Saturday, February 28, 2009

மனதில் சில வரிகள்.!

நாம் எத்தனையோ பாடல்கள் கேட்டிருப்போம்!. ரசித்திருப்போம்!. மனதில் சில வரிகளும் பதிந்திருக்கும். காதல், நட்பு, சோகம், தத்துவம், கானா, என்று பல பிரிவுகளில் நாம் பாடல்களை ரசித்துக்கொண்டிருக்கிறோம். நானும் பல பாடல்களை ரசித்ததுண்டு. அவற்றில் ஒன்றான...
சில வருடங்களுக்குமுன் AVM நிறுவனம் தயாரித்து தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நாடகம் ஒன்றின் பாடல்...


வாழ்க்கை வாழ்க்கை இன்பமடா
வாழ்வது அவரவர் கையிலடா..
வாழ தெரிந்தவன் மனிதனடா
வாழ வைப்பவன் தெய்வமடா!

மூங்கில் காட்டில் தீ பிடித்தால்
புல்லாங்குழல்கள் மிச்சமடா..
துயரம் கண்டு நீ சிரித்தால்
வாழ்க்கை உனக்கு உச்சமடா!

வாழ்க்கை என்பது சூதாட்டம்
தோல்வியை அனுபவம் ஆக்கிவிடு..
வாழ்க்கை என்பது வெறுந்துணிதான்
உந்தன் அளவுக்கு தைத்து விடு!

வாழ்க்கை என்பது வாழைமரம் போல்
ஒவ்வொரு பாகமும் நன்மையடா..
வாழ்க்கை என்பது மேகம் போல்
மாறி கொண்டே போகுமடா!

வலிகள் துன்பம் காயம் இல்லாமல்
வாழ நினைப்பவன் கோழையடா..
இடுப்பு வலிதான் தாய்க்கு வராமல்
எவனும் பிறப்பது இல்லையடா!

வாழ்க்கை வாழ்க்கை இன்பமடா
வாழ்வது அவரவர் கையிலடா..

.

Friday, February 20, 2009

மத்தியச்சிறை.

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகேயுள்ள பழைய மத்தியசிறை பொதுமக்களின் பார்வைக்காக திறந்துவிடப்பட்டுள்ளது. இச்சிறையை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும் பார்வையிடுகின்றனர். நானும் பார்ப்பதற்காக சென்றிருந்தேன்.அதை பற்றிய சிலவரிகள்...

1837ம் ஆண்டு ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டு திறக்கப்பட்டது சென்னை மத்தியச்சிறை. சுமார் 15ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டது. இச்சிறையில் கைதிகளின் தண்டனை காலத்திற்கேற்ப பிரிவுகள் இருந்ததே தவிர, கைதிகளின் குற்றங்களுக்கேற்ப பிரிவுகள் கிடையாது. கைதிகளுக்கு தேவையான உணவு, மருத்துவம் இந்த இரண்டை தவிர வேறு வசதிகள் கிடையாது.
[தற்போதைய சிறை; கைதிகளின் தண்டனைகாலத்திற்கேற்ப பல பிரிவுகளாக அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. யோகா பயிற்சி, உடற்பயிற்சிக்கூடம், நூலகம், மருத்துவம், நல்லஉணவு, சிறுதொழில் உற்பத்திக்கூடம் என்று சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.]
பெரிய குற்றங்களுக்கு தனி அறையும், சிறிய தண்டனை காலத்திற்கு குறைந்தது 30 நபர்கள் தங்குமாறு மொத்தமாக பெரிய அறைகளும் உள்ளன. எந்த அறைகளுக்கும் மின்வசதி கிடையாது.
ஆயுள்கைதிகள் தனது அறைகளின் சுவற்றில் தனது பெயர், தண்டனை காலம், போன்றவற்றை எழுதியுள்ளனர். சிலர், “ ‘என்னை மன்னித்துவிடுங்கள்’!, ‘நான் அனுபவித்த கொடுமையை யாரும் அனுபவிக்கக் கூடாது!’, ‘என்னை தூக்கில் போடாதீர்கள்!’ ” போன்ற வாசகங்கள் எழுதியுள்ளனர்.
மின்சார வேலி பொருத்தப்பட்ட மிகப்பெரிய மதில்சுவர்கள் நம்மை பிரமிக்க வைக்கிறது.அதே நேரத்தில் இதிலிருந்தும் கைதிகள் தப்பித்து விடுகிறார்கள்!. என்றால் அது மிகபெரிய கேள்வி குறி?..

