
'அங்கும் அந்தளவுக்கு நம்பிக்கையான தகவல் இல்லை சார்.'
'திருச்சிக்கு போனால் அவரது சொந்த ஊர் மற்றும் மில்லில் ஏதாவது கிடைக்குமா?'
'கண்டிப்பாக சார். நம்மகிட்டேயிருந்து அவன் தப்பவே முடியாது.'
'பார்ப்போம்.' என கூறிவிட்டு ரிசர்வேஷன் சார்டை எடுத்து புரட்ட ஆரம்பித்தார். இவர்களை சுமந்தபடி பைபாஸில் கார் திருச்சி நோக்கி பறந்தது.
***
காவல்துறை ஆணையர் அலுவலகம், திருச்சிராப்பள்ளி. மாலை 4 மணி :
பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் ராம்.
'எப்படி சார், கொலையாளியை கண்டுபிடிச்சீங்க?', 'அதுவும் கல்லூரி மாணவன்?.', 'ஒரே நாளில் எப்படி சார் சாத்தியமானது?.' என்று கேள்வி கணைகளை தொடுக்க ஆரம்பித்த பத்திரிக்கையாளர்களை கையமர்த்திவிட்டு பேச ஆரம்பித்தார் ராம்.
"எல்லா கேள்விகளுக்கும் சேர்த்து பதில் சொல்கிறேன். எந்த கேஸிலும் க்ளு கிடைப்பதை பொறுத்துதான் கொலையாளி மாட்டுவான். இந்த கேஸை பொருத்தவரை ஒரே நாளில் முடிந்துவிட்டது. திருநெல்வேலி, மதுரையில் விசாரணையை முடித்துவிட்டு திருச்சிக்கு வந்து கொண்டிருந்தோம். அப்பொழுது ரிசர்வேஷன் சார்ட்டை பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென ஒரு 'ஐடியா' கிடைக்க இறந்த நபர் எங்கே ரிசர்வேஷன் செய்துள்ளார் என சார்ட்டை பார்க்க அது 'திருச்சி' என காட்டியது. இன்று காலை திருச்சியில் ரிசர்வேஷன் ஆபிஸ் சென்று நெல்லை எக்ஸ்பிரஸ்க்கு குறிப்பிட்ட தேதியில் 'யார் யார் ரிசர்வ் செய்துள்ளார்கள்?' என்ற பட்டியலை எடுத்தோம்.
மொத்தம் 18 நபர்கள். இவர்கள் திருச்சி டூ மதுரை, திருச்சி டூ திருநெல்வேலி என ரிசர்வ் செய்திருந்தனர். ஆனால் ஒருவர் மட்டும் திண்டுக்கல் டூ விருதுநகர் என்று ரிசர்வ் செய்திருந்தார். அவர் ரிசர்வ் செய்ய கொடுத்த விண்ணப்பபடிவத்தில் அவரது பெயர் சிவா, வயது 21 என்றும் இருந்தது. அதில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு சென்று விசாரித்த போது அந்த முகவரி போலியானது என தெரியவர விசாரணையை தீவிர படுத்தினேன். அந்த டிக்கெட் ரிசர்வ் செய்யப்பட்ட நேரத்தில், ரிசர்வ் செய்த கவுண்டரில் உள்ள கேமிராவில் பதிவான அந்த நபரின் புகைப்படத்தை வாக்காளர் அடையாள அட்டை பட்டியலோடு ஒப்பிடுகையில் உண்மையான முகவரி கிடைக்க சிக்கனான். விசாரணையில் முதலில் மறுத்தவன் பிறகு ஒப்புக்கொண்டான்.
அவனது பெயர் பாலா., வயது 21., எம்.காம். முதலாமாண்டு படிக்கும் கல்லூரி மாணவன். இவருடன் படிக்கும் சக மாணவி சாந்தி. இவர் இறந்துபோன நபரின் ஒரே மகள். சாந்தி, "தன்னை ஒருதலை பட்சமாக காதலித்த பாலாவின் தொந்தரவு தாங்காமல் தன் தந்தையிடம் கூறி கண்டித்துள்ளார்."
"என் மகளை பின் தொடர்ந்தால் உன்னை கொன்றுவிடுவேன்." என்று கூறி அவரை கல்லூரி வளாகத்திலே அடித்து அவமானப்படுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலா சாந்தியையும், அவரது தந்தையையும் கொல்ல திட்டம் தீட்டியுள்ளான்.
முதலில் சாந்தியின் தந்தை திருநெல்வேலி செல்வதை அறிந்த பாலா திட்டம் போட்டு, போலீஸில் மாட்டக்கூடாது என்பதற்காக திண்டுக்கல் டூ விருதுநகர் ரிசர்வ் செய்து, திருச்சியிலிருந்து அதிகாலையில் பஸ்ஸில் திண்டுக்கல் சென்று அங்கிருந்து இரயில் ஏறி, எல்லோரும் தூங்கும் நேரம் என்பதால் எளிதாக அவர் அருகே சென்று தான் கொண்டு வந்த துணியால் அவரது வாய் மற்றும் மூக்கை பொத்தி கொலை செய்துள்ளான். அவரும் குடிபோதை மயக்கத்தில் இருந்தது மேலும் இவனுக்கு எளிதாகியது. பின்னர் விருதுநகரில் இறங்கி உடனடியாக பஸ் பிடித்து திருச்சி வந்தடைந்து எப்பொழுதும் போல கல்லூரி சென்றுவிட்டான். அவன் செய்த தவறு, இறந்துபோன நபர் ரிசர்வ் செய்த அதே ரிசர்வேஷன் சென்டரில் இவனும் ரிசர்வ் செய்ததுதான்." என்று கூறி முடிக்க ராமின் செல் அழைத்தது. எடுத்து பார்த்தான்.
அவனது மனைவி புன்னகைத்தாள்.
'சொல்லுமா!'
'ஸாரிங்க! நேற்று நீங்க வரலைன்னு கடுமையான கோபத்தில் உங்ககூட பேசாமலிருந்தேன். இப்பதான் டிவியில செய்தி பார்த்தேன். ரொம்ப சந்தோசமாகவும், பெருமையாகவும் இருக்கு. சீக்கிரம் வீட்டிற்கு வாங்க. ஸ்பெஷல் விருந்து உங்களுக்காக காத்திருக்கு.'
'சரிம்மா.' என்று செல்லை அணைத்துவிட்டு திரும்ப, அருகில் சதீஸ் புன்னகைத்தார்.
(உரையாடல் நடத்தும் சிறுகதைப்போட்டிக்காக)
.
Wednesday, June 17, 2009
சும்மாத்தான்!...
புது அதிகாரிகள் மற்றும் புது கட்டுப்பாடுகள் என கரும்பு சாறு பிழிவதுபோல் 10 தினங்களுக்கு மேலாக பிழிந்துவிட்டனர். பணி முடிந்ததும் எப்படா ஓய்வு என்று வீட்டிற்கு ஓடத்தான் நேரம் கிடைத்ததே தவிர ப்ரவுசிங் சென்டர் பக்கம் போக நேரமே இல்லை.
இதற்கு என்று தான் முடிவு வருமோ?.
மனதில் ஓரத்தில் பதிவுலகத்தை பற்றியும், பதிவுலக நண்பர்கள் பற்றியும் ஓடிக்கொண்டிருக்க இன்று எப்படியாவது பின்னுட்டமாவது போட்டுவிட வேண்டும் என வந்துவிட்டேன்.
தாமதத்திற்காக வருந்துகிறேன்...
.
Monday, June 8, 2009
இப்படியெல்லாமா கேள்வி கேட்பாங்க?
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
எனது தாத்தாவின் பெயர்.பரம்பரை பெயர். எனது பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும். (இன்னும் பெரியதாக வைத்திருக்கலாம் என்று என் தந்தையிடம் கேட்டதுண்டு.{ இராமச்சந்திரமூர்த்தி @ ராம்.C.M} ).
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
7ம் வகுப்பு படிக்கும் போது பள்ளிக்கு செல்லாமல் கிணற்றில் குளித்துவிட்டு வருவதை அம்மா பார்த்துவிட அன்று வீட்டில் நடந்த "தீபாவளி"யின் போது.
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ரொம்ப பிடிக்கும். 10ம் வகுப்பு முதல் இன்று வரை பலர் கூறியும் மாற்றாமல் இன்று வரை தமிழில் போட்டு வருகிறேன். இனியும் மாற்றபோவதில்லை.
4.பிடித்த மதிய உணவு என்ன?
சாதம்,சாம்பார்,வெண்டைக்காய் பச்சடி,தயிர்,அப்பளம்.
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
இல்லை. அவர் எப்படி என்று ஆராய்ந்து உண்மைவிளம்பியாக இருந்தால்.. அவர் விருப்பப்பட்டால்...
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
இரண்டிலும் அடிக்கடி குளித்தாலும், கொஞ்சதூரம் பயணம் செய்து குளிக்கும் கடல் குளியலே.
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
யாராக இருந்தாலும் அவர்களது கண்கள். அது மட்டும்தான் அவருக்கே தெரியாமல் அவர் பேசுவது உண்மையா? என்று கணக்கிட்டு சொல்லும்.
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பாவம் என்று தர்மம் (நூற்றுகணக்கில்) செய்து என் மனைவியிடம் திட்டு வாங்குவது. மிக வேகமாக பைக் ஓட்டுவது.
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
எனது சரிபாதியாக இல்லாமல் முழுவதுமாக இருப்பது., பிடிக்கவில்லை என்று சொல்லவிடாமல் என்னுள் இருப்பது.
10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
எனது உடன்பிறப்புகள்.
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
சாம்பல் நிற சட்டையும், சந்தனகலர் டிராக்ஸ்சூட்டும்.
12.என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
ஜன்னல் வழியே பூட்டாமல் வந்த எனது பைக், "ஏதோ ஒரு பாட்டு" உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படப்பாடல்.
13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
வாடாமல்லி பூவின் நிறம்.
14.பிடித்த மணம்?
பைக்கில் செல்லும்போது என்னை ஓவர்டேக் செய்யும் லாரியில் உள்ள கருவாட்டு வாசனை.
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
http://ponniyinselvan-mkp.blogspot.com/திரு.கார்த்திகைப் பாண்டியன் அவர்கள். நல்லவர். வல்லவர். ஆசிரியர் பணியில் இருப்பவர். ஆசிரியர்தான் கேள்வி கேட்பார்கள். ஆசிரியர் பதில் எப்படியிருக்கும்?
http://pirivaiumnesippaval.blogspot.com/காயத்ரி அவர்கள். பிரிவையும் நேசிக்கும் அழகு கவிதை மழை பொழியும் அன்பு சகோதரி.
http://premkumarpec.blogspot.com/திரு.ப்ரேம் அவர்கள். பலவிதமான கருத்துகளுடன் பதிவு எழுதுபவர். பதிவுலகில் எனக்கு முதலில் அறிமுகமானவர்.
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
நையாண்டி நைனா. நையாண்டியிலே வண்டி ஓட்டும் திறமை.
17. பிடித்த விளையாட்டு?
கிரிக்கெட். லீவு போட்டு டிவியே கடவுள் என்று கிடப்பது. சென்னையாக இருந்தால் சேப்பாக்கத்தில்...
18.கண்ணாடி அணிபவரா?
இல்லை.
19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
ஒரே வில்லன். பரம்பரையாக பழி வாங்குவது (?).
20.கடைசியாகப் பார்த்த படம்?
நியூட்டன் 3ம் விதி.(என் தலைவிதி போங்க...)
