இரயிலில் பயணம் செய்பவர்களா நீங்கள்? என்ற என் பதிவிற்கு நல்ல வரவேற்பு கொடுத்த நண்பர்களுக்கு நன்றிகள்.
இனி இரண்டாம் பாகம்..எல்லோருமே இரயில் பயணம் செய்திருப்பீர்கள். பயணங்களில் எல்லோரும் இரயில் பயணங்களையே மிகவும் விரும்புவர். இரயில் பயணம் சுகமான பயணமாக இருந்தாலும் சில நேரங்களில் சிலருக்கு பிரச்சனைகளை தரக்கூடிய பயணமாக முடிகிறது. இரயில் பயணம் ஆரம்பம் முதல் முடியும் வரை பிரச்சனைகள் இருந்தாலும், ( முந்தைய பதிவில் இரயில் ஏறும் வரை உள்ள பிரச்சனைகளை பார்த்தோம்.)
இரயிலில் ஏறிய பிறகு சந்திக்கும் சில பிரச்சனைகளுக்கு எனக்கு தெரிந்த தீர்வுகளை சொல்கிறேன். ( இந்திய இரயில்வேக்கு மட்டும்).
1. தவறவிடும் நிலை :கடைசி நேரத்தில் வரும் பயணிகள் தனக்கு ஒதுக்கப்பட்ட பெட்டிக்கு செல்வதற்குள் இரயில் நகர்ந்து விட ஏறமுடியாமல் தவறவிடுவது.
தீர்வு: கடைசி நிமிடத்தில் வரநேரும் பொழுது ப்ளாட்பாரத்திற்குள் நுழைந்ததும், ப்ளாட்பாரத்தின் முன்னே என்ஜின் அருகே உள்ளே சிக்னலை கவனிக்கவும். சிகப்பு விளக்கு எரிந்தால் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டிக்கு பதட்டமில்லாமல் செல்லுங்கள்.
மஞ்சள் அல்லது பச்சை விளக்கு எரிந்தால் உடனடியாக தங்களுக்கு அருகில் உள்ள பெட்டியில் ஏறிவிடுங்கள். அனைத்து இரயில்களிலும் பெட்டிகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருப்பதால் இரயில் கிளம்பினாலும் பெட்டியின் உள்ளேயே நடந்து தாங்கள் இருக்கைக்கு செல்லமுடியும். அவ்வாறு இல்லாமல் பெட்டி துண்டிக்கபட்டிருந்தாலும் அடுத்த நிறுத்ததில் நீங்கள் தங்கள் பெட்டிக்கு மாறிவிடலாம்.
அடுத்த நிறுத்தம்வரை தங்கள் இருக்கையில் வேறு நபர் அனுமதிக்கப்படுவதில்லை.2. அபாயசங்கலி :ஏதாவது ஒரு காரணத்தால் பிரச்சனை ஏற்பட்டு இரயிலை நிறுத்த வேண்டிய சூழ்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் திணறுவது.
இதற்கு
அபாய சங்கிலியை பயன்படுத்தலாம். உடனே இரயில் நிறுத்தப்படும். இவ்வாறு நிறுத்தும்போது சரியான காரணங்களுக்கு மன்னிக்கவும், தவறான காரணங்களுக்கு தண்டிக்கவும் உட்படுத்தபடுவீர்கள்.
மன்னிக்கப்படும் காரணங்களில் சில :இரயில் இருந்து யாரும் தவறி விழுந்து விடுவது,
உடல் நலகுறைவு ஏற்படும்போது,
தங்களுக்கும் தங்கள் உடமைகளுக்கும் பாதிப்பு ஏற்படும்போது,
நிர்வாக தவறாக கருதப்படும் பெட்டியில் தண்ணீர் இல்லாமலும்,
மின்சார இணைப்பு துண்டிக்கபட்டிருந்தாலும் இதுப்பற்றி முறைப்படி
டிக்கெட் பரிசோதகரிடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காதபோது,
தண்டிக்கப்படும் காரணங்களில் சில :தங்கள் கவனகுறைவால் தனது உடமைகளை இரயில் இருந்து தவறவிடும்போது,
தாமதமாக வந்து தன்னுடன் பயணம் செய்யும் நபர் இரயில் ஏறுவதற்காக பயன்படுத்தும்போது,
விளையாட்டு எண்ணத்துடன் பயன்படுத்தும்போது,
இவ்வகை தண்டனைக்கு ரூ.1000 அபதாரம் அல்லது சிறைதண்டனை விதிக்கப்படும்.3. காவல்துறை :இரயிலில் தங்களுக்கோ தங்கள் உடமைகளுக்கோ பாதிப்பு ஏற்படும் வண்ணம் யாரேனும் நடந்துகொண்டாலோ அல்லது
சந்தேகம் ஏற்பட்டாலோ உடனடியாக தங்கள் பாதுகாப்புக்காக தங்களுடனே பயணம் செய்யும் நடமாடும் காவல்துறை அல்லது டிக்கெட் பரிசோதாகர் மூலம் இரயில் நிலையத்தில் உள்ள காவல்நிலையத்தை தொடர்புகொள்ளவும்.
சிறு தகவல்கள் :(அ) பெட்டியில் ஏறியவுடன் பெட்டியில் ஒட்டப்பட்டிருக்கும் காவல்துறை கட்டுபாட்டு அறை மற்றும் பெண்கள் உதவி மையம் மற்றும் அவசரஉதவி போன்றவற்றின் தொலைபேசி எண்களை தங்கள் செல்போனில் டையல் செய்து வைத்து கொள்ளவும்.
(ஆ) இரயில் ஏறியவுடன் தண்ணீர், விளக்கு, விசிறி போன்றவை சரியாக உள்ளனவா? என பரிசோதித்து கொள்ளவும்.
(இ) தங்கள் இருக்கைக்கு அருகாமையில் உள்ள ஜன்னல் கம்பிகள், கதவுகள் மற்றும் படுக்கை பிடிப்பு கம்பிகள் சரியாக உள்ளதா என சரிபார்த்து கொள்ளவும்.
(ஈ) தங்கள் இருக்கைக்கு கீழ் உள்ள பாதுகாப்பு சங்கலியில் தங்கள் உடமைகளை வைத்து பூட்டிக்கொள்ளவும்.
தொடரும்...
.