சிறை மாற்றம் செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேலாகிவிட்டதால் மிகவும் பாழடைந்து இடிக்கப்பட்ட கட்டிடம் போல காட்சியளிக்கிறது. மாற்றம் செய்யப்பட்ட உடனே பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.இருப்பினும் நாம் அனைவரும் காணவேண்டிய ஒரு இடமாக அமைந்திருக்கிறது.{இந்த வாய்ப்பை தவற‌விட்டால் என்றுதான் சிறையைப் பார்ப்பது?.}
கல்லூரி,பள்ளி மாணவர்கள் கூட்டமும் அதிகமாக காணப்படுகிறது. இதெல்லாவற்றையும்விட நம்ம “காதலர்கள்!?” கூட்டத்திற்கும் பஞ்சமில்லை.

மொத்தத்தில் நிரபராதிகளின் ஆதங்கத்தை தனக்குள் கட்டுபடுத்திக்கொண்டும், குற்றவாளிகளின் எண்ணங்களை தனது கட்டுபாட்டிற்குள் வைத்துகொண்டும் கம்பீரமாக காட்சியளிக்கும் ஆங்கிலேயங்காலத்து கட்டிடம் இன்னும் ஒரு வாரத்திற்குபின் தரைமட்டமாகப்போகிறது என்பதுதான் உண்மை.இருப்பினும் இவ்விடம் அரசு பொதுமருத்துவமனையின் விரிவாக்கத்திற்கு பயன்படுத்தபடுகிறது என்பதால் நன்மையே!.

Tuesday, February 10, 2009

என் காதலே.. வா..!


கற்பனையோடும்
நினைவோடும்
நாட்களை நகர்த்துகிறாய்...
கண் இமைகளை துறந்துவிட்டு
கண்ணீரை திறந்துவிடுகிறாய்..
இதை மாற்றிவிடு..
அல்லது ‍‍மாறிவிடு.
எனக்குள் உன்னை நான் சேர்த்தேனோ..
என்னுயிரில் நீயாக‌ சேர்த்தாயோ..
தெரியவில்லை..
ஆனால்..
சேர்ந்ததை பிரிக்க இயலாது..
நீ என்னுள் சேரும்முன்
முரட்டுதனமானவன் நான்..
சேர்ந்தபின்‍ மனிதனாகி
உன்மீது அன்பை முரட்டுதனமாக
வைத்திருப்பவன்...
உனை எப்படி தவிர்ப்பேன்?..
உனது கற்பனையையும், நினைவையும்
சுமக்க நானிருக்கிறேன்..
உன் வாழ்வில் சுமை தெரியாமல்
இமை போல் காத்திருப்பேன்,
உன் உலகில் உயிரோட்டமாக...
நீ வேண்டுமானால் நினைத்துக்கொள்,
என்னிடமிருந்து பிரிந்து விடலாம் என்றும்..
நம் காதலை பிரித்து விடலாம் என்றும்..
நான் நினைக்கிறேன்..
இல்லையில்லை‍,
அழைக்கிறேன்...
பறந்து வா..
'நம்பிக்கையோடு' . _ காதல்
வானில் பறப்போம் ஒன்றாய்..
சுற்றமும் சமூகமும்
சிறகை ஒடித்தால்
வீழ்வோம் ஒன்றாக...

Thursday, February 5, 2009

இதுதான் குடியரசு நாட்டின் இலட்சணமா?...

இலங்கைப்போர், ஈழத்தமிழர்,விடுதலைப் புலிகள்,எங்கு திரும்பினாலும் இதேதான் கேட்கிறது. 20 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் இவ்விடுதலைப்போர் தற்போதுதான் சில மாதங்களாக அனைவராலும் பேசப்படுகிறது.முன்னெல்லாம் இலங்கையில், 'விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்திற்கும் போர்' என்று பத்திரிக்கையில் படிப்பதோடு சரி. யாரும் அதை பொருட்படுத்தாமல் அதை ஒரு செய்தியாக மட்டும் பார்த்துவிட்டு அவரவர் வேலையைச் செய்வர்.