21.பிடித்த பருவ காலம் எது?
இலையுதிர்காலம்.
22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
தினசரி காலையில் வீட்டிற்கு வரும் 'தினகரன்' பத்திரிகையாவது படிக்கனும் நினைப்பேன். அதுவும் சில நாட்கள் தவறிவிடுகிறது.
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
இது ப்ரவுசிங் சென்டரின் உரிமையாளரிடம் கேட்கவேண்டிய கேள்வி. ஆனால் நாளுக்குநாள் சென்டரை மாத்திகொண்டே இருக்கிறேன்.
24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
மழலைகள். சிக்னலில் கடைசியில் நின்றுகொண்டு பச்சைவிளக்கெரிந்தவுடன் ஹாரன் அடிக்கும் வாகனசத்தம்.
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
விஜயவாடா.
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
துப்பாக்கி சுடுவது தனித்திறமையில் வருமா?
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
சாப்பிடும் போது அருகில் தண்ணீர் இல்லாதது.
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
நினைத்ததை உடனே முடிக்க எண்ணி தோற்றாலும் சில நிமிடங்களில் அதை மறப்பது.
29.உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?
எங்க ஊர் ஆற்றங்கரை.
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
வேலைக்கே போகாமல் வீட்டில் வீடியோகேம் விளையாடனும்.
31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
கிரிக்கெட் பார்ப்பது.
32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
துரத்துகிற சிங்கத்திற்கு பயந்து மரத்தில் ஏற, அங்கு இருக்கும் கருநாகத்திற்கு பயந்து அருகில் உள்ள ஆற்றில் குதிக்க எண்ண, அங்கு கிடக்கும் முதலையை கண்டு பயப்படும் நேரத்தில் மரக்கொம்பு ஒடிய தயாராக, என்ன செய்வது என தொங்கும் போது,மேல் கொப்பிலிருக்கும் தேன் கூட்டிலிருந்து ஒரு சொட்டு தேன் வாயில் விழும்போது ஏற்படும் சுவை... வாழ்வு.
.
Friday, May 29, 2009
இரயிலில் பயணம் செய்பவர்களா நீங்கள்...?.
1. பி.என்.ஆர்.:
பயணம் செய்ய முடிவு செய்து டிக்கட் ரிசர்வ் செய்வதில் சிலருக்கு காத்திருப்போர் பட்டியலில் இடம் கிடக்கிறது. இவர்கள் இரயில் ஏறும் வரை தமக்குண்டான சீட் உறுதியாகிவிட்டாதா? என்பதில் குழப்பம். இதற்கு தீர்வு...
உங்கள் கையில்., ஆம்.. உங்கள் செல்போனில் மெஸேஜ் பகுதிக்கு சென்று டிக்கட்டில் உள்ள பி.என்.ஆர். எண்ணை மட்டும் டைப் செய்து 9773300000 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள், பதில் கிடைக்கும்.
2. இலவச கார் வசதி:
வயதானோர், ஊனமுற்றோர், கர்ப்பிணிப் பெண்கள் போன்றோருடன் நீங்கள் பயணம் செய்யும்போது அவர்களை உங்களது இருக்கைக்கு அழைத்து செல்ல சிரமப்படுவீர்கள். இதற்கான தீர்வு: இரயில் நிலைய வாசலுக்கு வந்தவுடன் தங்கள் டிக்கெட்டை எடுத்துக்கொண்டு நிலைய மேலாளர் அலுவலகம் செல்லுங்கள். அங்கு தயாராக நிறுத்தப்பட்டுள்ள பேட்டரியில் இயங்கும் சிறியரக கார் உங்கள் குடும்பத்தாரை தங்கள் இருக்கைக்கு அழைத்துச் செல்லும். இது ஒரு இலவச சேவையாகும். ( இவ்வசதி முக்கிய இரயில் நிலையங்களில் மட்டுமே உள்ளது. ஆனால் அனைத்து இரயில் நிலையங்களிலும் இலவச சக்கரநாற்காலி கிடைக்கும்.)
3. உடனடிப் பதிவு:
சில சமயங்களில் திடீரென இரயிலில் பயணிக்க வேண்டியிருக்கும் அப்போது டிக்கெட் கிடைக்காது என்று வருத்தப்பட்டு பஸ்ஸில் செல்வதுண்டு. இதற்கு.. இரயில் கிளம்பும் இரண்டு மணி நேரத்திற்கு முன் இறுதிப்பட்டியில் தயார் செய்யப்படும். இதற்குபின் காலியாக உள்ள வி.ஐ.பி மற்றும் சில முக்கியபிரிவுகளுக்கான இடஒதுக்கீடு இருக்கை மற்றும் கடைசி நேரத்தில் ரத்து செய்யும் இருக்கைக்கான டிக்கெட் வழங்கப்படும். முயற்சிக்கலாம்.
4. சாதாரண டிக்கெட்:
பதிவு செய்யாமல் இரண்டாம் வகுப்பு பிரிவில் செல்லும் பயணிகள் எப்பொழுதுமே கடைசி நேரத்தில் கவுண்டரில் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். இதற்கு... அனைத்துவிதமான இரயில் நிலையங்களிலும் இந்தவகை டிக்கெட்டுகள் வழங்கப்படும். அதோடு மட்டுமல்லாமல் இந்த வகை டிக்கெட்டுகள் மூன்று நாட்களுக்கு முன்னதாகவே வாங்க முடியும். ( முக்கியமாக.., சென்னையில் வசிக்கும் பயணிகள் கடைசி நேரத்தில் சென்ட்ரல் மற்றும் எழும்பூர் இரயில் நிலையங்களில் காத்திருக்காமல், சென்னையின் அனைத்து புறநகர் இரயில் நிலையங்களிலும் மூன்று நாட்களுக்கு முன்னதாகவே இவ்வகை டிக்கெட் பெறலாம்.) தேவையில்லை என்றால் கூட இந்தவகை டிக்கெட்டையும் ரத்து செய்யமுடியும். இதற்கான கட்டணம் 10 ரூபாய்.
5. தவறவிடும் இரயில்கள்:
கடைசி நேரத்தில் இரயிலை தவறவிடும் நிலை ஏற்பட்டால் நீங்கள் செய்ய வேண்டியது... பயணிகள் சேவை மையத்திற்கு செல்லுங்கள். தங்கள் பயணம் முக்கியமானதாகவும், தாமதத்திற்கான காரணங்கள் ஏற்புடையாதகவும் இருந்தால்,அடுத்த இரயிலில் இடம் இருக்கும் பட்சத்தில் மாற்றி தர வழிவகை செய்யப்படும். இவ்வகை டிக்கெட்டினை ரத்து செய்யவும் முடியும்.
சிறு தகவல்கள்:
1. இரயில் கிளம்பும் ஒரு மணிநேரத்திற்கு முன்புதான் இரயில்பெட்டிகள் தண்டவாளத்திற்கு கொண்டுவரபட்டு,கதவுகள் திறக்கப்பட்டு,மின் இணைப்பு கொடுக்கப்படும்.
2.இரயில் கிளம்பும் முக்கால் மணிநேரத்திற்கு முன்புதான் இரயில் நிலையத்தின் நுழைவுவாயல் பகுதியில் தங்கள் டிக்கெட்டின் இறுதிநிலை பற்றிய வகுப்புவாரியான பட்டியல் ஒட்டப்படும்.
3. இரயில் கிளம்பும் அரை மணிநேரத்திற்கு முன்புதான் தங்கள் இருக்கைக்கான எண் மற்றும் பெட்டி எண் கொண்ட இறுதிப்பட்டியல் பெட்டியில் ஒட்டப்படும்.
4. இரயில் கிளம்பும் கால் மணிநேரத்திற்கு முன்புதான் டிக்கெட் பரிசோதகர் தங்கள் பெட்டி அருகே வருவார்.(மூன்று பெட்டிக்கு ஒருவர்).
தொடரும்...
.
Tuesday, May 26, 2009
பணிமாற்றம்..இனி படையெடுப்பு..!
அய்யய்யோ... எப்போ... எங்கே... வெடிக்கபோகுதோ... பதட்டதோடு இரண்டு நாட்கள் அமைதிகாக்க... வெடித்தது நேற்று (மே 25)... எங்கே தெரியுமா?...
"சிறப்பு அதி தீவிரப் படை ( ஸ்பெஷல் கமாண்டோ)"-சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம். எனக்கு பிடித்த ஆர்வமுள்ள இடத்திற்கே பணி மாற்றம் கிடைத்ததில் மகிழ்ச்சி. இனி...
ஓய்வுவெடுத்து வாரக்கணக்கில் ஆகிவிட்டதால் ஒரு வாரகாலம் (ஜூன் 2) விடுமுறை எடுத்து விட்டு...
பணியில் சேரவும்., ப்ளாக் மீது படையெடுப்பும்...
.
Thursday, April 30, 2009
வாரம் ஒரு முறைதான்..!
தேர்தல் சூடுபிடிக்க ஆரமித்து விட்டதால் எமது பணியும் சூடுபிடித்து விட்டது. சென்ற வாரங்களிலேயே என் பணியின் பளுவும் அதிகரித்து விட்டது. தினசரி குறைந்தது 12 மணி நேரத்திலிருந்து 18 மணி நேரம் பணி இருப்பதால் மீதமுள்ள நேரங்களில் ஓய்வு எடுக்கவே சரியாக உள்ளது. அதுவும் நான் "அதி தீவிரப்படை" ( கமாண்டோ ) பிரிவில் இருப்பதால் இன்னும் நெருக்கடி அதிகம். இதன் காரணமாக சரிவர வலைப் பதிவுலகிற்கு வர இயல வில்லை. சிலரின் பதிவுகளுக்கு பின்னூட்டங்களும் இட முடிய வில்லை. அதற்காக வருந்துகிறேன். இன்னும் ஒரு மாத காலத்திற்கு இந்த நிலை நீடிக்கும் என நினைக்கிறேன். அதுவரை என் பதிவுலக நண்பர்கள் பொறுத்து கொள்ளவும். ஆனால் எப்படியும் வாரம் ஒரு முறையாவது பதிவுலகிற்கு வந்துவிடுவேன். தற்போது கூட "சென்னையில் இரயில் விபத்து" நடந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்துவிட்டு உணவருந்துவதற்காக வீடு திரும்புகிற வழியில் உங்களை சந்திக்கிறேன். சற்று ஓய்வு எடுத்துவிட்டு திரும்ப இரவு பணிக்கு செல்ல வேண்டும். மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து உத்தரவு வாங்கிக்கிறேன்.
-ராம்.CM.
.
Saturday, April 25, 2009
பிச்சையா...போடாதீங்க.!
தனது ஏழ்மையினால் வாழவழியின்றி பிச்சை எடுப்பவர்கள், தனது ஊனத்தை காரணமாக காட்டி பிச்சை எடுப்பவர்கள், பாடல் பாடுவது, இசைப்பது போன்ற ஏதாவது ஒரு திறமையை காட்டி பிச்சை எடுப்பவர்கள் என்று பல விதமான பிச்சைகாரர்கள் இருக்கிறார்கள். இது போன்று பிச்சை எடுப்பவர்கள் இரயில் நிலையங்களிலும் உண்டு. நீங்களும் பார்த்திருக்க வாய்ப்புண்டு.
பகலில் அப்பாவிகளாக திரியும் இவர்கள் இரவில் மாறி விடுகிறார்கள். தங்களுக்கு என்று ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு எல்லோரும் ஒன்று கூடி "தண்ணி" அடித்து விட்டு சத்தம் போட்டுகொண்டும், ஏதாவது கதை பேசிக்கொண்டும், பாட்டு, கூத்து என்று அந்த இடத்தையே இரண்டாக்கி விடுகிறார்கள். சில சமயங்களில் இச்சம்பவம் இரயில் நிலையங்களிலும் அரங்கேறிவிடுகிறது. இதை கட்டுபடுத்துவதற்காக சென்றால் "பகலில் பாவமாக திரியும் இவர்களா இப்படி?..." என்று எங்களை அதிர்ச்சியடைய செய்கின்றனர். இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் இவர்களுடன் பெண்களும் சேர்ந்து "தண்ணியடிப்பது"தான்.
பகலில் பிச்சையெடுப்பவர்களில் 90 சதவீதத்தினர் இரவில் இப்படி மாறிவிடுவது என் அனுபவ உண்மை. 'நாள் ஒன்றுக்கு குறைந்தது 500 ரூபாய்க்கு மேல் வருமானம், வாழ்வில் எந்த பொறுப்போ, அக்கறையோ கிடையாது, நாட்களை நகர்த்தினால் மட்டும் போதும், இவர்களை போன்றவர்கள்தான் இவர்களது நண்பர்களும், இவர்களை கட்டுப்படுத்துவதற்கு யாரும் கிடையாது' இதனால் இவர்களுக்கு இந்த நிலை. அதேபோல்
' உழைத்து சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் சிறிதளவு கூட இல்லாமல் வாழ, இவர்களுக்கு உதவுவது நாம் பாவம் என்று கொடுக்கும் காசுதான் காரணம் ' என்பது என் கருத்து.
.
Saturday, April 18, 2009
பறக்க விடுகிறேன்... பரிசை!
என்னவென்று யோசிக்காதீங்க...
கார்த்திகைப்பாண்டியனால் எனக்கு (என் பதிவுக்கு) பரிசாக வழங்கப்பட்ட "பட்டாம்பூச்சி விருதை" ஒரு வார காலத்திற்கு மேலாக என் வசம் வைத்து அழகு பார்த்து ரசித்ததை இன்று பறக்க விடப்போகிறேன்.
என்னால் ரசிக்கப் படுபவர்களில் மூன்று நபர்களுக்கு சென்றடையுமாறு உத்தரவிடுகிறேன் என் அழகான பட்டாம்பூச்சிக்கு...
1. http://premkumarpec.blogspot.com/ திரு.ப்ரேம்குமார். எனக்கு முதன் முதலாக பதிவுலகில் அறிமுகமான நண்பர். மாதத்திற்கு 4 முதல் 5 பதிவுகளே எழுதும் இவர் ஒவ்வொரு பதிவிலும் வெவ்வேறு கருத்தை கொண்டிருப்பார். குறிப்பாக இவர் எழுதும் கவிதை அனைத்தும் மிக அருமையாக இருக்கும்.
2. http://pirivaiumnesippaval.blogspot.com/ சகோதரி காயத்ரி. கவிதையை கடைந்து எடுத்தவர். அழகான கவிதைகளையும் அதற்கேட்ப படங்களை கோர்ப்பதிலும் வல்லவர். நல்லவரும்கூட.
3. http://sakthi-sakthiunarvugal.blogspot.com/ சகோதரி சக்தி. அருமையாக சமூக சிந்தனையுடன் கவிதை எழுதுவதில் வல்லவர். கருத்துகளும் அழகாக இருக்கும். இவரும் நல்லவரே...
.
Monday, April 13, 2009
வாழ்க்கையில் முன்னேற..

குறிப்பு: சில நாட்களுக்குமுன் நடந்து பத்திரிக்கையில் வெளியான உண்மை சம்பவம் இது. செல்வி என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Friday, April 10, 2009
நானும் என் சாத்தானும்!
கடந்த 8ம் தேதி பங்குனி உத்திரம். அதிகாலை 1.30 மணியளவில்..
"ஏலே.. எழுந்திரு.. நேரமாயிடுச்சு. சீக்கிரம் கிளம்பு.. அப்பா ஏசிகிட்டுயிருக்கு. " அம்மா சொல்ல..
வேகமாக எழுந்து பல்துலக்கி, கடமைகளை முடித்துவிட்டு, வேஷ்டி, சட்டை அணிந்து 15 நிமிடத்தில் கிளம்பி விட்டேன்.
'அந்த வீட்டில் பழங்கள் இருக்கு போய் பஞ்சாமிர்தம் போடு. போ' அப்பா சொல்ல..
வேகமாக பக்கத்தில் எங்களுக்கு சொந்தமான இன்னொரு வீட்டிற்கு ஓடிப்போய் பழங்களை வெட்ட ஆரம்பித்தேன். மா, வாழை, மாதுளை, திராட்சை, அன்னாசி, கொய்யா, ஆப்பிள், ஆரஞ்சு, கற்கண்டு, தேன், பேரிட்சை போன்றவற்றை சேர்த்து ஒரு குவளை இட்டு கைகளால் கசமுசவென பிசைந்துவிட்டு 'பஞ்சாமிர்தம் ரெடி' என்றேன்.
அதற்குள் டாட்டா சுமோ வந்துவிட, 'சரி, சரி போய் வண்டியில் எல்லாவற்றையும் ஏற்று' என்று கமெண்ட் வந்தது. அனைத்து பொருட்களையும் வண்டியில் ஏற்றியதும் அப்பா, அம்மா, நான், என் மனைவியார், என் வாரிசு மற்றும் எனது நண்பர் ஒருவருடன் வண்டி கிளம்பும்போது சரியாக 2.45 இருக்கும். சரியாக இரண்டு மணி நேரம் பயணம். எங்களுக்கு சொந்தமான எங்கள் குலதெய்வமான ஆனைமேல் அய்யனார் (சாஸ்தா) கோவில் (பேச்சு வழக்கில் சாத்தான்கோவில்) வந்துவிட்டது.
(கேமரா கொண்டு போகாததால் சும்மா ஒரு இயற்கைக்காட்சி : ஆனா இது எங்க ஊருதான்..)
மிகப்பெரிய குளத்தின் கரையில் ஒரு பெரிய ஆலமரத்தின் விழுதுகளுக்கு நடுவே யானையின் மேல் கம்பீரமாக பயமுறுத்தும் மீசை, அரிவாளுடன் அய்யனார் அமர்ந்திருந்தார். அவரை சுற்றி கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல்வெளிகள். அதிகாலை நேரமேன்பதால் குளிர்காற்று அடித்துக் கொண்டிருந்தது. டாட்டா சுமோவை ஒரு வயல்வெளியின் ஓரத்தில் நிறுத்திவிட்டு அனைத்து பொருட்களையும் இறக்கி வைத்தோம். கருங்கல்லால் அடுப்பு தயார் செய்து பானை வைத்து 'பொங்கல்' வைக்க அம்மா தயார் ஆகினார். அபிஷேகத்திற்கு அப்பா தயாரானார். நானும் என் நண்பரும் நாங்கள் கொண்டுவந்த இரண்டு ஆடுகளை வதம்செய்ய தயாரானோம்.
அடுத்த ஒரு மணிநேரத்தில் அனைவரின் வேலைகளும் முடிந்துவிட, பால், மோர், தயிர், தேன், இளநீர், திருநீர், மஞ்சள், குங்குமம், சந்தனம், சவ்வாது, பஞ்சாமிர்தம் போன்றவற்றால் அய்யனார் குளித்து பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பொங்கல், அசைவம் படைக்கப்பட்டு அழகாக காட்சிக்கொடுக்க குடும்பத்தோடு வணங்கினோம். பிறகு அரைமணிநேரம் ஓய்வு எடுத்துவிட்டு பிறகு வந்ததைபோல் திரும்ப வீடு வந்தோம். மனதிற்கு நிறைவான ஒரு கோவில் பயணம்.
நாகரிக காலத்தில், இயந்திர வாழ்க்கையில் பலருக்கு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு செல்வதற்குக்கூட நேரமில்லை. தமிழகத்தின் தென்மாவட்ட மக்கள் எத்தனை கோவிலுக்கு சென்றாலும் எல்லோருக்கும் அவர்களுக்கென்று ஒரு கோவில் இருக்கும். அதுதான் சாஸ்தா கோவில். ஆயிரம் கடவுள்கள் இருந்தாலும் ஒருவனுடன் எந்த சூழலிலும் அவனுக்கு துணையாக அவன் மறந்தாலும், வராமலே போனாலும், அவன்கூடவே அவனுக்காகவும் அவன் குடும்பத்திற்காகவும் வாழ்நாள் முழுதும் துணைநிற்பது அவனது சாஸ்தா மட்டும்தான்.
.
Friday, April 3, 2009
"தீ" எங்களுக்கு சாதாரணம்!

இவர்களிடம் எனக்கு பிடித்தது; தீ என்பது மட்டும்தான் குறிக்கோளே தவிர அதற்கிடையில் இருந்த போக்குவரத்து நெரிசல், தடுப்பு சுவர், இவர்களை வரவேற்க நிற்கும் ஊழியர்கள்,இவர்களிடம் சம்பவத்தை விளக்க நிற்கும் அதிகாரிகள், வேடிக்கை பார்க்கவந்து இடஞ்சல் செய்யும் பொதுமக்கள் போன்றவர்கள் அல்ல. இவர்கள் அனைவரை பற்றியும் சிறிதளவுகூட தனது எண்ணங்களில் இடம் கொடுக்காமல் வேகமாக செயல்பட்டது.
இவர்களுக்காக வருந்துவது; தீயணைப்புக்கு மட்டுமல்லாமல் அனைத்துவிதமான மீட்பு பணிக்காகவும் பயன்படுத்தப்படும் இவர்களின் சம்பளவிகிதம் மற்ற யூனிபார்முகளோடு ஒப்பிட்டால் மிகமிக குறைவு என்பதுமட்டும் மனதிற்கு வருத்தமளிக்கிறது.
.
Monday, March 30, 2009
“சல்யூட்” -- நமது கடமை.
இந்திய நாட்டை காப்பதற்காக தனது உயிரை துச்சமென மதித்து எதிரிகளையும், தீவிரவாதிகளையும் சல்லடையாக்கும் ‘சீருடை பணியாளருகளுக்கு’ நாம் என்றுமே கடமைப்பட்டிருக்கிறோம். நாம் இங்கு அமைதியாக சுதந்திரமாக வாழ்வதற்கு அவர்கள் அனைவரும் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றுகிறார்கள்.
அவர்கள் இராணுவம், எஸ்.பி.ஜி., என்.எஸ்.ஜி., சி.ஆர்.பி.எப்., பி.எஸ்.எப்., சி.ஐ.எஸ்.எப்., ஆர்.பி.எப்., ஆர்.பி.எஸ்.எப்., மற்றும் மாநில காவல்துறைகள் என்று பல பிரிவுகளில் நமக்கு பாதுகாவலாக விளங்குகின்றனர்.
இவர்கள் நமது நாட்டில் உள்ள வி.ஐ.பிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கின்றனர். இவ்வாறு பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் ஒரு கமிட்டி செயல்பட்டு வருகிறது. அதில் எடுக்கப்படும் முடிவு பொறுத்து வி.ஐ.பிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். இவர்கள் நான்கு பிரிவுகளில் வி.ஐ.பிகளுக்கு பாதுகாப்பு அளிக்கின்றனர்.