கொஞ்சம் கொஞ்சமாக அதன் உண்மை நிலை தெரியவர, புதிய கட்சிகளும்,எதிர்கட்சிகளும் அதைப்பற்றி பேச்செடுக்க தொடங்குகின்றனர். இதற்கெல்லாம் மூலாதாரமாக மாணவர்கள் போராட்டம். அனைத்துரக மாணவர்கள், வழக்கறிஞர்கள் வரிசையில் தற்போது அனைத்து பிரிவு பொது மக்களும் தமிழகத்தில் போராட்டத்திற்கு தயாராகிவிட்டனர். இலங்கை பிரச்சனைக்கு ஒரு முடிவுகட்ட அனைவரும் விரும்புகின்றனர்.இதன் அஸ்திவாரமாக போராளி "முத்துகுமரனின்" மரணம் அமைந்தது. தனிப்பட்ட நபரின் சொந்தவிருப்பத்திற்காகவும், தேசத்திற்கு கள‌ங்கம் விளைவிக்க‌வும் நடக்கும் போராட்டம் போல, இதற்கு பலத்தபாதுகாப்பு, உயர்நீதிமன்ற தடை உத்தரவு, ஆளும் கட்சியின் அமைதி என பல தடைகள் அமைக்கப்பட்டுள்ள‌ன.


ஒரு இனத்தை சார்ந்த பொது மக்கள் பல்லாயிரக்கணக்கில் அழிக்க படுகிறார்கள். அதற்கான காரணம், யார்மீது நியாயம் போன்ற உண்மைகள் உலகிற்கே தெரியும். ஒரு கருத்தை முன்நிறுத்தி நியாயம் கிடைப்பதற்காக பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினால் அதற்கு வழி காணாமல் அமைதி காக்கிற‌து உலக நாடுகள்.

தனது ஆட்சியின் கீழுள்ள ஒரு மாநிலத்தில் நடக்கும் ஒரு போராட்ட‌த்திற்கான காரணங்கள் என்ன?..அதற்கான தீர்வுகள் யாவை?.. என்று ஆராய்வதற்கு மத்திய மாநில அரசுகள் அக்கறை காட்டுவதில்லை.
இராணுவ ஆட்சியைக்கூட அமல்படுத்தும் அதிகாரமுள்ள‌, ஐந்தாண்டுகளுக்கு யாராலும் அசைக்கமுடியாத "குடியரசுதலைவர்" என்னதான் செய்கிறார்..???

Wednesday, February 4, 2009

விகடனில் எனது பதிவு.!

நான் பதிவுகள் எழுதத் தொடங்கி
மூன்று மாதங்கள்கூட நிறைவடையாத[வருகை பதிவை காண்க..] நிலையில்...

நான் கடைசியாக எழுதிய "சர்க்கஸ் எங்கள் வாழ்வாதாரம்!."_என்ற பதிவிற்கு யூத்புஃல்.விகடன்.காம்._ல் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
விகடன் குழுமத்திற்கு எனது நன்றி!.

Tuesday, February 3, 2009

சர்க்கஸ் எங்கள் வாழ்வாதாரம்!.

சென்னையில் நடக்கும் ‘ஜெமினி சர்க்கஸ்’ பார்ப்பதற்காக நானும் எனது நண்பரும் சென்றிருந்தபோது...

‘சர்க்கஸ்’ என்பது ஒவ்வொருவரின் தனித்திறமையை வெளிப்படுத்தும் ஒரு கூட்டுமுயற்சியாகவே தெரிகிறது. ஒவ்வொருவரும் திறமையுடனும், நேர்த்தியாகவும், அதே நேரத்தில் உயிரை பணயம் வைத்து அவர்கள் செய்யும் ‘வீரசாகசங்கள்’ என்னை திகைக்க வைத்தது. நம்மால் கனவில்கூட நினைத்து பார்க்கமுடியாத நிலையில் அவர்களின் சாகசங்கள் திகழ்கின்றன. அனைவரும் மெருகேறிய உடற்கட்டுடன் காணப்பட்டனர்.

ஒவ்வொருவரும் தனது உடலை ‘பேலன்ஸ்’ செய்யும்விதம் மிகவும் அருமையாக இருந்தது. தனிமனிதன் கற்பனைசெய்யமுடியாத அளவிற்கு அவர்களின் ‘பேலன்ஸ்’ காணப்பட்டது. ‘பேலன்ஸ்’ என்கிற ஒரு வார்த்தையில்தான் அவர்களின் மொத்த சாகசங்களும் அடங்கியுள்ளது.