1. இசட் ப்ளஸ் (z+) :
இசட் ப்ளஸில் இரண்டு பிரிவு.
i. எஸ்.பி.ஜி. பாதுகாப்பு: [சிறப்பு பாதுகாப்புப்படை]
இந்திய நாட்டின் முன்னாள், இன்னாள் பிரதமர், ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர்களுக்கு பாதுகாப்பு அளிப்பர்.
ii. என்.எஸ்.ஜி. பாதுகாப்பு: [தேசிய பாதுகாப்புப்படை]
கவர்னர், மத்திய உள்துறை அமைச்சர், பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முதல்வர், முன்னாள் முதல்வர்கள் ஆகியோர்களுக்கு இப்படை வீரர்கள் பாதுகாப்பு அளிப்பர். இவர்கள் ‘கருப்பு பூனை படை’ என்றும் அழைக்கப்படுவர்.
2. இசட் (Z) :
இசட் பாதுகாப்பு பிரிவில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்பு அளிக்கின்றனர். முக்கிய மத்திய அமைச்சர்கள், தீவிரவாதிகளால் மிரட்டல் விடப்பட்ட கட்சித் தலைவர்கள், முக்கிய என்கவுண்டர்களில் பணியாற்றிய காவல் துறை அதிகாரிகளுக்கு இவர்கள் பாதுகாப்பு அளிப்பர்.
3. ஒய் (Y) :
ஒய் பாதுகாப்பு பிரிவில் மாநில போலீஸார் பயன்படுத்தபடுவர். மிரட்டல் உள்ள அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பர். இவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய இரண்டு காவலர்கள் நியமிக்கப்படுவர். இவர்கள் வீட்டிலும் போலீஸார் பாதுகாப்புக்கு பணி அமர்த்தப்படுவர்.
பிரபலமான நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், முக்கிய நடிகர்கள், இயக்குனர்கள்,விளையாட்டு வீரர்கள் ஆகியோர்களுக்கும் இப் பிரிவினர் பாதுகாப்பு அளிப்பர்.
4. எக்ஸ் (X) :
அந்தந்த மாநில உள்துறை செயலாளர் தலைமையில் இப்பிரிவு இயங்கும். முக்கிய பிரமுகர்களுக்கு அவர்கள் தொழில் ரீதியாக எதிரிகள் இருந்தால் அவர்களுக்கும், சம்பந்தப்பட்டவர்கள் கோரிக்கைகள் உண்மையானதா என உளவு பிரிவு ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்கப்பட்டால் அதன் பிறகு பாதுகாப்பு அளிக்கப்படும்.
இவ்வாறாக சிறப்பாக பணியாற்றும் இவர்களை போன்ற அனைத்து சீருடைப்பணியாளர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவது தேர்தல் பணிக்காக.
தேசத்திற்காக 'சல்யூட்' செய்யும் இவர்களை நாம் “சல்யூட்” செய்ய கடமைப்பட்டிருக்கிறோம்.
ஜெய்ஹிந்த்!.
Thursday, March 26, 2009
"இறுதியாய் ஒரு கடிதம்".
என் காதல் ஜென்மத்தில்
நாட்களை நகர்த்தும்
என் விழியான காதலிக்கு
இரக்கம் காட்ட
இறுதியாய் ஒரு கடிதம்!
நம்பிக்கையின்நரம்பை நருக்கென இழுத்தவளே...
உன் மவுனத்தால் என் மனது மெதுமெதுவாய்
வலிக்கு உட்படும் என்பதனால் சீற்றத்தால்
ஒரேயடியாய் சிதறசெய்தாயோ...
'கல்நெஞ்சகாரியே' என்றதனால்
எவ்வளவு இறங்கியும் இரக்கமே இல்லாமல்
எட்டி உதைத்தாயோ?
நீ இல்லாத துயரத்தை சுமக்க முடியாமல் சுமக்கிறது நிமிடங்கள்...
கலங்காமல் இருக்க கண்மணிகள் வேண்டும்..
உயிரோடு ஒட்டாமல் ஒட்டுசுவராய்
ஏன் விலகுகிறாய்?
வா... வந்து ஒட்டிவிடு...
உன் பிரிவில் உருகுலையும்
என் உள்ளத்திற்கு உயிர்கொடு...
உனது உள்ளத்தில் ஏங்கேனும்
ஒரு மூலையில் அணு அளவாவது
என் காதல் ஒட்டியிருந்தால்...
எனை சுற்றி இருக்கும்
துன்ப கடலில் விழ தொங்கிக்கொண்டிருக்கும்
என்னை தாங்க
கைசேர்த்து வா...
இல்லையென்றால்...
எழுத தெரியவில்லை...
ஒரே வரியில்...
"இறுதியாய் ஒரு கடிதம்".
Monday, March 23, 2009
காசு கொடுப்பதாக இருந்தால் முதல்லேயே சொல்லக்கூடாதா?...சார்!
இது எதற்காக என்றால் நான் டியூட்டியில் இருக்கும்போது எந்த ஒரு பொருள் அல்லது சாப்பாடு வாங்கினாலும் அதற்குரிய பணத்தை கொடுத்துவிடுவேன். எந்த ஒரு சூழ்நிலையிலும் இலவசமாகவோ, சலுகை பெறவோ எண்ணமாட்டேன். எப்பொழுதும் பொருட்களை வாங்கி முடித்ததும் பணத்தை கொடுப்பேன். ஆனால் இப்பொழுது பணத்தை எடுத்து கையில் வைத்துக்கொண்டுதான் பொருட்களை தேர்வு செய்யவோ, சாப்பிடவோ செய்வேன். இம்மாற்றத்திற்கு ஒரு சம்பவம்தான் காரணம்...
சென்னை, பார்க் ரயில் நிலையம்., நானும் எனது நண்பரும் டியூட்டியில் இருந்தபோது ப்ளாட்பார நடுவில் இருக்கும் டீ கடைக்கு சென்றோம். இருவருக்கும் பால் ஆர்டர் கொடுத்தோம். 'தருகிறேன் சார்!' என்றவன் மற்ற எல்லோருக்கும் கொடுப்பதில் அதிக கவனம் செலுத்தியவன் எங்களை கண்டுகொள்ளவே இல்லை..
எனக்கு சற்று கோபம் வர..
'தம்பி.. தரப்போறியா? இல்லையா?.. என்றேன்.
'இதோசார்!'
என ஆளுக்கொரு டம்ளரில் பால் ஊற்றித் தந்தான். இருவரும் வாங்கி பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தோம். டம்ளரை அருகில் உள்ள குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு பர்சை எடுத்து 10ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டினேன்.
'இந்தாப்பா.. சில்லரையாவது சீக்கிரம் கொடு..'
'என்ன சார்! காசு கொடுப்பதாக இருந்தால் முதல்லேயே சொல்லக்கூடாதா?'
'ஏம்பா? எதற்கு?..'
'இல்ல சார்! நல்ல பாலா தந்திருப்பேன் சார்..'
'அடப்பாவி! அப்ப இப்போது என்னடா தந்தாய்?'
'ஸாரி சார்! காலையில...தீஞ்சுபோன...ஸாரி சார்!!?.' என்று தலையை சொரிந்தான்.
அவனை அப்படியே தீய்ச்சி விடலாம் என கோபம் வந்தாலும் அவன் என்ன செய்வான்?.. என.. ஒரு பெரிய கேள்விகுறியோடு நானும், என் நண்பரும் அவ்விடத்தை விட்டு நகர்ந்தோம்.
.
Tuesday, March 17, 2009
“கிலோக்கணக்கில்..!”
அபிநய சுடரே..
அத்தையின் மகளே..
புத்தாடை புனைந்தால் போதாது,
வான் மழை பொழிய
வாழ்வில் வளம்பெற
பூமி ஆனந்தவிழாவாக
மாற..
இதழ் சுவைக்கும் இனிப்புகளோடும்,
இதயம் சுவைக்கும் மனித நேயத்தோடும்,
காதலை பங்கிட்டு, இந்த நாள்
இதய திருவிழா நாளாக
ஆண்டு கணக்கில்
என்
ஆழ் மனதில் படிய..
சோர்வான நிமிடங்கள்
உன் பட்டாசு புன்னகையால் சிதற
என் மனதில்
மகிழ்வு பொங்க வா...
என் காதலியே வா...
வந்து புன்னகைத்துவிடு...
கொஞ்சமல்ல
“கிலோக்கணக்கில்..!”
.
Saturday, March 14, 2009
ஹி இஸ் கிரேட்..!
சென்னை பெருங்குடி ரயில் நிலையம்: இரவு 08.35மணி.
நேரம் அதிகமாகி விட்டதால் ப்ளாட் பாரத்தில் சரியாக சொன்னால் என்னையும் சேர்த்து 6 பேர் இருந்தோம். நான் பணி முடிந்து வீட்டிற்கு செல்ல ரயிலுக்காக காத்திருந்தேன். அப்போது ஒரு நபர் ப்ளாட்பாரத்தின் கடைசி ஓரத்தில் இருந்து நடுவிற்கு நடந்து வந்தார். அவர் பக்கத்தில் வரவர அவர் பக்கம் என் கவனம் திரும்பியது.
நல்ல உயரம், அழகான உடல்வாகு, ‘போலீஸ்கட்’ ஹேர் ஸ்டைல், பேண்ட் புல்கேண்ட் சர்ட், ‘டக்’ பண்ணி பார்ப்பதற்கு அழகாக இருந்தார். வேகமாக நடந்து வந்த அவர் ப்ளாட்பார நடுவில்.. ஓரளவுக்கு எனது பக்கத்தில் வந்து நின்றார். பக்கத்தில் நான் செல்போன் பேசி கொண்டிருந்தேன். என்னை கவனித்து கொண்டிருந்த அவர் நான் போனை வைத்ததும்..
‘எக்ஸ்கியுஸ்மீ சார்’ என்றார்.
‘எஸ்!’.
‘08.33 வண்டி போய்விட்டதா சார்?’
‘அதற்காகத்தான் நானும் வெயிட்டீங்.’
‘ஓ.. தேஇங்க் யூ சார்.. போயிருக்கும் என்று வேகவேகமாக வந்தேன்’
‘தினசரி இந்த வண்டிக்குதான் வருவீங்களா’
‘இல்ல சார் வெள்ளிகிழமை தோறும் வருவேன்’ என்றார்.
என்னிடம் பேசி முடித்தவுடன் கையில் இருந்த செல்போனை எடுத்து டயல் செய்தார். அவர் நம்பர் டைப் பண்ண ஒவ்வொரு நம்பரையும் செல்போன் திரும்பி சொன்னது. போன் பேசி முடிந்ததும் அமைதியாக அங்கும் இங்கும் வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தார். ரயில் வந்து நிற்கவும் நேராக நடந்து சென்று வண்டியின் சைடில் தாளம்போட்டவாறே வாசல் வந்ததும் ஏறி அருகிலுள்ள சீட்டில் அமர்ந்தார்.
நானும் அருகில் அமர்ந்தேன்.மறுபடியும் செல்லை எடுத்து யாருக்கோ டிரை பண்ணிவிட்டு வைத்துவிட்டார். பிறகு ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டவந்த அவர் அவ்வப்போது உள்ளே பேசும் நபர்களையும் கவனித்துக் கொண்டிருந்தார். ‘பார்க் டவுண்’ வந்ததும் மெதுவாக வாசல் அருகே வந்து இறங்கி ப்ளாட்பாரத்தின் ஓரத்தில் நின்றார்.[எல்லோரும் போவதற்கு வழிவிடுவது போல..] ‘என்னசெய்ய போகிறார்?’ என நானும் ஓரமாக நின்றேன். சிறிது நேரத்தில் அவர் நடக்க ஆரம்பித்தார். நான் அவர் அருகில் சென்று ‘ஏன் சார் யோசித்து நடந்து வருகிறீர்கள்?” என்றேன்.
‘ஸாரி சார்! எனக்கு கண் தெரியாது!’ என்றார். மனதிற்குள் “திக்” என்றது. எப்படி சார்.. ‘ஸ்டிக்’ இல்லாமல்.. என்றதற்கு... ‘பழகிவிட்டது சார்.’ என்றுகூறி விட்டு மெதுவாக நடக்க ஆரம்பித்தார்.
அவரை திகைத்து பார்த்து கொண்டிருக்கும் போதே என் மனதில் அவரைப்பத்தி ஒரு ‘ப்ளாஸ்பேக்’ ஓடியது...
1.படியேறும் வரை அமைதியாக வந்துவிட்டு நேர்நடையாக வந்தது.,
2.அருகில் நபர் இருப்பதை உணர்ந்து பேசியவிதம்.,
3.செல்போன் டையல் செய்யும் எண்ணை திருப்ப சொன்னது.,
4.ரயிலில் நேராக ஜன்னல் வரவும் தாளம் போட்டுகொண்டே வாசலில் ஏறியது.,
5.தன்னை காட்டிகொள்ளக்கூடாது என்பதற்காக பிறர் பேசுவதை வேடிக்கை பார்ப்பதுபோல் நடந்தது.
தன்னிடம் உள்ள குறையை வைத்து பிறரிடம் அனுதாபம் பெறுபவர்களிடையே, தன் குறையை பொருட்படுத்தாமலும், வெளிகாட்டாமலும், செல்லும் இந்நபரை என்ன சொல்வது?...
ஹி இஸ் கிரேட்...!
Friday, March 13, 2009
பெண் பதிவருக்காகவும், ஆண் பதிவரென்றால் அவர்களின் [ வருங்கால ] மனைவிக்காகவும்!...
பெண் பதிவருக்காகவும், ஆண் பதிவரென்றால் அவர்களின் [ வருங்கால ] மனைவிக்காகவும் இப்பதிவு எழுதப்படுகிறது. இந்த தலைப்பில் எழுத ஆயிரம் விஷயம் இருந்தாலும் இப்போது ஒன்றைப்பத்தி எழுதுகிறேன். தினமும் வீட்டில் பெண்கள் விளக்கேற்றும் பழக்கமுடைவர்கள். அதைப் பற்றிய எனக்கு தெரிந்த [எங்கோ படித்த?..] சில விவரங்களை எழுதியுள்ளேன். அப்படி விளக்கேற்றும் பழக்கமுடையவர்கள் மட்டும் தொடர்ந்து படியுங்கள்... தவறு இருப்பின் சுட்டிகாட்டுங்கள்.. திருத்திக்கொள்கிறேன். இல்லையேல் வழக்கம்போல பின்னூட்டமும்,ஓட்டும் போட்டுவிடுங்கள். ஏனென்றால் ஓட்டு கேட்டு வாங்கும் பழக்கம் எனக்கு கிடையாது.[!?]. இப்ப மேட்டருக்கு வருவோம்...
1.குத்துவிளக்கின் தீபம் கிழக்குமுகமாக ஏற்றினால் துன்பங்கள் நீங்கி வசீகரம் உண்டாகும்!
2.மேற்குமுகமாக ஏற்றினால் கிரஹதோஷம்,பங்காளிப்பகை உண்டாகும்!
3.வடக்கு முகமாக ஏற்றினால் கல்வி மற்றும் சுபகாரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கும்.திரண்ட செல்வம் உண்டாகும்!
4.தெற்கு முகமாக ஏற்றினால் அபசகுணம்,பெரும்பாவம் உண்டாகும்.
5.குத்துவிளக்கில் தீபம் ஒரு முகமாக ஏற்றினால் மத்திம பலன் கிடைக்கும்!
6.இரு முகமாக ஏற்றினால் குடும்ப ஒற்றுமை ஓங்கும்!
7.மும் முகமாக ஏற்றினால் புத்திரசுகம், கல்வி கேள்விகளில் விருத்தி அடையும்!
8.நான்கு முகமாக ஏற்றினால் பசு,பால்,பூமி சேர்க்கை!
9.ஐந்து முகமாக ஏற்றினால் சர்வபீடை நிவர்த்தி ஆகும். ஐஸ்வர்யலஷ்மி கடாட்சம் பெருகும்!
10.தாமரைத் தண்டில் திரி போட்டால் மூன்று ஜென்ம பாவங்கள் போகும்!
11.வாழைத்தண்டு நூலில் திரி போட்டால் குலதெய்வ குற்றம், சாபம் போகும்!
12.புது மஞ்சள் சேலைத்துண்டில் திரி போட்டால் தாம்பத்திய தகராறு நீங்கும்!
13.புது வெள்ளை வஸ்த்திரத்தில் பன்னீரை விட்டு உலரவிட்டுப் போட்டால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். மூதேவி அகன்று விடுவாள்!
14.விளக்கிற்கு இடும் எண்ணெய் நல்லெண்ணெய் எனில் மத்திம பலன்!
15.விளக்கெண்ணை எனில் துன்பங்கள் விலகும்!
16.இலுப்பை எண்ணெய் எனில் பூஜிப்பவருக்கும்,பூஜிக்கப்படும் இடத்துக்கும் விருத்தி உண்டாகும்!
17.நெய் ஊற்றி விளக்கு ஏற்றினால் லட்சுமி கடாட்சம் பெருகும்!
அவ்வ்வ்வளவுதானுங்கோ!...
{என்னை பொருத்தவரை நம்ம மக்கள் விளக்கேத்தினாலே பெரிய விஷயம்.?!.}
Monday, March 9, 2009
அடிச்சாச்சு சதம்! { “நாட்அவுட்” பேட்ஸ்மேன் }
‘பேச்சுவழக்கு பழமொழிகள்’ என்ற தலைப்பில் நான் அடித்த அரைசதம் நண்பர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதால் தொடர்ந்து நின்னு ஆடலாம் என முடிவு செய்து தனி இன்னிங்க்ஸாகவே ஆடலாம் என முயற்சி செய்து,
ஸ்கோர் போர்டு:
1. நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும்!
2. பல் போனால் சொல் போச்சு!
3. உதடு தேய்வதைவிட உள்ளங்கால்கள் தேயலாம்!
4. யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே!
5. தம்பி உடையான் படைக்கு அஞ்சான்!
6. கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும்!
7. ஆடற மாட்டை ஆடிக் கறக்கணும், பாடுற மாட்டை
பாடி கறக்கணும்!
8. சிறுதுளி பெரு வெள்ளம்!
9. விதை ஒன்று போட்டால், சுரை ஒன்றா முளைக்கும்!
10. தாமரை இலை தண்ணீர் போல!
11. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது!
12. ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்
பிள்ளை தானே வளரும்!
13. கருப்பே அழகு, காந்தலே ருசி!
14. உப்பில்லா பண்டம் குப்பையிலே!
15. ஆண்டாண்டு காலம் அழுதாலும், மாண்டவர்
வருவாரோ மானிடத்தில்!
16. வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது!
17. பழத்த ஓலையை பார்த்து குறுத்து ஓலை சிரித்தால்,
குறுத்து ஓலையும் ஒருநாள் பழுத்த ஓலையாகும்!
18. தன் வினை தன்னை சுடும், ஓட்டப்பம் வீட்டை சுடும்!
19. நாய் விற்ற காசு குறைக்காது!
20. ஊர்கூடி தேர் இழுக்கணும்!
21. மைத்துனிக்கு மிஞ்சிய உறவும் கிடையாது,
முடிக்கு மிஞ்சிய கருப்பும் கிடையாது!
22. ஆடிப் பட்டம் தேடி விதை!
23. ஆடிக்காற்றில் அம்மியும் நகரும்!
24. எறும்பு ஊர கல்லும் தேயும்!
25. ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்!
26. ஆபத்தில் உதவும் நண்பனே, உண்மையான நண்பன்!
27. பிள்ளையார் கோவிலை இடித்து பெருமாள்
கோவில் கட்டுவதா?.!
28. எலி வலையனாலும் தனி வலை வேண்டும்!
29. பதறிய காரியம் சிதறும்!
30. சிறுதுளி பெருவெள்ளம்!
31. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்!
32. நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்!
33. பணம் பத்தும் செய்யும்!
34. நெருப்பில்லாமல் புகையாது!
35. வருமுன் காப்பதே சிறந்தது!
36. வாய்மையே வெல்லும்!
37. ஐயர் வரும்வரை அமாவாசை காத்திருக்குமா?.!
38. ஒற்றுமையே பலம்!
39. செய்யும் தொழிலே தெய்வம்!
40. நேர்மையே சிறந்த கொள்கை!
41. பழக பழக பாலும் புளிக்கும்!
42. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்!
43. மனமிருந்தால் மார்க்கமுண்டு!
44. ஈயத்தை பார்த்து இழித்ததாம் பித்தளை!
45. வெள்ளம் வரும்முன் அணை போடவேண்டும்!
46. புயலுக்கு பின் அமைதி!
47. அறிவு ஆற்றல் வாய்ந்தது!
48. அதிகம் கேள், குறைவாக பேசு!
49. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்!
50. பலமரம் கண்ட தச்சன் ஒருமரமும் வெட்டான்!
51. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு!
52. மன்னன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி!
53. வேலியே பயிரை மேய்ந்தால் விளைவது எப்படி?.!
54. தன்னைப்போல் பிறரையும் நேசி!
55. வெறுங்கை முழம் போடுமா?
56. வாக்குவாதம் செய்ய இருவர் தேவை!
57. அமாவாசை சோறு என்னைக்கும் அகப்படுமா?
58. புதுவிளக்குமாறு நல்லாதான் பெருக்கும்!
59. நன்றாய் முடிவதெல்லாம் நன்மைக்கே!
60. மொட்டைதலைக்கும் முழங்காழுக்கும்
முடிச்சு போடமுடியுமா?
61. கடை தேங்காய் எடுத்து வழி பிள்ளையாருக்கு
உடைத்தானாம்!
62. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்!
63. ஜான் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை வேணும்!
64. முசபுடிக்கிற நாயை மூஞ்சப்பாத்தாலே தெரியும்!
65. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!
66. சுத்தம் சோறு போடும்!
67. முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்!
68. ஆனைக்கும் அடி சறுக்கும்!
69. நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்!
70. உழைப்பே உயர்வு தரும்!
71. நுனலும் தன் வாயால் கெடும்!
72. சும்மாகிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி!
73. அழுதபிள்ளை பால் குடிக்கும்!
74. மூர்த்தி சிறித்தாயினும் கீர்த்தி பெரியது!
75. பணம் பாதளம் வரை பாயும்!
76. முயற்சி திருவினையாக்கும்!
77. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு!
78. வனத்தில் மேய்ந்தாலும் இனத்தில் அடையனும்!
79. கூடி வாழ்ந்தாலும் கோடி நன்மை!
80. விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள்தான்!
81. யாதும் ஊரே யாவரும் கேளிர்!
82. ஓட்டைசட்டியில் கொழுக்கட்டையை வேகவைத்தல் போல்!
83. உப்புக்கு சித்தாத்தால் உறவுமுறைக்கு நெய்வார்த்தால்.!
84. ஆடத்தெரியாதவன் மத்தளம்மேல் விழுந்தான்!
85. அடிமேல் அடி விழுந்தால் அம்மியும் நகரும்!
86. சோழியங்குடிமி சும்மா ஆடாது!