குறிப்பாக..
1. தனித்தனி சைக்கிள்களில் ஒன்பது பெண்கள், அந்த குறுகிய மேடையில் கைகோர்த்துகொண்டு, முன்சக்கரத்தை தூக்கிக்கொண்டு பின்சக்கரத்தில் மட்டும் சுற்றிவருவது.
2. ஒரு பெண், சைக்கிளின் முன்சக்கரத்தை தூக்கியபடி இரண்டு கைகளையும் அந்தரத்தில் நீட்டியபடி மேடையின் விளிம்பில் அமைக்கப்பட்ட அரை அடி உயரமுள்ள பலகையில் மேடையை சுற்றிவருவது.
3. வட்டவடிவக் கூண்டுக்குள் நான்கு வீரர்கள் ஒரே நேரத்தில் குறுக்கும் நெடுக்குமாக பைக் ஓட்டுவது..

‘சர்க்கஸ்’ கூடாரமைப்பு பணியின்போது பாதுகாப்பு பணிக்காக அவர்களுடன் இருந்தபோது...

ஜெமினி, ஜம்போ, ராயல் மூன்று சர்க்கஸ்சும் ஒரே நிறுவனத்தைச் சார்ந்ததாம். 600க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள். இவர்கள் அனைவரும் பிற நிறுவன ஊழியர்களைப்போல மாதசம்பளம் பெறுகின்றனர். இவர்களுக்கு PF போன்ற அனைத்து பிடித்தங்களும் பிடித்தம் செய்யப்படுகிறது. இவர்களது நிறுவனம் மொத்தநஷ்டத்தில் இயங்கினாலும், இவர்கள் அனைவருக்காகவும் இதை நடத்திவருகிறார் இவர்களது நிறுவனர். ஒரு இடத்தில் குறைந்தது மூன்று மாதகாலம் தங்கவேண்டியிருப்பதால் ஆயிரக்கணக்கான பணவிரயமாகிறது. அதே நேரத்தில் சில கஷ்டங்களையும் அனுபவிக்கின்றனர்.

குறிப்பாக...
1. ஒரு இடத்தில் சர்க்கஸ் முடியும்முன்னரே அடுத்த இடம் தயாராகிவிடுவதால் அந்த இடத்திற்கு செல்லும் பயணநாட்கள்தான் அவர்களின் ஓய்வு நாட்கள்.
2. இடம் மாறிக்கொண்டே இருப்பதால் குடும்பம், குழந்தைகளையும் அழைத்து செல்ல வேண்டியுள்ளது.
3. மாதக்கணக்கில் தங்குவதால் இவர்கள் அனைவருக்கும், உணவுக்காக தனியாக ஒரு மெஸ் அமைப்பது, குடிப்பதற்காக லாரி லாரியாக குடிநீர் வாங்குவது, மற்ற தேவைக்கான தண்ணீருக்காக தனியாக ஒரு ‘போரிங்’ போடுவது.,
4. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக பாதுகாப்பான கூடாரங்கள் அமைப்பது, விலங்குகளுக்கு தேவையான உணவுகள் மற்றும் பாதுகாப்பு கூடாரங்கள் அமைப்பது.

"நாகரிக காலத்தில் ‘சர்க்கஸ்’ நலிவடைந்துவருவதால் உழைப்பிற்கேற்ப ஊதியம் கிடைக்காவிட்டாலும், அனைவரும் ஒரேகுடும்பமாக மனநிம்மதியுடன் வாழ்கிறோம்"என்கிறார்கள்.
அதே நேரத்தில்..
"ஏதாவது ஒரு காரணத்தைக்கூறி இலவசமாக டிக்கெட்டுகளை வாங்கிச் செல்பவர்கள்தான் அதிகம்" என்றும் வருந்துகிறார்கள்.

உங்கள் இயந்திர வாழ்வில் உங்கள் அருகாமையில் என்றாவது ‘சர்க்கஸ்’ துவங்கப்பட்டால்... இவர்களுக்காகவும், உங்கள் குழந்தைகளுக்காகவும் ஒதுக்குங்கள்....
மூன்று மணிநேரம், 30/- ரூபாய்.