87. சாமிக்கே சப்பரம் இல்லையாம், பூசாரிக்கு புல்லட் கேட்குதா!
88. பூசாரியே சோத்துக்கு அழைய லிங்கம்
பஞ்சாமிர்தம் கேட்டதாம்!
89. எரியிர வீட்டில் பிடிங்கிய வரை லாபம்!
90. முருங்கை பருத்தாலும் உத்திரத்திற்கு ஆகாது!
91. இரும்படிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை!
92. எறும்பூர கல்லும் தேயும்!
93. அம்மி அறைக்க அறைக்க கரடிமேல் ஏறாது.!
94. துணிந்தவனுக்கு சமுத்திரமும் முழங்கால் மட்டும்!
95. வீரன் ஒருநாள் சாவான், கோழை தினந்தினம் சாவான்!
96. அலை ஓய்ந்து குளிப்பதெப்போ!
97. ஆசை அறுபதுநாள் மோகம் முப்பதுநாள்!
98. கேட்பவன் கேனையனென்றால் கேப்பையிலும்
நெய் வடியும்!
99. பட்டகாலிலே படும் கெட்டகுடியே கெடும்!
100. பெற்றமனம் பித்து, பிள்ளை மனம் கல்லு!
101. வாளினும் எழுதுகோள் வலிமையுடையது!
அடிச்சாச்சு சதம்! { “நாட்அவுட்” பேட்ஸ்மேன் }
Friday, March 6, 2009
பழமொழியில் அரைசதம் !
எங்கள் ஊரில் பேச்சுவழக்கில் அதிகமான பழமொழிகள் இருந்தாலும் எனக்கு தெரிந்த பழமொழிகளில் அரைசதத்தை எழுதுகிறேன். ஏதாவது பிழை இருப்பின் அதற்காக வருந்துகிறேன். சுட்டிகாட்டினால் திருத்திக்கொள்கிறேன்.
1. உப்பிட்டவரை உள்ளளவும் நினை !
2. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் !
3. சட்டியில் இருந்தால்தான் ஆப்பையில் வரும் ! [ஷஷ்டியில் இருந்தால்தான் அகப்பையில் வளரும் !]
4. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது !
5. எள் என்றால் எண்ணெயாய் இரு !
6. தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை !
7. தாய் எட்டடிப் பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் !
8. மாமியார் உடைத்தால் மண்சட்டி, மருமகள் உடைத்தால் பொன்சட்டி !
9. வர வர மாமியார்,கழுதைபோல போனாலாம் !
10. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன் !
11. கணவனே கண் கண்ட தெய்வம் !
12. ஆற்றில் போட்டாலும் அளந்து போடு !
13. தனக்கு போகதான் தானமும் தர்மமும் !
14. மனமிருந்தால் மார்க்கமுண்டு !
15. பொறுத்தார் பூமியாள்வார் !
16. ஆற்று நிறைய தண்ணீர் போனாலும் நாய் நக்கிதான் குடிக்கும் !
17. நாய் வாலை நிமித்த முடியாது !
18. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை !
19. விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பாவா? !
20. இனம் இனத்தோட சேரும் !
21. காலம் பொன் போன்றது,கடமை கண் போன்றது !
22. இக்கரைக்கு அக்கரை பச்சை !
23. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் !
24. சிறுதுளி பெருவெள்ளம் !
25. சிறு துரும்பும் பல் குத்த உதவும் !
26. மின்னுவதெல்லாம் பொன்னல்ல !
27. நிறைகுடம் நீர் தளும்பாது, குறைகுடம் கூத்தாடும் !
28. குறைக்கும் நாய் கடிக்காது !
29. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் !
30. காக்கைக்கு தன் குஞ்சும் பொன் குஞ்சு !
31. ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது !
32. ஆழம் தெரியாமல் காலை விடாதே !
33. வெட்டிட்டு வானா, கட்டிட்டு வருவான் !
34. கூழானாலும் குளித்துகுடி, கந்தையானாலும் கசக்கிகட்டு !
35. காடு வா வா என்கிறது, வீடு போ போ என்கிறது !
36. சிட்டு குருவிக்கு பட்டம் கட்டியமாதிரி !
37. உயர உயர பறந்தாலும், ஊர்குருவி பருந்தாகாது !
38. ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு !
39. ஆடத்தெரியாதவன் தெருக்கோணல் என்பனாம் !
40. அறுக்க தெரியாதவனுக்கு 58 அரிவாளாம் !
41. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம் !
42. ஊர்குருவி எவ்வளவு உயரபறந்தாலும் ஊர் போய்சேராது !
43. பனமரத்தின் கீழ்நின்று பால் குடித்தாலும், கள் குடித்ததாகத்தான் அர்த்தம் !
44. வினை விதைத்தவன் வினை அறுப்பான் !
45. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் !
46. புலி பசித்தாலும் புல்லை திங்காது !
47. தன் கையே தனக்குதவி !
48. அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான் !
49. ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் !
50. பேராசை பெரு நஷ்டம் !
51. அழுதாலும் பிள்ளையை அவள்தானே பெறவேண்டும் !
யப்பாடா ! ஒரு வழியா அரைசதம் போட்டாச்சு, இனி அவுட்டானாலும் கவலையில்லை... நீங்கள் விருப்பப்பட்டால் சதம் அடிப்பதற்கு முயற்சிபண்ணலாம்..!
Monday, March 2, 2009
ஆட்டுக்குட்டியும், அமைச்சர் லல்லுவும்!
பத்து தினங்களுக்கு முன்பு திருநெல்வேலி மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் பரபரப்பாகவும்,ஆச்சர்யமாகவும் பேசப்பட்டதும்,தினகரன் நாளிதழில் வெளியான ஒரு உண்மை செய்தி :
திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு கடந்த 8ம்தேதி செந்தூர் எக்ஸ்பிரஸ் இரயிலை துவக்கி வைப்பதற்கு அமைச்சர் லாலுபிரசாத் அவர்கள் திருச்செந்தூர் வந்தார். அப்போது திருச்செந்தூர் அருகிலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் அமைச்சருக்கு பிறந்து 20 நாட்கள் ஆன அழகான ஆட்டுகுட்டியை நினைவு பரிசாக வழங்கினார். பிராணிகள் மீது கொள்ளைபிரியம் கொண்ட அமைச்சர் லாலு பாட்னாவில் உள்ள தனது வீட்டிற்கு அக்குட்டியை கொண்டு சென்றார்.
தாயை பிரிந்த ஏக்கத்தில் குட்டி ஆடு பால் குடிக்காமல் அடம்பிடித்தது. இதனால் ஆட்டுகுட்டியின் உடல்நிலை மோசமானது. கால்நடை மருத்துவர்கள் சிகிச்சையளித்தும் பயனளிக்கவில்லை. உடனடியாக தாயையும், குட்டியையும் சேர்த்து விட முடிவு செய்யப்பட்டு திருச்செந்தூருக்கு தகவல் தரப்பட்டது. திருச்செந்தூரில் உள்ள அமைச்சரின் ஆதரவாளர்கள் நினைவு பரிசு கொடுத்த ஆட்டின் உரிமையாளரை பலமணி நேரம் தேடிக் கண்டுபிடித்து அவரிடம் விவரத்தைச் சொல்லி, தாய் ஆட்டை வாங்கிவந்து அதற்கு ராஜ உபசரிப்பு அளிக்கப்பட்டது. மேலும் ஆட்டின் உடல்நலத்தை கவனிக்க ஒரு கால்நடைமருத்துவரும், ஒரு உதவியாளரும் நியமிக்கப்பட்டனர்.இதையடுத்து தாய் ஆட்டை திருச்செந்தூரில் இருந்து தூத்தூக்குடிக்கு காரில் கொண்டுசென்று அங்கிருந்து மைசூர் எக்ஸ்பிரஸில் மதுரைக்கும் அங்கிருந்து சம்பர்கிராந்தி எக்ஸ்பிரஸில் டெல்லிக்கும் கொண்டுசெல்லப்பட்டது.இந்த இரயிலில் ஆட்டுடன் ஒரு கால்நடை மருத்துவர் உட்பட மூன்று நபர்கள் டெல்லி சென்றனர். இதற்கிடையில் தாயை காணாமல் தவிக்கும் குட்டியை பாட்னாவிலிருந்து டெல்லிக்கு கொண்டு வந்தனர். 3நாள் பயணத்தை முடித்த தாய் ஆடு குட்டியைக் கண்டதும் பாசத்துடன் அழைக்க.. தாயின் சத்தம் கேட்ட குட்டிஆடும் உற்சாகத்தில் துள்ளிக்குதித்து 8 நட்களுக்கு பிறகு பால் குடித்தது. இதை அங்கிருந்த அனைவரும் கண்டு ரசித்தனர்.
குட்டிஆட்டிற்காக எடுத்த முயற்சிக்காக வன உயிரின அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாராட்டினர்.பின்னர் தாயும்,குட்டியும் பாதுகாப்பாக டில்லியிருந்து பாட்னாவில் உள்ள அமைச்சர் லல்லு வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டன.
.
Saturday, February 28, 2009
மனதில் சில வரிகள்.!
சில வருடங்களுக்குமுன் AVM நிறுவனம் தயாரித்து தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நாடகம் ஒன்றின் பாடல்...
வாழ்க்கை வாழ்க்கை இன்பமடா
வாழ்வது அவரவர் கையிலடா..
வாழ தெரிந்தவன் மனிதனடா
வாழ வைப்பவன் தெய்வமடா!
மூங்கில் காட்டில் தீ பிடித்தால்
புல்லாங்குழல்கள் மிச்சமடா..
துயரம் கண்டு நீ சிரித்தால்
வாழ்க்கை உனக்கு உச்சமடா!
வாழ்க்கை என்பது சூதாட்டம்
தோல்வியை அனுபவம் ஆக்கிவிடு..
வாழ்க்கை என்பது வெறுந்துணிதான்
உந்தன் அளவுக்கு தைத்து விடு!
வாழ்க்கை என்பது வாழைமரம் போல்
ஒவ்வொரு பாகமும் நன்மையடா..
வாழ்க்கை என்பது மேகம் போல்
மாறி கொண்டே போகுமடா!
வலிகள் துன்பம் காயம் இல்லாமல்
வாழ நினைப்பவன் கோழையடா..
இடுப்பு வலிதான் தாய்க்கு வராமல்
எவனும் பிறப்பது இல்லையடா!
வாழ்க்கை வாழ்க்கை இன்பமடா
வாழ்வது அவரவர் கையிலடா..
.
Friday, February 20, 2009
மத்தியச்சிறை.
1837ம் ஆண்டு ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டு திறக்கப்பட்டது சென்னை மத்தியச்சிறை. சுமார் 15ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டது. இச்சிறையில் கைதிகளின் தண்டனை காலத்திற்கேற்ப பிரிவுகள் இருந்ததே தவிர, கைதிகளின் குற்றங்களுக்கேற்ப பிரிவுகள் கிடையாது. கைதிகளுக்கு தேவையான உணவு, மருத்துவம் இந்த இரண்டை தவிர வேறு வசதிகள் கிடையாது.
[தற்போதைய சிறை; கைதிகளின் தண்டனைகாலத்திற்கேற்ப பல பிரிவுகளாக அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. யோகா பயிற்சி, உடற்பயிற்சிக்கூடம், நூலகம், மருத்துவம், நல்லஉணவு, சிறுதொழில் உற்பத்திக்கூடம் என்று சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.]
பெரிய குற்றங்களுக்கு தனி அறையும், சிறிய தண்டனை காலத்திற்கு குறைந்தது 30 நபர்கள் தங்குமாறு மொத்தமாக பெரிய அறைகளும் உள்ளன. எந்த அறைகளுக்கும் மின்வசதி கிடையாது.
ஆயுள்கைதிகள் தனது அறைகளின் சுவற்றில் தனது பெயர், தண்டனை காலம், போன்றவற்றை எழுதியுள்ளனர். சிலர், “ ‘என்னை மன்னித்துவிடுங்கள்’!, ‘நான் அனுபவித்த கொடுமையை யாரும் அனுபவிக்கக் கூடாது!’, ‘என்னை தூக்கில் போடாதீர்கள்!’ ” போன்ற வாசகங்கள் எழுதியுள்ளனர்.
மின்சார வேலி பொருத்தப்பட்ட மிகப்பெரிய மதில்சுவர்கள் நம்மை பிரமிக்க வைக்கிறது.அதே நேரத்தில் இதிலிருந்தும் கைதிகள் தப்பித்து விடுகிறார்கள்!. என்றால் அது மிகபெரிய கேள்வி குறி?..
சிறை மாற்றம் செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேலாகிவிட்டதால் மிகவும் பாழடைந்து இடிக்கப்பட்ட கட்டிடம் போல காட்சியளிக்கிறது. மாற்றம் செய்யப்பட்ட உடனே பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.இருப்பினும் நாம் அனைவரும் காணவேண்டிய ஒரு இடமாக அமைந்திருக்கிறது.{இந்த வாய்ப்பை தவறவிட்டால் என்றுதான் சிறையைப் பார்ப்பது?.}
கல்லூரி,பள்ளி மாணவர்கள் கூட்டமும் அதிகமாக காணப்படுகிறது. இதெல்லாவற்றையும்விட நம்ம “காதலர்கள்!?” கூட்டத்திற்கும் பஞ்சமில்லை.
மொத்தத்தில் நிரபராதிகளின் ஆதங்கத்தை தனக்குள் கட்டுபடுத்திக்கொண்டும், குற்றவாளிகளின் எண்ணங்களை தனது கட்டுபாட்டிற்குள் வைத்துகொண்டும் கம்பீரமாக காட்சியளிக்கும் ஆங்கிலேயங்காலத்து கட்டிடம் இன்னும் ஒரு வாரத்திற்குபின் தரைமட்டமாகப்போகிறது என்பதுதான் உண்மை.இருப்பினும் இவ்விடம் அரசு பொதுமருத்துவமனையின் விரிவாக்கத்திற்கு பயன்படுத்தபடுகிறது என்பதால் நன்மையே!.
Tuesday, February 10, 2009
என் காதலே.. வா..!

தெரியவில்லை..
உன் வாழ்வில் சுமை தெரியாமல்
நான் நினைக்கிறேன்..
பறந்து வா..
Thursday, February 5, 2009
இதுதான் குடியரசு நாட்டின் இலட்சணமா?...
கொஞ்சம் கொஞ்சமாக அதன் உண்மை நிலை தெரியவர, புதிய கட்சிகளும்,எதிர்கட்சிகளும் அதைப்பற்றி பேச்செடுக்க தொடங்குகின்றனர். இதற்கெல்லாம் மூலாதாரமாக மாணவர்கள் போராட்டம். அனைத்துரக மாணவர்கள், வழக்கறிஞர்கள் வரிசையில் தற்போது அனைத்து பிரிவு பொது மக்களும் தமிழகத்தில் போராட்டத்திற்கு தயாராகிவிட்டனர். இலங்கை பிரச்சனைக்கு ஒரு முடிவுகட்ட அனைவரும் விரும்புகின்றனர்.இதன் அஸ்திவாரமாக போராளி "முத்துகுமரனின்" மரணம் அமைந்தது. தனிப்பட்ட நபரின் சொந்தவிருப்பத்திற்காகவும், தேசத்திற்கு களங்கம் விளைவிக்கவும் நடக்கும் போராட்டம் போல, இதற்கு பலத்தபாதுகாப்பு, உயர்நீதிமன்ற தடை உத்தரவு, ஆளும் கட்சியின் அமைதி என பல தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு இனத்தை சார்ந்த பொது மக்கள் பல்லாயிரக்கணக்கில் அழிக்க படுகிறார்கள். அதற்கான காரணம், யார்மீது நியாயம் போன்ற உண்மைகள் உலகிற்கே தெரியும். ஒரு கருத்தை முன்நிறுத்தி நியாயம் கிடைப்பதற்காக பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினால் அதற்கு வழி காணாமல் அமைதி காக்கிறது உலக நாடுகள்.
தனது ஆட்சியின் கீழுள்ள ஒரு மாநிலத்தில் நடக்கும் ஒரு போராட்டத்திற்கான காரணங்கள் என்ன?..அதற்கான தீர்வுகள் யாவை?.. என்று ஆராய்வதற்கு மத்திய மாநில அரசுகள் அக்கறை காட்டுவதில்லை.இராணுவ ஆட்சியைக்கூட அமல்படுத்தும் அதிகாரமுள்ள, ஐந்தாண்டுகளுக்கு யாராலும் அசைக்கமுடியாத "குடியரசுதலைவர்" என்னதான் செய்கிறார்..???
Wednesday, February 4, 2009
விகடனில் எனது பதிவு.!
மூன்று மாதங்கள்கூட நிறைவடையாத[வருகை பதிவை காண்க..] நிலையில்...
நான் கடைசியாக எழுதிய "சர்க்கஸ் எங்கள் வாழ்வாதாரம்!."_என்ற பதிவிற்கு யூத்புஃல்.விகடன்.காம்._ல் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
விகடன் குழுமத்திற்கு எனது நன்றி!.
Tuesday, February 3, 2009
சர்க்கஸ் எங்கள் வாழ்வாதாரம்!.
‘சர்க்கஸ்’ என்பது ஒவ்வொருவரின் தனித்திறமையை வெளிப்படுத்தும் ஒரு கூட்டுமுயற்சியாகவே தெரிகிறது. ஒவ்வொருவரும் திறமையுடனும், நேர்த்தியாகவும், அதே நேரத்தில் உயிரை பணயம் வைத்து அவர்கள் செய்யும் ‘வீரசாகசங்கள்’ என்னை திகைக்க வைத்தது. நம்மால் கனவில்கூட நினைத்து பார்க்கமுடியாத நிலையில் அவர்களின் சாகசங்கள் திகழ்கின்றன. அனைவரும் மெருகேறிய உடற்கட்டுடன் காணப்பட்டனர்.
ஒவ்வொருவரும் தனது உடலை ‘பேலன்ஸ்’ செய்யும்விதம் மிகவும் அருமையாக இருந்தது. தனிமனிதன் கற்பனைசெய்யமுடியாத அளவிற்கு அவர்களின் ‘பேலன்ஸ்’ காணப்பட்டது. ‘பேலன்ஸ்’ என்கிற ஒரு வார்த்தையில்தான் அவர்களின் மொத்த சாகசங்களும் அடங்கியுள்ளது.
குறிப்பாக..
1. தனித்தனி சைக்கிள்களில் ஒன்பது பெண்கள், அந்த குறுகிய மேடையில் கைகோர்த்துகொண்டு, முன்சக்கரத்தை தூக்கிக்கொண்டு பின்சக்கரத்தில் மட்டும் சுற்றிவருவது.
2. ஒரு பெண், சைக்கிளின் முன்சக்கரத்தை தூக்கியபடி இரண்டு கைகளையும் அந்தரத்தில் நீட்டியபடி மேடையின் விளிம்பில் அமைக்கப்பட்ட அரை அடி உயரமுள்ள பலகையில் மேடையை சுற்றிவருவது.
3. வட்டவடிவக் கூண்டுக்குள் நான்கு வீரர்கள் ஒரே நேரத்தில் குறுக்கும் நெடுக்குமாக பைக் ஓட்டுவது..
‘சர்க்கஸ்’ கூடாரமைப்பு பணியின்போது பாதுகாப்பு பணிக்காக அவர்களுடன் இருந்தபோது...
ஜெமினி, ஜம்போ, ராயல் மூன்று சர்க்கஸ்சும் ஒரே நிறுவனத்தைச் சார்ந்ததாம். 600க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள். இவர்கள் அனைவரும் பிற நிறுவன ஊழியர்களைப்போல மாதசம்பளம் பெறுகின்றனர். இவர்களுக்கு PF போன்ற அனைத்து பிடித்தங்களும் பிடித்தம் செய்யப்படுகிறது. இவர்களது நிறுவனம் மொத்தநஷ்டத்தில் இயங்கினாலும், இவர்கள் அனைவருக்காகவும் இதை நடத்திவருகிறார் இவர்களது நிறுவனர். ஒரு இடத்தில் குறைந்தது மூன்று மாதகாலம் தங்கவேண்டியிருப்பதால் ஆயிரக்கணக்கான பணவிரயமாகிறது. அதே நேரத்தில் சில கஷ்டங்களையும் அனுபவிக்கின்றனர்.
குறிப்பாக...
1. ஒரு இடத்தில் சர்க்கஸ் முடியும்முன்னரே அடுத்த இடம் தயாராகிவிடுவதால் அந்த இடத்திற்கு செல்லும் பயணநாட்கள்தான் அவர்களின் ஓய்வு நாட்கள்.
2. இடம் மாறிக்கொண்டே இருப்பதால் குடும்பம், குழந்தைகளையும் அழைத்து செல்ல வேண்டியுள்ளது.
3. மாதக்கணக்கில் தங்குவதால் இவர்கள் அனைவருக்கும், உணவுக்காக தனியாக ஒரு மெஸ் அமைப்பது, குடிப்பதற்காக லாரி லாரியாக குடிநீர் வாங்குவது, மற்ற தேவைக்கான தண்ணீருக்காக தனியாக ஒரு ‘போரிங்’ போடுவது.,
4. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக பாதுகாப்பான கூடாரங்கள் அமைப்பது, விலங்குகளுக்கு தேவையான உணவுகள் மற்றும் பாதுகாப்பு கூடாரங்கள் அமைப்பது.
"நாகரிக காலத்தில் ‘சர்க்கஸ்’ நலிவடைந்துவருவதால் உழைப்பிற்கேற்ப ஊதியம் கிடைக்காவிட்டாலும், அனைவரும் ஒரேகுடும்பமாக மனநிம்மதியுடன் வாழ்கிறோம்"என்கிறார்கள்.
அதே நேரத்தில்..
"ஏதாவது ஒரு காரணத்தைக்கூறி இலவசமாக டிக்கெட்டுகளை வாங்கிச் செல்பவர்கள்தான் அதிகம்" என்றும் வருந்துகிறார்கள்.
உங்கள் இயந்திர வாழ்வில் உங்கள் அருகாமையில் என்றாவது ‘சர்க்கஸ்’ துவங்கப்பட்டால்... இவர்களுக்காகவும், உங்கள் குழந்தைகளுக்காகவும் ஒதுக்குங்கள்....
மூன்று மணிநேரம், 30/- ரூபாய்.
Wednesday, January 28, 2009
காதலே நிம்மதி!
'பாலா' என்னுடன் பணிபுரியும் சக ஊழியர். காதல் மீது ஆர்வம் இல்லாமல் தனிகாட்டு ராஜாவாக வாழ்ந்த பாலாவின் வாழ்வில்..
"தன்னுடன் +2 வரைப் படித்த பக்கத்து ஊரில் வசிக்கும்பெண் திடீரென தனது காதலை இவரிடம் வெளிப்படுத்த"...
'தனக்கு ஞாபகமே இல்லாத பெண்' ஒருவர் தன்னிடம் நேரிடையாக தன் காதலை வெளிப்படுத்தியதால் மகிழ்ச்சியுடன் காதலை ஏற்றுக்கொண்டார்.
ஒரு வருடம் ஓடியது..
அடிக்கடி சந்தித்துக்கொண்டதாலும்,போனில் பேசிக்கொண்டதாலும் இவர்கள் காதல் இவர்களின் பெற்றோருக்கு தெரிய வந்தது. பாலாவின் வீட்டில் காதலை ஏற்றுக்கொண்டனர். அவர் காதலி வீட்டிலும் பாலாவின் பணி,குணநலன் பற்றி விசாரித்து சம்மதித்தனர்.
தை மாதம் நிச்சயதார்த்தம் செய்ய எண்ணி,
பொருத்தம் பார்ப்பதற்காக போனில், பெண்ணின் தந்தை பாலாவிடம், நட்சத்திரத்தை கேட்க...
பாலா "கேட்டை" என்று கூறினார்.
அன்று இரவே அப்பெண் பாலாவிற்கு போன் செய்து,
'நட்சத்திரம் பொருத்தம் இல்லை'[கேட்டை நட்சத்திரம் பெண்ணின் அண்ணனுக்கு ஆகாதாம்]. அதனால் அப்பா, 'கல்யாணத்திற்கு சம்மதிக்க மாட்டேன். என்கிறார்' என்றது.
பாலா 'என்ன செய்வது?' என்று தெரியாமல்,
நாங்கள் தங்கியிருக்கும் அறையையே குழப்பத்தில் ஆழ்த்தினார்.
நாங்கள் அனைவரும் ஒன்றாக "உடனடியாக ஊருக்கு சென்று அந்த பெண்னை கூட்டிக்கொண்டு வாருங்கள் பதிவு திருமணம் செய்து விடலாம்" என்று சொல்ல.. உடனடியாக ஒரு வாரம் லீவு எடுத்துக்கொண்டு ஊருக்கு சென்றார். லீவு முடித்து வந்த பாலாவை அனைவரும் கட்டியணைத்து வரவேற்றோம்.
விடுமுறையில்;
ஊருக்கு சென்ற பாலா ஜாதகத்தைப் பற்றி, இரண்டுபக்க பெற்றோரும் நேரிடையாக பேசாததை உணர்ந்தார். 'தான் கவனிக்காமல் வேறு நட்சத்திரத்தை சொல்லிவிட்டதாக' பெண்வீட்டில் கூறிவிட்டு..
தனது பெற்றோரை கஷ்டபட்டு சம்மதிக்க வைத்து, தனது காதலியின் அமோக ஆதரவுடன், தனக்கு தெரிந்த ஜோதிடரை வைத்து, பெண்ணின் நட்சத்திரத்திற்கேற்ப தனது நட்சத்திரத்தை மாற்றி, ஜாதகத்தை புதிதாக தயார் செய்து, இச்சம்பவம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக பாதுகாத்து, ஜாதகத்தை பெண் வீட்டில் கொடுத்து,
"நிச்சயதார்த்தத்தை" முடித்து விட்டார்.
விரைவில் திருமணம்.
Tuesday, January 20, 2009
இரவில்... மருத்துவமனை!
திருநெல்வேலி டவுணில் உள்ள
ஒரு நர்சிங் ஹோமில்(பெயர் வேண்டாமே..) தங்கியிருந்தேன்.
பகல்:
காலை 7 மணிக்கு ஒவ்வொரு அறையாக மருத்துவமனை முழுவதும் 'டெட்டால்' போட்டு சுத்தமாக துடைக்கின்றனர்.
8 மணிக்கு டாக்டர் விசிட் வருகிறார். அவர் வருவதற்கு முன் குறைந்தது இரண்டு முறையாவது நர்ஸ் வந்து "அறையை சுத்தமாக வையுங்கள், துணியை மடித்து வையுங்கள், பாத்திரத்தை ஓரமாக வையுங்கள், 'பேஷண்டோட' அம்மா மட்டும் இருங்க.. மத்தவங்கெல்லாம் வெளியே இருங்க" என்கின்றனர்.
டாக்டர்களும் நல்ல முறையில் செக்கப் செய்து 'ஆறுதல் வார்த்தைகளை' அமைதியாக சொல்லி செல்கின்றனர்.
அடுத்து 12 மணி, 6 மணி என்று விசிட் வருகின்றனர்.
நோயாளிகளுக்கு அவசரம் என்றால்
உடனே வந்து பார்க்கிறார்கள்.
நோயாளிகளுக்கு தேவையான உணவுகளை
அவர்களே தயார் செய்து தருகிறார்கள்.
மருத்துவமனையே சுத்தமாகவும், அமைதியாகவும் இருக்கிறது.
இரவு:
மருத்துவமனையின் முக்கிய மருத்துவர்கள் அனைவரும்
வீட்டிற்கு சென்று விட
இரவு மருத்துவர் ( அவர் பயிற்சி மருத்துவர்) மட்டும் இருக்கிறார்.
8 மணிக்கு கடைசி விசிட்க்கு மட்டும் அவர் வந்து செல்கிறார்.
அவர் விசிட் முடிந்தவுடன் அவருக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு செல்கிறார். அதன் பிறகு மருத்துவமனையின் நிலையே வேறு...
நர்சுகள், ஊழியர்கள் அவரவர் வேலையை வேகமாக முடித்துவிட்டு
9 மணிக்குள் ரிசப்சன் ஹாலுக்கு வந்துவிட அனைவரின் கையிலும் சாப்பாட்டுத்தட்டு.
பலகருத்துகளை பரிமாறிக்கொண்டு (கூச்சலிட்டுக்கொண்டு) சாப்பிடுகின்றனர். பிறகு டி.வி யை போட்டு சவுண்ட் அதிகமாக வைத்துக்கொண்டு அனைவரும் டி.வி யுடன் சேர்ந்து கூத்தடிக்கின்றனர்.
குறுகலான சதுரவடிவ கட்டிடம் என்பதால் "டி.வி சவுண்ட்" கட்டிடம் முழுவதும் அதிர்கிறது.
அதிகபட்சமாக இரவு 1.30 மணி வரை ஓடுகிறது.
அது மட்டுமல்லாமல் அனைவரும் ஒன்று சேர்ந்து (நர்ஸ் உடையுடன்)சத்தமிட்டு ஆடுகின்றனர்.
பிறகு அனைவரும் இழுத்துமூடி தூங்குகின்றனர்.
நோயாளிகளுக்கு அவசரம் என்றாலும், டிரிப்ஸ் மாத்துவதற்கு
அழைத்தாலும் 'வருகிறேன்' என்று கூறிவிட்டு தாமதமாக வருகின்றனர். இரண்டுதடவை 'டிரிப்' முடியும் நேரம் நானே அதை நிறுத்திவிட்டு மீண்டும் அவர்களை அழைக்க சென்றுள்ளேன்.
இரவு அவசரத்திற்கு கடைக்கு செல்வதற்கு
கதவை திறப்பதற்கு ஊழியரை எழுப்பினால்,
'முடியாது. காலையில் வாங்கிக்கொள்ளவும்' என்று விரட்டுகிறார்.
மருத்துவமனையில் தங்கியுள்ள அனைவரும் தங்களுக்குள் புலம்புவது மனதிற்க்கு கஷ்டமாக உள்ளது.
விடிந்தவுடன் பார்த்தால் அனைவரும் நல்லவர்கள் போல நடந்துகொள்கிறார்கள்.
'இதை தட்டிகேட்டே தீருவேன்' என்று நான் கிளம்ப...
'நமக்கெதுக்கு இதெல்லாம்' என்று என் மனைவி சொல்ல...
அதையும் மீறி மருத்துவரை சந்திக்க...
மருத்துவமனை அமைதியாகிவிட்டது.
ஆனால் என் மனைவி இன்னும் அமைதியாகவில்லை.
.
Thursday, January 8, 2009
பயணம் _ மீண்டும்!
அவள் நினைவுகளை தாங்கி வரும்...
என் இனிய பேனாஓய்வு பொழுதில் ஓய்வில்லாமல்
அவளை எழுதி கொள்ளும்...
யாரோ எழுதிய கிறுக்கல்களின்
உள்ளே அவள் முகம்...
பல ஒலிநாடா _ அவள்
புன்னகையை சிந்தும்...
வழி மறிக்கும்போக்குவரத்து நெரிசல்! _ என்னை
பழைய நினைவுகளில்
பயணிக்கச்செய்யும்...
காலை நேர பனித்துளி _ என்னை
குளிர்விக்கும் அவள் நினைவால்...
இன்னபிற யாவும்,
ஏமாற்றமே இன்றி
அவளை
என்னிடம் ஒப்படைத்து
செல்லும்.
காலம் எல்லா நிஜங்களையும்
நிழல்களாக மாற்றியது
ஆனால்..
இடைவெளி வந்த(சந்திப்பில் மட்டும்)பின்னும்
நெஞ்சில் ஆடும் காதல்!.
இன்னும் மாறவில்லை எதுவும்!...
Thursday, January 1, 2009
சாமிகளுக்கு தனி கிளாஸ்!
அப்போது எங்களை தாண்டிச்சென்ற ஒருவர் மீது எங்கள் கவனம் சென்றது. அவர் 25 வயது மதிக்கதக்க ஒரு வாலிபர். பேண்ட்சர்ட் டக் இன் செய்து, நான்கு நாள் தாடி, நெற்றியில் சந்தனபொட்டு வைத்திருந்தார். உற்றுக் கவனித்தேன்.. அவர் கோவிலுக்கு செல்ல மாலை போட்டிருந்தார். ஆனால் காலில் செருப்பு போடவில்லை. உடனே என் நண்பரிடம்,
"இவ்வளவு லட்சணமாக டிரஸ் பண்ணின இவர் செருப்பு போடாதது நல்லாவே இல்லை".
"அவர் கோவிலுக்கு செல்ல மாலை போட்டிருப்பதால் செருப்பு போடாமல் இருக்கிறார்".
"மாலை போட்டுவிட்டு காலில் செருப்பு போடாமல் வெளியில் செல்லும்போது தெருக்களில் உள்ள எச்சில் போன்ற பல அசுத்தங்களை மிதிப்பதைவிட செருப்பை சுத்தமாக வைத்துக்கொண்டும், அடிக்கடி நீரினால் கழுவிக்கொண்டும் செல்லவேண்டியதுதானே?"
"மாலை போட்டிருப்பவர்களைப் பற்றி அப்படி பேசாதே! அது தப்பு! அதுபாவம்!"
"சரிப்பா! நமக்கெதுக்கு இதெல்லாம். வா!.. போகலாம்". என்று நண்பரை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள "டாஸ்மாக்" பார் உள்ளே சென்றேன். டேபிளில் அமர்ந்து ஆர்டர் கொடுத்துவிட்டு, பேசிக்கொண்டிருக்கும்போது சுவரில் மாட்டப்பட்டிருந்த போர்டை பார்த்தேன்..
ஒரு நிமிடம் திகைத்து விட்டு, என் நண்பரிடம் அந்த போர்டை காட்டினேன். அதை பார்த்த என் நண்பர், "இஈஈ..." என இளித்தவாறு எனை பார்த்தார். மீண்டும் ஒருமுறை நான் அதை வாசித்தேன்.
"மாலை போட்டுவரும் சாமிகளுக்கு தனி கிளாஸ் பயன்படுத்தப்படுகிறது."